Type Here to Get Search Results !

சிறுதானியங்கள்... நாட்டுக்கோழி... பால்...

அழிக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...
அதிகரிக்கும் நோய்கள்...

பகீர் ஃபுட் பாலிட்டிக்ஸ்

மிகப்பெரிய மக்கள் செல்வம் கொண்ட இந்தியாவை மருந்து வர்த்தகத்துக்கான பிரம்மாண்ட சந்தையாகவே பார்க்கின்றன பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள். இந்த வியாபார சூழ்ச்சி காரணமாகவே ஆரோக்கியம் மிகுந்த நம் பாரம்பரிய உணவுகளை அழித்து, வெளிநாட்டு உணவுகளைத் திணித்து, நம்மை நோயாளிகளாகவும் ஆக்கி, அதற்கான மருந்துகளையும் அவர்களே விற்று பகடையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த உணவு அரசியல் பற்றி புரிந்துகொண்டு விழித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.நிபுணர்களுடன் பேசுவோம்....

‘‘இந்தியாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்தன. இப்போது சுமார் 153 வகைகள் மட்டுமே உள்ளன. நீளமாக வளரக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவ குணம் கொண்டவை. மாட்டுக்கு சத்தான வைக்கோல், மண்ணுக்குத் தழைச்சத்து, விவசாயிக்கு ஆரோக்கியமான நெல் என பன்னோக்கில் பயன் தரக்கூடிய வகையிலேயே நம்முடைய நெல் ரகங்கள் இருந்தன.

ஆனால், குறுகிய காலத்தில் பலன் தருவதாக சொல்லப்பட்ட வெளிநாட்டு குட்டை ரக நெற்பயிர்கள் நோயை மட்டுமே நமக்குத் தந்துகொண்டிருக்கின்றன. விவசாயத்தைப் பாதுகாப்பதாக சொல்லப்பட்ட ரசாயன உரங்களும்,  பூச்சிக்கொல்லிகளும் அந்த விபரீதத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டன. இவையெல்லாவற்றையும் விட அபாயகரமான விஷயம், நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுப்பொருட்கள்...’’ என்கிறார் உணவியல் செயற்பாட்டாளரான அனந்து.

‘‘நெல் ரகங்கள் அழிக்கப்பட்டு, வெளிநாட்டு நெல் ரகம் வந்தது ஒரு சின்ன உதாரணம்தான். இதுபோல் எண்ணற்ற விஷயங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிறுதானியங்களைப் பற்றி இன்றுள்ள பலருக்குத்  தெரியாது.

அவை அழிக்கப்பட்டுவிட்டன. கோழிக்கறி சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் பிராய்லர் கோழியைத்தான் நீங்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும். காரணம், நாட்டுக்கோழிகள் அழிக்கப்பட்டுவிட்டன. பால் வாங்க வேண்டுமென்றால் பாக்கெட் பால்தான்.

இயற்கை அந்தந்தப் பகுதியின் தட்பவெப்ப நிலை், சூழலுக்கேற்பவே காய்கறி பழங்கள் உள்பட எல்லா உணவுகளையும் அளிக்கிறது. அதனால் நம் நாட்டில் இயற்கையாக விளையும், கிடைக்கும் உணவுகளை உண்ணும்போது மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும்.

ஆனால், இன்று நடப்பது என்ன?வெப்ப மண்டல நாடான நம் நாட்டுக்கு ஏற்ற தர்பூசணி, வெள்ளரி, பூசணி, சுரைக்காய், முலாம்பழம், பீர்க்கங்காய், புடலங்காய் போன்றவற்றை நாம் மதிப்பதே இல்லை. Hybrid என்ற பெயரில் புதிதுபுதிதாக காய்கறிகளையும், பழங்களையுமே தேடி உண்டு வருகிறோம்.

‘ஹைபிரிட் தக்காளி’யை பாருங்கள்... கருணைக்கிழங்கைக்கூட நசுக்கிவிடலாம். ஆனால், ஹைபிரிட் தக்காளியை நசுக்க முடிவதில்லை. ரப்பர் பந்துபோல கிண்ணென்று இருக்கிறது. இதுபோலவே மரபணு மாற்ற காய்கறிகள், விதையற்ற பழங்கள் போன்றவை விற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சென்னையில் கிடைக்கும் ‘பி.டி’ எனப்படும் மஞ்சள் நிற வாழைப்பழங்களை இதற்கு ஏற்பட்டுள்ள உச்சபட்ச அச்சுறுத்தலாகச் சொல்லலாம்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட இவை பார்ப்பதற்கு பச்சை வாழைப்பழம் போலவே நீண்டு, மஞ்சள் நிறத்துடன் இருக்கும். சென்னைவாசிகளில் பெரும்பாலானோருக்கு இருக்கும் தொண்டை அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, சிறுநீரகக்கற்கள், தலைவலி, ஃபுட் பாய்சன் போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக இருப்பவை இந்த ஹைபிரிட் வாழைப்பழங்கள்தான்.

வாழைப்பழம் இரண்டொரு நாட்களில் அழுகிவிடும். ஆனால், இந்த பி.டி வாழைப்பழம் ஒரு வாரம் ஆனாலும் அப்படியே இருக்கிறது. பூச்சிகளைக் கொல்லும் மருந்துகளை வாழை மரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றிகரமாகக் கண்டுபிடித்ததே இந்த பி.டி வாழை என்பதைப் புரிந்துகொண்டால் இந்த விஷயத்தின் தீவிரம் புரியும்’’ என்பவரிடம் சமீபகாலமாக பாலில் A1, A2 என்று சொல்கிறார்களே அதைப்பற்றி கேட்டோம்.

‘‘உலகமே A2 புரதப் பாலைக் கொடுக்கும் நாட்டு மாடுகள் பக்கம் திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ள இந்த நிலையில், A1, A2 பால் என்றால் என்னவென்று கேட்கும் நிலையிலேயே நாம் இருக்கிறோம். நாட்டுப்பாலில் ஏ2 புரதம் என்ற மனிதனுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மூலக்கூறு இருக்கிறது. இதுதவிர, நாட்டு மாடுகளில் வேர்வை நாளமும், திமிலும் இருப்பதால் பசுவின் வெப்பம் இவற்றின் வழியாகவே வெளியேறுகிறது. அதனால் நாட்டு மாடுகள் கொடுக்கும் A2 பால் ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்கிறது.


இதன் சாணம் மற்றும் சிறுநீர் நிலத்திற்கு ஊட்டம் பெற்ற உரமாகவும், வீட்டிற்கு கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. சாணத்தின் மூலம் கிடைக்கும் உர அளவை டி.ஏ.பி. மற்றும் யூரியாவினால் கூட தர முடியாது என்பதே உண்மை. நாட்டு மாடுகள் இருந்தவரை நாம் பொருளாதாரத்தில் தற்சார்பு பெற்றிருந்தோம். ஆனால், விவசாயிகள் உழவுக்கு டிராக்டர் இருக்கிறது, எருவுக்கு பதில் உரம் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது குறைவான பால் கொடுக்கும், நாட்டு மாடுகள் எதற்கு? அறிவியல் வளர வளர நாமும் வளர வேண்டாமா? குடம் குடமாய் பாலை கொட்டும் கலப்பின பசுவே போதுமானது என்று வெண்மைப் புரட்சிக்கும், பசுமைப் புரட்சிக்கும் பலியாகி, நாம் கலப்பின பசு கொடுக்கும் A1 புரதப்பாலை அருந்தி வருகிறோம். இந்த கலப்பின பசுவும் அதன் பாலும் நம் உடலுக்கு நல்லதா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் ஜெர்சி கலப்பின பசுக்களுக்கு நமது சீதோஷ்ணம் ஒத்துக்கொள்வதில்லை. அதனால் அவற்றிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை. அதற்கு அடிக்கடி மருந்துகள், ஊசிகள் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஜெர்சி பசுக்கள், காளைகளுடன் இயற்கையான முறையில் இணை சேர்ந்து, இனவிருத்தி செய்வதில்லை. செயற்கையான கருவூட்டல் மூலமே இனவிருத்தி நடைபெறுகிறது.

