Type Here to Get Search Results !

ஆயுர்வேதத்தில், குளுக்கோஸுக்கு நிகரானது 'பானகம்'..!


பானகம்... வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம். இதைப் பானகம், பானகரம், பானக்கரம் என்றும் சொல்வார்கள். கிராமப்புறங்களில் இது பிரபலம். குறிப்பாக, கோயில் விழாக்களில் பால் குடம் சுமப்பது, காவடி எடுப்பது போன்ற கடுமையான நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு மட்டுமன்றி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இது ஓர் உற்சாகப் பானம் என்றால் மிகையாகாது.

பானகம்

இனிப்பும், புளிப்பும் கலந்த இந்தப் பானகம், கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் உடலின் மொத்தக் களைப்பையும் நீக்கி, அவர்களுக்குப் புதுத்தெம்பை ஏற்படுத்தி, அவர்களது பக்தி பரவசத்துக்குத் துணை புரியும். இதனால்தானோ என்னவோ, இது பெரும்பாலும் திருவிழாக்காலங்களில் உட்கொள்ளும் ஒரு பானமாகவே மாறி விட்டது. மற்ற நாட்களில் நாம் இதை மறந்து விடுகிறோம்.

பானகம் என்பது வெறும் ஆற்றல் தரும் பானமாக மட்டுமல்லாமல், ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, இது ஆயுர்வேதத்தில் குளுக்கோஸுக்கு நிகரான ஒன்று என்பதோடு, ஏராளமான ஆரோக்கியப் பலன்களையும் தரக்கூடியது .

பானகம் என்பது இனிப்பு, புளிப்புச் சுவை மிகுந்தும், காரம் குறைவாகவும் சேர்க்கப்பட்ட ஒரு பானம். ஆயுர்வேதத்தில் இது, 'பானக கல்பனா' என்று சொல்லப்படுகிறது. 'கல்பனா' என்றால் தயார் செய்தல் என்று பொருள். ஆயுர்வேதத்தில் உடனடி நிவாரணம் தரும் மருந்து தயாரிப்பு முறைகளில் இதுவும் ஒன்று. அதாவது, சில மருந்துகளைச் சாப்பிட்டால் முதலில் ஜீரணமாகும். அதன்பிறகு ரத்தத்தில் கலந்து மெட்டபாலிசத்தை அதிகரித்துப் பின், அதன் வேலையை மெதுவாகத் தொடங்கும். இதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பானகம் என்பது சாப்பிட்ட உடனே விரைவாக அதன் பணியைச் செய்யும் மருந்தாகும். இதனால்தான் இதைக் குடித்ததும் உடனடி ஆற்றல் கிடைக்கிறது. எனவே, இதை மருத்துவத்தில் உள்ள குளுக்கோஸுக்கு முன்னோடியாகச் சொல்லாம்.

இதன் மகத்துவம் தெரிந்தால், நம் முன்னோர் திருவிழாக்காலங்களில் பக்தி பரவசநிலையில் செய்யும் நேர்த்திக்கடன் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு ஏற்படும் டிஹைட்ரேஷனுக்குத் தீர்வாக இந்தப் பானகம் வழங்குவது வழக்கத்தில் உள்ளது. ஆயுர்வேதத்தில் எலுமிச்சை, புளி, அன்னாசி, மாதுளை பானகம் எனப் பல வகைப் பானகங்கள் உள்ளன. ஆனால், எலுமிச்சை, புளி கலந்த பானகம்தான் மக்களிடையே பிரபலமாக உள்ளது.

பொதுவாக, பானகம் தயாரிப்பில் பழச்சாறுதான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், புளி, பேரீச்சம்பழம் போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும். இதை மிதமான சூட்டில் சூடுபடுத்தியும் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை பானகம்

ஜம்பீர பானகம்:

தேவையான பொருள்கள்:

எலுமிச்சைச் சாறு - ஒரு பழம்
வெல்லம்- ஒரு பங்கு
தண்ணீர் - 16 மடங்கு
ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை
சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

வெல்லத்தைத் தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். வெல்லம் முழுமையாகக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகலாம்.

மருத்துவப் பயன்கள்:
பசியின்மை, உடல் சோர்வை போக்கும். தொண்டைக்கு இதமளித்து, தொண்டை கரகரப்பை சரியாக்கும்.

ஜிஞ்சா பானகம்ஜிஞ்சா பானகம்

தேவையான பொருள்கள்
புளி - 100 கிராம்
தண்ணீர் - 400 மி.லி
வெல்லம் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
சுக்குப்பொடி - சிறிதளவு
மிளகுத்தூள் - சிறிதளவு

செய்முறை

முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்த புளியுடன் வெல்லம் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதனுடன் உப்பு, சுக்கு, மிளகு கலந்து பருகலாம். பானகம் செய்யப் பயன்படுத்தப்படும் தண்ணீர் மண்பானைத் தண்ணீராக இருந்தால் நல்லது.

பலன்கள்

ரத்தசோகை நீங்கும்; பசியை உண்டாக்கும்; குமட்டல் பிரச்னை போக்கும், ஜீரணத்தை அதிகரிக்கும். நாவறட்சியைப் போக்கும். கோடை வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும் களைப்பையும் நீக்கும். இதே முறையில் புளிக்குப் பதிலாகச் சுத்தமான சந்தனத்தையும் பயன்படுத்திப் பானகம் தயாரிக்கலாம். இவை வெயில் காலங்களில் ஏற்படும் வியர்க்குரு, உடல் சூடு தணிக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad