கலையரசனும் தன்ஷிகாவும் ஃபுல் ஃபார்மில் இருக்காங்க!
2.0 படப்பிடிப்பு முடித்த குஷியோ என்னவோ, ரஜினிகாந்த் இப்போதெல்லாம் சினிமா விழாக்களில் அடிக்கடி கலந்து கொள்கிறார். அவரது கையால் ஆடியோ வெளியீடு, டீஸர் ரிலீஸ் என்று அமர்க்களப்படுகிறது கோலிவுட். அறிமுக இயக்குநர் விக்கி ஆனந்த் எழுதி இயக்கும் உரு படத்தின் டீஸரை சமீபத்தில்தான் அவர் வெளியிட்டார்.
அதென்ன கொஞ்சநாளாவே தமிழில் டைட்டிலெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கே?
உருவம் என்பதின் சுருக்கம்தான் உரு. இன்னொரு அர்த்தத்தில் சொல்வதாக இருந்தால் அச்சம், பயம் என்றும் சொல்லலாம். இது பயம் கலந்த திரில்லர் கதை என்பதால் இப்படியொரு டைட்டிலை செலக்ட் பண்ணினோம்.
கதை?
கதைப்படி நாயகன் கலையரசன் நல்ல குடும்பக்கதைகளை எழுதி வரும் எழுத்தாளர். ஆனால் இன்றைய மாறிவிட்ட சூழலில் இவரின் கதைகள் வரவேற்கப்படாமல் போகவே, தனது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய காலகட்டத்திற்கேற்ப வாசகர்களைக் கவரும் திரில்லர் கதைகளை எழுத முடிவுஎடுத்து, மேகமலை என்ற ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் கதை எழுதத் தொடங்கும் போது அவரைச் சுற்றி சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது தான் இந்தப் படத்தின் கதை. இது பேய் படம் கிடையாது. ஆனால் பேய் படம் தரக்கூடிய பயத்தை இந்தப் படம் தரும்.
கலையரசன்?
ஆக்சுவலா கபாலிக்கு முன்பே இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொல்லியிருந்ததால், இந்தப் படத்தின் மீது அவருக்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தது. ஒரு அறிமுக இயக்குநருக்கு கலையரசன் போன்ற நடிகர் கிடைப்பது வரம். ஒரு முக்கியமான காட்சியை ஒரு அருவியில் எடுக்க வேண்டும். அது உறைய வைக்கும் குளிர்ந்த நீர்நிலை. ஆனால் குளிரைப் பொருட்படுத்தாமல் கலையரசன் மிகப் பிரமாதமாக அந்தக் காட்சியில் நடித்துக்கொடுத்தார். இந்தக் கதையை நான் கையில் எடுக்க கலையரசன்தான் காரணம். ஏன்னா, கபாலிக்குப் பிறகு அவருக்கு நிறைய டிமாண்ட் இருந்தது. என்னுடைய இந்த முயற்சிக்கு தோள் கொடுத்து உதவிய இன்னொருவர் தயாரிப்பாளர் வி.பி.விஜி.
சாய் தன்ஷிகா?
நான் உதவி இயக்குநராக காத்தாடி, கதை சொல்லப் போறோம் படங்களில் வேலை செய்யும்போதே சாய் தன்ஷிகாவுடன் பழக்கம் இருந்தது. அந்த நட்பின் அடிப்படையில் இந்தப் படத்தில் நடிக்க வந்தார். படத்தின் பெரும்பகுதி இரவில்தான் நடந்தது. மிஸ்ட் எஃபெக்ட் வேணும் என்பதற்காக டிசம்பரில் ப்ளான் பண்ணினோம். இரவு பத்து மணிக்கெல்லாம் ஒன்பது டிகிரி குளிர் இருக்கும். கொஞ்ச நேரத்தில் நான்கு டிகிரி குளிர் அடிக்கும். அந்தக் குளிரோடு சேர்த்து ரெயின் எஃபெக்ட்டில் சில காட்சிகளைப் படமாக்கினோம். ஸ்வெட்டர் மேல் ஸ்வெட்டர் அணிந்தாலும் குளிர் அடிக்கும் அந்த சூழ்நிலையில் தன்ஷிகா ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸில் நடித்தார். எனக்கே கொஞ்சம் தயக்கமா இருந்தது. ஆனால் தன்ஷிகா ஒத்துழைப்பு கொடுத்தார். ஹாட்பேக், ஹிட்டர், டஜன் டவல் போன்ற சில முன்னேற்பாடுகளுடன் தான் அந்தக் காட்சிகளைப் படமாக்கினோம்.
கலையரசன் - தன்ஷிகா கெமிஸ்டரி எப்படி?
கலையரசனும் சரி, தன்ஷிகாவும் சரி இரண்டு பேரும் நடிப்புன்னு வந்துட்டா எந்த லெவலுக்கும் போய் ஒத்துழைப்பு கொடுப்பாங்க. என்னைப் பொறுத்தவரை இரண்டு பேரிடமும் உள்ள ஆற்றல் அதிகம். அவர்களிடம் உள்ள ஒரு பகுதியைத்தான் நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். இரண்டு பேருக்குமே கபாலி நல்ல பேரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ஃபுல் ஃபார்மில் இருக்கிற அவங்களை வைத்து படம் பண்ணும் இயக்குநர்கள் லக்கி என்று தான் சொல்வேன். இரண்டு பேருக்கும் சரிசமமான ரோல். கபாலி ஸ்டைலில் தன்ஷிகாவுக்கு கலக்கலான ஃபைட் சீனும் படத்துல இருக்கு.
உங்க டீம் பற்றி?
திரில்லர் படங்களுக்கு இசையும், ஒளிப்பதிவும் இரு கண்கள் மாதிரி. அந்த வகையில் இசையமைப்பாளர் ஜோஹனும், ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமாரும் தங்களுடைய வித்தையை தனித்துவமாகக் காட்டாமல் கதையோடு டிராவல் பண்ணி உழைத்திருக்கிறார்கள். அனைத்து பாடல்களையும்யும் கார்க்கி எழுதியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் கதையின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். பேய் சீசன் முடிந்துவிட்ட நிலையில் ஒரு திரில்லர் மூவி எடுத்திருக்கிறேன். வழக்கமான ஜானரில் படம் பண்ணாமல் ஃப்ரெஷ் லுக்கில் படம் பண்ணியிருக்கிறேன். புது அனுபவத்துக்கு தயாரா இருங்க!