இதனால் இதன் பாலும் நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்த ஜெர்சி மாடுகளின் பாலில்தான்  நோய்களை உருவாக்கக்கூடிய மூலக்கூறான ஏ1 புரதம்  இருக்கிறது. இந்த பாலைத் தொடர்ந்து அருந்தும்போது சர்க்கரை நோய், ஹார்மோன் சமநிலை பாதிப்படைதல் போன்றவை ஏற்படக்கூடும்.

கலப்பின மாடுகளுக்கு பெண்களின் பெண்மையை தூண்டக் கூடிய ஹார்மோன் அதிகமாக இருப்பதால், பால் அதிகமாக சுரக்கிறது. இந்த ஹார்மோன் கலப்பின பசுக்களின் மரபணுவிலேயே இருப்பதால், கலப்பின பசுவின் பாலை குடிக்கும் ஆண்களுக்கு, பெண்ணுக்குரிய உணர்வுகள் தூண்டப்படுவதோடு, மந்த செயல்பாடும், மந்தமான பாலியல் உணர்வுகளும் ஏற்படுகிறது. இவ்வாறான ஒழுங்கற்ற ஹார்மோன் சுரப்பால் ஆண்களில் ஏழில் ஒருவருக்கு மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.


கலப்பின மாடுகளின் பாலை அருந்தும் பெண்களுக்கு, பெண்மைக்குரிய ஹார்மோன் அதிகமாக சுரப்பதால், உணர்ச்சிப் பெருக்கு, மாதவிடாய் பிரச்னைகள் போன்றவை ஏற்படுகின்றன. தற்போது, விபரம் தெரியாத 10 (அ) 11 வயதிலேயே பெண் பிள்ளைகள் பருவமடைந்து விடுகின்றனர். சிறு வயதிலேயே பெண்களுக்கு ஆரம்பமாகும் மாத விலக்கு, நடுத்தர வயதிலேயே நின்றும் விடுகிறது. அதேபோல் தாய்மார்களுக்குக் குறைந்த நாட்களிலேயே பால்சுரப்பும் நின்று விடுகிறது.

‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு இன்சுலின் கண்டிப்பாக போட்டே ஆக வேண்டும்’ என்று ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் சார்ந்த பேராசிரியர் பாப் எலியாட் வலியுறுத்துகிறார்.

இந்நோய் ஏன் ஏற்படுகிறது என்று நியூசிலாந்தின் ‘சமோன்’ மலைவாழ் மக்களிடையே ஆராய்ச்சி செய்தபோது, அவர்கள் பால் அதிகமாக குடிப்பதாகவும், அந்த பாலில் A1 புரதம் இருந்ததால் அந்தக் குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதாகவும், A2 புரதப்பாலை அருந்திய குழந்தைகளுக்கு இந்த சிக்கல் வருவதில்லை என்றும் கண்டுபிடித்தார்.

கலப்பின பசுக்களின் பால் உடல் நலனுக்குக் கேடானது மட்டுமல்ல மன நலனுக்கும் மிகக் கேடானது. இந்த கலப்பின பசுக்களின் பால், மெதுவாக நம் உடலினுள் நஞ்சை ஏற்றுகிறது. அதனால்தான் மருத்துவர்கள் சமீப காலமாக பாலை சாப்பிடாதீர்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் நிலைக்கு ஆளாகிவிட்டோம்’’ என்கிறார்.இனியாவது விழித்துக் கொள்வோமா?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad