Type Here to Get Search Results !

தன் வீட்டு கிரகபிரவேசத்தில் பங்கேற்காத `சின்சியர்' தோனி!

ஐ.பி.எல் தொடரில் புனே அணிக்காக விளையாடிவரும் தோனி, ராஞ்சி நகரில் தான் கட்டியுள்ள புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவில் பங்கேற்கவில்லை.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துகொண்டிருந்தபோதுதான் தோனி- சாக்‌ஷி தம்பதிக்கு ஷிவா பிறந்தாள். தோனி நினைத்திருந்தால், ஒருநாள் பயணத்தில் வந்து குழந்தையைப் பார்த்துவிட்டுப் போயிருக்கலாம். `முதலில் தேசம்தான்' எனக் கூறிய தோனி, உலகக்கோப்பைத் தொடர் முடிந்த பிறகே குழந்தையைப் பார்த்தார். தோனியின் சின்சியாரிட்டி, கிரிக்கெட் உலகில் வெகு பிரபலம். ஓய்வுக்குத் தயாராகிவரும் தோனியிடம் அந்த சின்சியாரிட்டியை இப்போதும் பார்க்க முடிகிறது என்பதுதான் ஆச்சர்யம்.


புதுமனைப் புகு விழாவில் பங்கேற்காத தோனி

ஐ.பி.எல் தொடரில் தற்போது புனே அணிக்காக விளையாடிவருகிறார் தோனி. கேப்டனாக இருந்த தோனியை நீக்கி, புனே அணி நிர்வாகம் அவமதித்தது. புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஸ் கோயங்கா, தோனியை அவமதிக்கும் வகையில் சில ட்வீட்களைப் பதிவிட்டார். ஹர்ஸ் கோயங்காவுக்கு, தோனியின் மனைவி சாக்‌ஷி ட்வீட் வழியே பதிலடி கொடுத்தார். சாக்‌ஷி செய்திருந்த ட்வீட்டில் கர்மாவைச் சுட்டிக்காட்டி, 'காலம், உங்களையெல்லாம்விட சக்தி வாய்ந்தது' எனக் குறிப்பிட்டிருந்தார். சாக்‌ஷி ட்வீட் செய்த அடுத்த நாளே பிசிசிஐ, சென்னை அணிக்கு அடுத்த ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க அழைப்புவிடுத்தது.

இதற்கிடையே இன்னொரு விஷயமும் நடந்துள்ளது. தோனி குடும்பத்தினர், ராஞ்சி நகரில் உள்ள மூன்று அடுக்குமாடி வீட்டில் வசித்துவந்தனர்.  பண்ணையுடன்கூடிய வீடு கட்டிக் குடியேற வேண்டும் என்பது தோனியின் நீண்டகால ஆசை. ராஞ்சியில் அப்படி ஒரு வீட்டை தோனி கட்டிவந்தார்.  கட்டடப் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. பண்ணை வீட்டின் பெயர் 'கைலாஷ்பதி'.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி தோனியின் 34-வது பிறந்த தினத்தில், பண்ணை வீட்டில் மரம் நடுவது போன்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் தோனி வெளியிட்டிருந்தார். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ராஞ்சியின் ரிங் ரோடு பகுதியில் ஏழு ஏக்கர் பரப்பளவுகொண்ட தோட்டத்துடன்கூடிய வீடு, கட்டி எழுப்பப்பட்டுள்ளது. நீச்சல்குளம், நவீன ஜிம், இண்டோர் ஸ்டேடியம் உள்ளிட்டவையும் வீட்டுக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன. வீட்டின் புதுமனை புகுவிழா, கடந்த அக்‌ஷயதிரியை தினத்தில் நடந்தது.

அந்தச் சமயத்தில் புனே அணி, ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதவேண்டியது இருந்ததால், தோனி புதுமனை புகுவிழாவில் பங்கேற்கவில்லை. தோனியின் தந்தை பான் சிங், தாயார் தேவகி, மனைவி சாக்‌ஷி மற்றும் அவரது மகள் ஷிவா ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர். புனே அணியின் நலனைக் கருத்தில்கொண்டு, தோனியால் தனது சொந்த வீட்டின் புதுமனை புகுவிழாவில் பங்கேற்க முடியவில்லை. நடப்பு  ஐ.பி.எல் தொடர் முடிந்ததும், புதிய பண்ணை வீட்டில் குடும்பத்துடன் குடியேற உள்ளார் தோனி.

இங்கு இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். தோனியைத் தொடர்ந்து அவமதித்து வந்த புனே அணி, அடுத்த ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கப்போவதில்லை. இதுகுறித்து பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோக்ரி கூறுகையில், ''தற்போதைய நிலையில் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை. எனவே, புனே, குஜராத் அணிகள் கலைக்கப்பட்டு, வீரர்கள் மீண்டும் ஏலம் விடப்படுவார்கள்'' என அறிவித்துள்ளார். புனே அணி உரிமையாளர்கள் அவமதித்த நிலையிலும் 'புனே ' என்கிற அணி இல்லாத நிலையிலும்  தோனி தனது கடமையில் இருந்து தவறவில்லை' என அவரது ரசிகர்கள் புகழ்பாடுகின்றனர்.

தோனியின் தந்தை பான் சிங், ராஞ்சியில் உள்ள 'மெகான்' நிறுவனத்தில் பம்ப் ஆபரேட்டராகப் பணிபுரிந்தவர். தோனி கிரிக்கெட்டில் சாதித்த பிறகே குடும்பம் தலையெடுக்கத் தொடங்கியது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் ராஞ்சியில் ஹார்மு என்கிற இடத்தில் உள்ள மூன்று அடுக்குமாடி வீட்டில் தோனி வசித்துவந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad