Type Here to Get Search Results !

அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் கமி‌ஷனர் சவால் ‘‘தில்லுமுல்லு நடந்ததாக நிரூபிக்க தயாரா?

ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்ததாக நிரூபிக்க தயாரா என்று அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் கமி‌ஷனர் சவால்.


தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், எனவே, முன்பு இருந்ததுபோல ஓட்டுச்சீட்டு முறையையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், மின்னணு வாக்குப்பதிவில் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என்று தேர்தல் கமி‌ஷன் கூறி வருகிறது.

இதை அனைத்துக் கட்சியினருக்கும் தெளிவுபடுத்தும் விதமாகவும், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி நேற்று டெல்லியில் கூட்டம் நடந்தது.

தமிழக பிரதிநிதிகள்

இந்த கூட்டத்தில்
பா.ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், அங்கீகரிக்கப்பட்ட 48 மாநில கட்சிகளும் பங்கேற்றன. அந்தந்த கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து
 அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தலைமையில் வேணுகோபால் எம்.பி., டெல்லி பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் ஆகியோரும், புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோரும், தி.மு.க. சார்பில் எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோரும், பா.ம.க. சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி வேலு ஆகியோரும் கலந்து கொண்டனர். தே.மு.தி.க. சார்பில் டெல்லி மாநில செயலாளர் வக்கீல் ஜி.எஸ்.மணி பங்கேற்றார்.

அனைத்து தேர்தல்களிலும் அத்தாட்சி ரசீது

கூட்டத்தில், தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதி
பேசியதாவது:–

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் ரசீது வெளிவரும் எந்திரம் பொருத்தினால், நம்பகத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் உறுதிப்படுத்தப்படும் என்பதும், அனைத்து சர்ச்சைகளும் முடிவுக்கு வரும் என்பதும் உண்மைதான். எனவே, எதிர்காலத்தில் அனைத்து பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களிலும் இந்த வசதி கொண்ட எந்திரங்கள் பொருத்தப்படும். அந்த ரசீதுகளும், வாக்கு எண்ணிக்கையின்போது எண்ணப்படும்.

இருப்பினும், இப்போதைய நிலையிலேயே அரசியல் கட்சிகளுக்கு ஒரு சவால் விடுக்க விரும்புகிறோம். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில், வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யப்பட்டது என்று அவர்கள் கருதினாலோ, அல்லது இத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் மீறி, எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று கருதினாலோ, அதை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறோம். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

பிடித்தமான கட்சி கிடையாது

மேலும், தேர்தல் கமி‌ஷனுக்கு பிடித்தமான கட்சி என்று எதுவும் இல்லை. எல்லா கட்சிகளிடம் இருந்தும் நாங்கள் சம தூரத்தில் இருக்கிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்படும் விதம் பற்றி படிப்படியாக விளக்கி, அவற்றின் நம்பகத்தன்மையை அரசியல் கட்சிகளுக்கு உறுதி செய்துள்ளோம். அதன் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிப்பதற்கான யோசனைகளை வரவேற்கிறோம். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் எந்திரங்களில் மோசடி நடந்ததாக கூறப்படுவது தவறான செய்தி.

இவ்வாறு அவர் பேசினார்.

மு.தம்பிதுரை

கூட்டத்தில் கட்சியினர் தங்களது பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தெரிவித்த கருத்து வருமாறு:–

மின்னணு வாக்குப்பதிவு எந்திர பயன்பாட்டில், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்படுவதாக கூறப்பட்டு உள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குகளுடன் அந்த ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும்.

அப்போதுதான் மக்களுக்கு அதில் நம்பிக்கை ஏற்படும். மேலும், தேர்தலில் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மைத்ரேயன்

புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மைத்ரேயன் எம்.பி. பேசும்போது, ‘இந்த காலக்கட்டத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு தேவைதான். எனவே, அதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் மக்களுக்கு அதில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச் சீட்டு முறை மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றம் ஆகும். அதே நேரத்தில் அந்த ஒப்புகைச் சீட்டை கட்சியினரின் கைகளுக்கு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் 2 ஆண்டு ஜெயில் என்பதை வரவேற்கிறோம்’ என்று கூறினார்.

தி.மு.க.

தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி. பேசுகையில், ‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சந்தேகத்துக்கு இடமாக இருக்கக்கூடாது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச் சீட்டை பார்க்க 7 வினாடிகளே ஒதுக்கப்படுகிறது. இதில் வாக்காளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு புகார் தெரிவித்தால் மறு வாக்குக்கு அனுமதிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்படும் விதம் பற்றி அரசியல் கட்சியினருக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்காக 2 மின்னணு எந்திர நிறுவனங்கள் சார்பில் தனித்தனி செயல்விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியச்செய்யும் எந்திரமும் வைக்கப்பட்டு இருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad