Type Here to Get Search Results !

பெரிய சைஸ் டிஸ்ப்ளே மொபைல்கள்தான் உங்கள் சாய்ஸா? இதைப் படிச்சுட்டு முடிவெடுங்க!

ஒரு புதிய மொபைல் போன் வாங்க வேண்டுமென்றால் நீங்கள் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்துவீர்கள்? போனின் விலை, ரேம், இன்டர்னல் மெமரி, பேட்டரி கெப்பாசிட்டி ஆகியவற்றிற்கு அடுத்து முக்கியமாகப் பார்ப்பது போனின் டிஸ்ப்ளேயின் அளவுதான். யூ-ட்யூப், அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்ஸ்டார் என மல்ட்டிமீடியா ஸ்ட்ரீமிங் சேவைகளின் எண்ணிக்கையும், பயன்பாடும் அதிகமாக அதிகமாக டிஸ்ப்ளே சைஸ் பார்த்து வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மொபைல் டிஸ்ப்ளே


இப்படி கேமிங், மல்ட்டிமீடியா போன்றவற்றிற்காக மட்டும் பெரிய சைஸ் டிஸ்ப்ளே கொண்ட மொபைல்களை வாங்கிவிட்டு பின்னர் அதனைக் கையாள கஷ்டப்படுபவர்களும் உண்டு. நீங்கள் பெரிய அளவு கொண்ட மொபைல்களை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

   எந்த சைஸ் டிஸ்ப்ளே கெத்து?

டச் ஸ்க்ரீன் மொபைல்களின் வரவிற்குப் பின்னர், போனின் ஹீரோவே அதன் டிஸ்ப்ளேதான். முதல் சிறிய அளவில் இருந்த டிஸ்ப்ளேக்கள் இன்று அளவிலும், தரத்திலும் நிறைய முன்னேறிவிட்டன. ஒரு ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே என்பது 4.7 இன்ச் முதல் 5.5 இன்ச் என்ற அளவிற்குள்தான் இருக்கின்றன. இதற்கு மேல் சென்றால் அவை பேப்லட்கள் என அழைக்கப்படும். மொபைல் டிஸ்ப்ளேக்களில் இன்றளவும் அதிக லைக்ஸ் வாங்குவது 4.7 இன்ச் டிஸ்ப்ளேக்கள்தான். அதனால்தான் பட்ஜெட் போன்களில் இருந்து ஐபோன் 7 வரைக்கும் இதே அளவில் வருகின்றன. கையாள்வதற்கு எளிதாகவும், மல்ட்டி மீடியா அப்ளிகேஷன்களுக்கு சரியாகவும் இருப்பதுதான் இதன் ஹிட் ஃபார்முலா. இதற்கடுத்தது 5 இன்ச் டிஸ்ப்ளே மொபைல்கள். மொபைல் போனின் டிஸ்ப்ளே, மொபைலின் மற்ற அம்சங்களும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மொபைல் டிஸ்ப்ளே

ஸ்மார்ட்போன்களில் சமீபத்திய ட்ரெண்ட் எட்ஜ்லெஸ் டிஸ்ப்ளே எனப்படும் விளிம்புகள் குறைவான டிஸ்ப்ளேதான். சாம்சங் S8 மற்றும் LG G6 போன்ற மொபைல்களில் இந்த மாதிரியான டிஸ்ப்ளேக்களை நீங்கள் காணலாம். அதாவது மொபைலின் மேற்பகுதியில் இருக்கும் விளிம்புகள் குறைவாகவும், டிஸ்ப்ளேவின் அளவு அதிகமாகவும் இருக்கும். இது போனின் அளவை இன்னும் பெரிதாகக் காட்டும். இப்படி போனின் முன்பக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இரண்டு போன்களிலுமே ஹோம் பட்டன்கள் முன்பக்கத்தில் இல்லை. ஃபிங்கர் பிரின்ட் சென்சார் ஆனது பின்பக்கம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது பயன்படுத்துவதற்கு கொஞ்சம் சிக்கலாக இருக்கும். இப்படி பெரிய டிஸ்ப்ளே கொண்ட மொபைல் போன்களில் சாதகங்களும், சிக்கல்களும் சேர்ந்தே இருக்கும்.

   என்னென்ன ப்ளஸ் பாயின்ட்கள்?  

1. நிச்சயமாக மல்ட்டிமீடியா அப்ளிகேஷன்கள்தான் முதல் சாதகமான அம்சம். பெரிய திரை என்பதால் போட்டோக்கள், வீடியோக்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வீடியோக்கள், வீடியோ சாட் போன்ற அனைத்திற்கும் போன் நன்றாக இருக்கும்.

2. பெரிய சைஸ் டிஸ்ப்ளேக்கள் நிச்சயம் நல்ல கேமிங் அனுபவத்திற்கு கைகொடுக்கும்.  தரமான மற்றும் துல்லியமான டிஸ்ப்ளேக்கள் என்றால் கிராபிக்ஸ் ஐகான்கள், கேம் கன்ட்ரோல்கள் ஆகியவற்றைத் தெளிவாகப் பார்ப்பதும், விளையாடுவதும் எளிது.
3. பிரவுசிங்கோ,ஃபேஸ்புக்கோ... எதுவாக இருந்தாலும் சரி. அதிகமான எழுத்துக்கள் அல்லது தகவல்களை உங்களால் பார்க்கவும், படிக்கவும் முடியும். மின்னூல்களைப் படிப்பவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

4. ஆண்ட்ராய்டு நௌகட்டில் கிடைக்கும் ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் ஆப்ஷன் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு ஆப்ஸ்களை, திரையின் இருபுறங்களில் பார்க்கவும், பயன்படுத்தவும் முடியும். இந்த ஆப்ஷனுக்கு பெரிய சைஸ் டிஸ்ப்ளேக்கள் நல்ல சாய்ஸ்.

5. போட்டோ எடிட்டிங், வீடியோ எடிட்டிங் போன்ற டூல்ஸ்களை போனில் பயன்படுத்துபவராக இருந்தால், அவற்றைக் கையாள எளிதாக இருக்கும்.

   கவனிக்க வேண்டிய விஷயங்கள்?  

1. மேலே பார்த்தது போல, ஃபிங்கர்பிரின்ட் ரீடர்கள் பின்பக்கத்தில் இருந்தால் அவற்றைப் பயன்படுத்துவது சிலருக்கு சிரமமாக இருக்கும். போனின் டிஸ்ப்ளே அளவு பெரிதாக இருக்கும் என்றால், அதைப் பொறுத்து போனின் அளவும் மாறுபடும் அல்லவா? அதனால் போனின் எடை, பேட்டரியின் எடை, செலவாகும் மின்சக்தி போன்றவையும் அதிகரிக்கும்.

2. டிஸ்ப்ளே அதிகம் பயன்பாட்டில் இருக்கும் என்பதால், அதற்கு ஏற்ப கூடுதல் திறன் கொண்ட பேட்டரிகள்தான் போனில் இடம் பெற்றிருக்க வேண்டும். எனவே போனின் பேட்டரி திறனைக் கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் அதிக திறன் கொண்ட பேட்டரி என்றால் முழுதாக சார்ஜ் ஆகவும் தாமதம் ஆகும். எனவே குயிக் சார்ஜிங் வசதிகள் இல்லாத போன் என்றால் 100 % சார்ஜ் ஆக, கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும்.

மொபைல் திரை

3. பெரிய டிஸ்ப்ளே மொபைல்களை ஒரே கையில் கையாள்வதும் கொஞ்சம் கடினமே! குறிப்பாக டைப் செய்யும் போது சில அசௌகரியங்கள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க ஒன் -ஹேண்டட் டைப்பிங் ஆப்ஷன்கள் உதவும்.

4. எங்கேயும் எடுத்து செல்ல கொஞ்சம் கடினமாக இருக்கும். குறிப்பாக பாக்கெட்களில் வைப்பதற்கு ஏற்றதாக இருக்குமா என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

5. ஒரு மொபைலில் டிஸ்ப்ளே உடைந்து அதை சரிசெய்ய, சர்வீஸ் சென்டருக்கு சென்றவர்களுக்கு மட்டுமே அதன் மதிப்பு என்ன என்பது தெரியும். காரணம் மொபைலின் பாதி விலையை சொல்லி பீதியேற்றுவார்கள். எனவே டிஸ்ப்ளேவின் பாதுகாப்பும் மிக முக்கியம். டிஸ்ப்ளேயின் அளவும் பெரிது என்பதால், அதற்கேற்ற பாதுகாப்பு வழிமுறைகளையும் சரியாகப் பின்பற்றுங்கள். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad