Type Here to Get Search Results !

மணத்தக்காளிக் கீரை





வாய்ப்புண்ணா... வயிற்று எரிச்சலா? மணத்தக்காளிக் கீரையுடன் பருப்பு சேர்த்துக் குழைய வேக வைத்து, சூடான சாதத்தில் நெய்விட்டுப் பிசைந்து சாப்பிடக் கொடுப்பார்கள் அந்தக் காலத்தில். இரண்டே நாட்களில் வாய்ப்புண்ணும் வயிற்றுப் புண்ணும் இருந்த இடம் தெரியாமல் மாயமாகும். இன்று வாரக்கணக்கில், மாதக் கணக்கில் பி.காம்ப்ளக்ஸ் மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் கட்டுப்படுவதில்லை வாய்ப்புண்கள். மணத்தக்காளியை மறந்ததன் விளைவு!
மணத்தக்காளியை கீரைகளில் மாணிக்கம் என்றே சொல்லலாம்.  சுவையில் மட்டுமின்றி, சத்துகளிலும் அதை மிஞ்ச வேறில்லை. அத்தகைய மணத்தக்காளியின் மகிமைகளைப் பற்றிப் பேசுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்யஸ்ரீ. மணத்தக்காளியை வைத்து சுவையான, ஆரோக்கியமான 3 உணவுகளையும் செய்து காட்டியிருக்கிறார்.

"பிளாக் நைட் ஷேடு, ஒண்டர் பெர்ரி, சன் பெர்ரி என ஏராளமான சிறப்புப் பெயர்களுடன் அழைக்கப்படுகிற ஒரே கீரை மணத்தக்காளி. இதன் கீரை மட்டுமல்ல... மணத்தக்காளிக் காயும் பழமும்கூட மருத்துவக்குணம் வாய்ந்தவை. மணத்தக்காளி் காயை அப்படியே பச்சையாகவோ, காய வைத்து வற்றலாகவோ செய்து சமையலுக்குப் பயன்படுத்தலாம். காய் பழுத்தால் கருஞ்சிவப்பு நிறத்தில் குட்டிக்குட்டியாக கொத்துக் கொத்தாகக் கண்களைக் கவரும். லேசான இனிப்புச் சுவை கொண்ட அதை அப்படியே மென்று தின்னலாம். மணத்தக்காளி செடியை வளர்ப்பது ரொம்பவும் சுலபம்.  அதற்கு பெரிய மண் வளமோ, தண்ணீரோ தேவையில்லாமல் எளிதில் வளரக்கூடியது. மணத்தக்காளிக்காயும், பழமும் வருடத்தின் எல்லா நாட்களிலும் கிடைப்பதில்லை என்பதால் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்வது நல்லது.

மணத்தக்காளியின் மருத்துவப்பயன்கள் :

மணத்தக்காளிக் கீரை தசைகளுக்கு வலுவளித்து, பார்வைத் திறனை மேம்படுத்தச் செய்கிறது.

தலைவலியைப் போக்கி, சருமத் தொற்றுகளைப் போக்கக்கூடியது இந்தக் கீரை.

மணத்தக்காளி என்றாலே வாய்ப் புண்ணுக்கும் வயிற்றுப் புண்ணுக்கும் மருந்து என்பதை பலரும் அறிவார்கள்.  மணத்தக்காளிக் கீரையின் சாறு கல்லீரல் மற்றும் கணையத் தொற்றுகளுக்கு அருமையான மருந்தாகிறது. மட்டுமல்ல... அந்தச் சாறு மூல நோய் மற்றும் சிறுநீர்க் கடுப்பையும் குணப்படுத்தும் குணம் கொண்டது. மலச்சிக்கலை விரட்டக்கூடியது.

மணத்தக்காளிக் கீரை, தண்டு மற்றும் வேர் சேர்த்துக் கொதிக்க வைத்து வற்றச் செய்த கஷாயத்தை புற்றுநோய் காயங்களும், இதர தீராத காயங்களும் ஆறுவதற்குக் கொடுக்கிறார்கள்.

மணத்தக்காளிக் கீரையை விழுதாக அரைத்து மூட்டு வலிக்குப் பற்றுப் போடுகிற வைத்திய முறையும் நம் மக்களிடையே இருக்கிறது.

மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து, உடல் முழுக்கத் தடவி, 3 மணி நேரம் ஊறவிட்டுக் குளிப்பதன் மூலம் உடல் வலி பறந்து போகும் என்கிற நம்பிக்கையும் நிலவுகிறது.

கர்ப்பிணிகள் இந்தக் கீரையை அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களது செரிமானம் மேம்படுவதோடு, வாந்தி உணர்வும் கட்டுப்படுகிறது. இந்தக் கீரையில் அதிக அளவில் வைட்டமின்களும் தாதுச் சத்துகளும் உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு போதுமான ஊட்டத்தைக் கொடுக்கக்கூடியது.

இந்தக் கீரையின் சாறு வாயுத்தொல்லையை விரட்டி, வயிற்றுப்போக்கையும் குணப்படுத்துகிறது.

வயிற்று எரிச்சல், உப்புசம், புண், அஜீரணம் என வயிறு தொடர்பான எல்லா பிரச்னைகளுக்கும் இந்தக்கீரையைப் பரிந்துரைக்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

மணத்தக்காளிக் கீரை மற்றும் காய் சேர்த்து வைத்த சூப், சளி, இருமலையும் விரட்டுகிறது.

கீரையின் விழுதை தீக்காயங்களின் மேல் தடவிட, காயங்கள் சீக்கிரம் ஆறும்.

களைப்பே தெரியாமல் ஒரு மனிதரை ஓடி ஓடி உழைக்கச் செய்கிற அளவுக்கு ஆற்றலைக் கொடுக்கக்கூடிய வல்லமை இந்தக் கீரைக்கு உண்டு. அதிகம் உழைக்க வேண்டியவர்கள் மணத்தக்காளியை மறக்க வேண்டாம்.

சிலருக்கு வாயுத் தொல்லையால் வயிற்றைப் பிசைகிற மாதிரியான வலி வரும். அவர்கள் மணத்தக்காளிக் கீரை மற்றும் பழம் சேர்த்த சூப்பை குடித்தால் உடனடி நிவாரணம் பெறுவார்கள். குழந்தைகளுக்கு இதே சூப்பில் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொடுக்கலாம். சுவையும் கூடும். வாய்ப்புண்ணும் தவிர்க்கப்படும்.


மிக்ஸ்!

மணத்தக்காளிக் கீரையை சாறு எடுத்து அப்படியே குடிக்க முடியாதவர்கள், அதை இளநீர், மோர், தேங்காய்ப்பால் ஆகியவற்றுடன் கலந்து குடிக்கலாம்.

மணத்தக்காளி காய் கிடைக்கிற சீசனில்  நிறைய வாங்கி, வெயிலில் காய வைத்து வற்றலாக்கி சேமித்து வைக்கலாம். காய்கறி இல்லாத நேரங்களில் சட்டென கை கொடுக்கும் இந்த வற்றல். இதைக் கொண்டு வற்றல்  குழம்பு செய்யலாம். வற்றலை வெறுமனே நெய்யில் வறுத்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட வயிற்றுக் கோளாறுகள் ஓடிப் போகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad