Type Here to Get Search Results !

உடலுக்கு பலம் தரும் மங்குஸ்தான்




நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் மங்குஸ்தான் பழத்தின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்ட மங்குஸ்தான் பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதை அடிக்கடி சாப்பிட்டுவர இதயம் பலம் பெறுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

மங்குஸ்தான் பழத்தை பயன்படுத்தி எலும்புகளை பலப்படுத்தும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மங்குஸ்தான் பழம், பால், கற்கண்டு பொடி அல்லது தேன். செய்முறை: காய்ச்சி ஆறவைத்த பாலுடன் கற்கண்டு பொடி அல்லது தேன், மங்குஸ்தான் பழத்தின் சதையை சேர்த்து கலந்து குடித்துவர வைட்டமின் சி, ஏ சத்துகள் கிடைக்கும். இதில், பொட்டாசியம், கால்சியம் அதிகம் இருப்பதால் இதயம், எலும்புகளை பலப்படுத்தும். சுவையான உணவாகவும், உடலுக்கு பலம் கொடுப்பதாகவும் விளங்குகிறது.ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும். குழந்தைகளுக்கு கொடுத்துவர எலும்பு, மூளை வளர்ச்சி அதிகரிக்கும். நரம்புகளுக்கு பலம் கொடுக்கும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவுகிறது.   பெரியவர்கள் சாப்பிட்டுவர புற்று நோய்க்கு காரணமான நச்சுகளை வெளியேற்றும். கோடைகாலத்தில் சோர்வை போக்கும் அற்புதமான பானமாக விளங்குகிறது.


மங்குஸ்தான் பழத்தின் ஓடுகளை பயன்படுத்தி வெள்ளைபோக்கு பிரச்னையை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: மங்குஸ்தான் ஓடு, கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு அல்லது தேன். செய்முறை: மங்குஸ்தான் ஓடு மட்டும் தனியாக எடுத்து நீர்விடாமல் அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில், ஒரு டம்ளர்  நீர்விட்டு, அரை ஸ்பூன் கடுக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். இடுப்பு வலி, அடிவயிற்று வலி குணமாகும். சிறுநீரக அழற்சி உள்ளிட்ட சிறுநீரக கோளாறுகளை போக்குகிறது. சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கிறது. இதையே மேலே பூசும்போது தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. மங்குஸ்தான் ஓடு துவர்ப்பு சுவையை உடையது. இது நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. மங்குஸ்தான் பழம் சாப்பிடுவதற்கு இனிமையானது.

மங்குஸ்தான் பழத்தின் தோலை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, தழும்புகளை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், மங்குஸ்தான் தோல்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன், ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மங்குஸ்தான் தோல் பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை பூசிவர தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, வறட்சி குணமாகும். தேமலுக்கு அற்புத மருந்தாகிறது. அலர்ஜியால் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும். உள் உறுப்புகளுக்கு பலம் கொடுக்கிறது. எளிதில் கிடைக்க கூடிய மங்குஸ்தான் பழத்தை பயன்படுத்தி நலம் பெறலாம். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad