Type Here to Get Search Results !

கூடங்குளம் 5, 6வது அணுஉலை இந்தியா-ரஷ்யா ஒப்பந்தம்





மாஸ்கோ: கூடங்குளத்தில் 5வது மற்றும் 6வது அணு உலை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கைெயழுத்தானது. 6 நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு ரஷ்யா  சென்றடைந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்தில் அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று இரண்டாம்  உலகப்போரில் 4,20,000 பொதுமக்கள் மற்றும் 70 ஆயிரம் வீரர்கள் பலியான  நினைவு சின்னமான பிஸ்காரேவ்ஸ்கோவ் என்ற இடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி  செலுத்தினார். பின்னர் சில நிமிடங்கள் அந்த இடத்தில் மவுன அஞ்சலி  செலுத்தினார். அதை தொடர்ந்து  ரஷ்ய அதிபருக்கான கோன்ஸ்டன்டைன் அரண்மனைக்கு  பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை அதிபர் புடின் வரவேற்றார். பின்னர்  நடந்த விருந்தில் பிரதமர் மோடியும், அதிபர் புடினும் பங்கேற்றனர். அப்போது  இருவரும் தனிப்பட்ட முறையில் இருநாட்டு உறவு குறித்தும் ஆலோசனை  நடத்தினார்கள்.

இதில் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான  கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது  அணு உலைக்கான பணிகளை  துரிதப்படுத்துவது குறித்த விவாதம் நடத்தப்பட்டது. அப்போது புதிய அணு உலை அமைக்க இருவரும் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து தலா 1000 மெகாவாட் திறனில் கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட உள்ளன. புடினுடனான  சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், “புடினின் சொந்த ஊருக்கு  நான் சென்றதால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். முதல் முறையாக  மாஸ்கோவுக்கு வெளியே இந்தியா-ரஷ்யா மாநாடு நடந்துள்ளது.

வழக்கமாக சர்வதேச  உறவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆனால் இந்தியா-ரஷ்யா உறவில் எந்த ஏற்ற  இறக்கமும் இல்லை. ஷாங்காய் அமைப்பில் உறுப்பினராக இந்தியாவை சேர்க்க ரஷ்யா  முயற்சி செய்வதற்கு நன்றி தெரிவித்தேன்” என்றார். மேலும், இரு  நாடுகளுக்கிடையே கூடங்குளம் அணுஉலைகள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரயில்வே, கலாச்சாரம்  மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறும்  சர்வதேச பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். அதை  தொடர்ந்து பிரான்ஸ் செல்கிறார்.

ரஷ்ய பத்திரிகையில் மோடி கட்டுரை
ரஷ்ய சுற்றுப்பயணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அங்குள்ள ரோசிஸ்கயா கெசட் என்ற பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். அதில்,”தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் இந்தியாவும், ரஷ்யாவும் இயற்கையாகவே நண்பர்கள். சோதனைக்காலங்களிலும் இருநாடுகள் இணைந்தே இருப்பதுதான் அதில் பெருமை. நல்லதோ, கெட்டதோ நாங்கள் அனைத்து நேரங்களிலும் இணைந்துதான் உள்ளோம். சோவியத் யூனியன் காலத்தில் இருந்தே இந்த நட்பு தொடர்கிறது. இருநாடுகளும் தற்போது தொலைத்தொடர்பு, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* ரஷ்யா-இந்தியா இடையிலான வர்த்தகம் 2014ல் 6500 கோடியாக இருந்தது. தற்போது 5 ஆயிரம் கோடியாக குறைந்து விட்டது.
* ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001ல் உருவாக்கப்பட்டது. அரசியல், பொருளாதாரம், ராணுவ ஒத்துழைப்புக்காக சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கின.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad