Type Here to Get Search Results !

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் ஜெயலலிதா உயில் கொள்ளை போனதா? : திடுக்கிடும் தகவல்கள்ஊட்டி : ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா எழுதிய உயில் கொள்ளை போயிருப்பதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களாவில், கடந்த 23ம் தேதி நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளையில்  11 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில், 9 பேர் கேரள மாநிலத்தை சேர்ந்த கூலிப்படையினர் என தெரியவந்துள்ளது. இக்கொலை மற்றும் கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்த முக்கிய குற்றவாளியும், ஜெயலலிதாவின் கார் டிரைவருமான சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ், சேலத்தில் கார் விபத்தில் மரணம் அடைந்தார். வாகனத்தை மோதவிட்டு அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், இவரது நண்பர் கேரளாவை சேர்ந்த சயான், பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் சிக்கி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவரையும் முக்கிய குற்றவாளிகளாக தனிப்படையினர் கூறி வருகின்றனர்.

5வது குற்றவாளி: இக்கொலை வழக்கில் கேரளாவை சேர்ந்த 4 பேர் கடந்த சனிக்கிழமை, தனிப்படை போலீசாரால் கேரளாவில் கைது செய்யப்பட்டனர். தற்போது, 5வது குற்றவாளியாக கோவை வாளையார் பகுதியை சேர்ந்த மனோஜ் தனிப்படை போலீசாரிடம் சிக்கியுள்ளார். இவர், நேற்று கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர், தனிப்படை போலீசாரிடம் பல ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதாவது, கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணம் கொள்ளையடித்ததாக கூறியுள்ளார். பல்வேறு சொத்து தொடர்பாக ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அதையும் கொள்ளையடித்ததாகவும்
கூறியுள்ளார். இந்த தகவல் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த தகவல் உண்மையா அல்லது வழக்கை திசை திருப்ப பொய் வாக்குமூலம் அளித்துள்ளாரா என்பது பற்றி தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயில் கொள்ளையா: தங்கம், வைரம், வைடூரியம் என ஆபரணங்கள், கோடிக்கணக்கில் பணம் ஆகியவற்றை குறி வைத்தே இக்கும்பல் உள்ளே நுழைந்துள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவு நகைகள் கிடைக்காத காரணத்தால் உயில் உள்ளிட்ட ஆவணங்களை திருடிச்சென்றதாக தெரியவந்துள்ளது. ஜெயலலிதாவின் அறைக்குள் நுழைந்த இவர்கள், அங்கிருந்த மூன்று சூட்கேசுகளை எடுத்துச் சென்றுள்ளனர். அதில்தான் இந்த உயில் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இவற்றை கொள்ளையடித்த கும்பல், அவற்றை எங்கு கொண்டுசென்றது, இந்த ஆவண கொள்ளை பின்னணியில் யார், யார் உள்ளனர் என கண்டுபிடிக்க முடியாமல் தனிப்படையினர் திணறுகின்றனர். ஜெயலலிதா தொடர்பான சொத்து ஆவணங்களை இக்கும்பல் கொள்ளையடித்திருந்தால், அதனை ஏன் காவல் துறையினர் பறிமுதல் செய்யவில்லை என்ற சந்ேதகமும் எழுந்துள்ளது.

இவ்வழக்கை பொறுத்தவரையில் டிஐஜி., அளவிலான அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருவதால், வழக்கில் ஏதேனும் முக்கிய புள்ளிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்து வருகிறது. அரசியல் காரணங்களுக்காக  கொள்ளை நடந்ததா? என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் போலீசார் திணறுகின்றனர். இக்கொள்ளைக்கு, திரைமறைவில் மூளையாக இருந்தவர்கள் யார், யார்? என கண்டறிந்து அவர்களை கைது செய்வதில் போலீசார் சுணக்கம் காட்டுகின்றனர். குற்றவாளிகள் 11 பேர் என அடையாளம் காணப்பட்டாலும் இன்னும் 4 பேர் சிக்கவில்லை. அதனால், இந்த வழக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போலீசார் தவிக்கின்றனர்.

சிக்குவாரா மர வியாபாரி

கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளியாக கூடலூர் பகுதியை சேர்ந்த மர வியாபாரி இருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவம் நடந்த அன்று இவர் துபாய் புறப்பட்டு சென்றார் என்றும் கூறப்படுகிறது. அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளிவரும் என தனிப்படை போலீசார் கருதுகின்றனர். இந்த மரவியாபாரி மற்றும் அவரது உறவினர்கள், கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வரும் மேலாளர், முன்னாள் மேலாளர்கள் உள்பட சிலரை விசாரிப்பதில் போலீசார் காலதாமதம் காட்டி வருகின்றனர்.

டிரைவர் வீட்டில் எஸ்பி விசாரணை

நீலகிரி  மாவட்டம் கோடநாட்டிலுள்ள ஜெயலலிதா பங்களா காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட  ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜ்(35) 28ம் தேதி சேலம் ஆத்தூர்  அருகே சாலையில் இறந்து கிடந்தார். நீலகிரி எஸ்பி முரளி லம்பா  தலைமையிலான போலீசார் நேற்று மாலை இடைப்பாடியில் உள்ள கனகராஜ் வீட்டுக்கு  வந்து, அவரது மனைவி கலைவாணி, கனகராஜியின் சகோதரர்கள் தனபால், பழனிவேல்  ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் ஏதும் ஆவணங்கள் உள்ளதா என்பது  குறித்தும் சோதனை நடத்தினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad