Type Here to Get Search Results !

கவுண்டமணி, வடிவேலு, செந்தில் பேசிய முதல் வசனம் என்னனு தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் நடித்த முதல் படம் பெரும்பாலோனோருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பேசிய முதல் வசனம் தெரியுமா? இப்போ தெரிஞ்சிக்கோங்க மக்களே..!




வடிவேலு :


வடிவேல் முதல் வசனம்
1988-ல் டி.ராஜேந்தர் இயக்கத்தில், நடிப்பில், இசையில், ஒளிப்பதிவில் வெளியான ப்ளாக்பஸ்டர் படம்தான் 'என் தங்கை கல்யாணி'. இந்தப் படம்தான் வடிவேலுவிற்கு முதல் படமும் கூட. இதில் இடம்பெற்ற காட்சி ஒன்றில் ஒரு சிறுவன் வடிவேலுவின் சைக்கிள் பெல்லைத் திருட முயற்சிப்பான். அந்தப் பக்கம் செல்லும் சின்ன வயது டி.ஆர் 'ஏன்டா திருடுற'னு கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படும். அதைக் கண்ட வடிவேலு திருடிய சிறுவனைப் பார்த்து 'திருடுறதையும் திருடிட்டு திமிராவா பேசுற?' என்று கேட்பார். இதுதான் வடிவேலு பேசிய முதல் வசனம். ஆனால் அவருக்கு டப்பிங் பேசியவர் வேறு யாரோ...


கவுண்டமணி :

 கவுண்டமணி முதல் வசனம்
 கவுண்டமணி நடித்த முதல் படம் 'சர்வர் சுந்தரம்'. ஆனால், அந்தப் படத்தில் அவருக்கென ஒரு டயலாக் கூட இல்லாமல் போனது சோகம். அதற்குப் பின் சிவாஜி, கே.ஆர். விஜயா, பி. முத்துராமன் நடிப்பில் வெளிவந்த படம் 'ராமன் எத்தனை ராமனடி'. கிட்டத்தட்ட இந்தப் படத்தின் க்ளைமாக்ஸை நெருங்கும் நேரத்தில் பேருந்தின் ஓட்டுனராக முத்துராமனுக்குப் பதிலாக கவுண்டமணி நின்று கொண்டிருப்பார். அந்தச் சமயத்தில் கவுண்டமணியைப் பார்த்து சிவாஜி 'இதுக்கு முன்னாடி வேற ட்ரைவர் இல்ல?' என்று கேட்பதற்கு 'சார்... அவர் ரெண்டு நாளைக்கு முன்னாடியே வேலையை விட்டுட்டுப் போயிட்டார் சார்' என்று பேசி தமிழ் சினிமாவில் தன் முதல் வசனத்தைப் பதிவு செய்தார் கவுண்டர் மகான்.

செந்தில் :


செந்தில் முதல் வசனம்
பாக்யராஜ் இயக்கி நடித்த எவர்க்ரீன் படம்தான் 'இன்று போய் நாளை வா'. மூன்று நண்பர்கள் சேர்ந்து எதிர் வீட்டுப் பெண்ணான ராதிகாவைக் காதலிக்க வைப்பதுதான் கதை. வில்லன் கும்பலில் செந்திலும் ஒரு ஆள். ஆலமரத்திற்கு அடியில் உட்கார்ந்திருக்கும் மெயின் வில்லனை நோக்கி இவர் 'வாத்தியாரே, வாத்தியாரே ஒரு தமாஷ் பார்த்தியா? போண்டா வாங்குன இந்த பேப்பர்ல உன் போட்டோவைப் படம் பிடிச்சு போட்டு இருக்காங்க' என்று கூறும் வசனம் மூலம் செந்தில் தன் குரலை முதன்முதலாகத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார்.


சூரி :

சூரி முதல் வசனம்


தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் இருக்கும் காமெடி நடிகர்களில் சூரியும் ஒருவர். பரோட்டாவின் மூலம் பிரபலமான இவர் ஆரம்பக்காலத்தில் ரசிகர்கள் கண்ணுக்குத் தெரியாமல் 'சங்கமம்', 'ஜேம்ஸ் பாண்டு', 'உள்ளம் கொள்ளை போகுதே', 'வின்னர்' எனப் பல படங்களில் தலைகாட்டி இருக்கிறார். ஆனால் இவர் தமிழ் சினிமாவில் அழுத்தமான முதல் அடியை எடுத்து வைத்தது பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த 'நினைவிருக்கும் வரை' படம் மூலமாகத்தான். பிரபுதேவாவின் நண்பர்களுள் இவரும் ஒருவர். படத்தின் ஆரம்பத்தில் கைதான பிரபுதேவாவை ஜாமினில் எடுப்பதற்காக ஸ்டேஷனுக்கு வெளியே நின்று கொண்டிருப்பார் அப்போது போலீஸ் சூரியைக் கடந்துச் செல்லும்போது 'வணக்கம் சார்' என்று இவர் கூறும் வசனத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்டார் 'பரோட்டா' சூரி.

சிங்கமுத்து :

சிங்கமுத்து முதல்வசனம்

ராமராஜன் நடிப்பில் வெளிவந்த படம் 'நேரம் நல்லா இருக்கு'. ரயிலில் ராமராஜன் தன் சொந்த ஊருக்கு வருவதுதான் ஹீரோ இன்ட்ரோ. அவரை வரவேற்கும் ஊர் மக்கள் கும்பலில் சிங்கமுத்துவும் ஒருவர். ராமராஜனைப் பார்த்து அவரின் அருகே இருப்பவரிடம் 'அண்ணே... டாக்டர் சின்ன வயசுப் பயலா இருக்கான், நிறைய தப்பு தண்டா பண்ணியிருப்பான், நீ விடாம வேப்பிலையை அடி...' என்று கூறும் வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வலதுகாலை எடுத்து வைத்தார் சிங்கமுத்து.

சதீஷ் :

சதீஷ்
கலாய் கவுன்டர்களை அடிப்பதில் இவரை விட்டால் இப்போது வேறு ஆளே கிடையாது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கலந்துகட்டிக் கலாய்த்துத் தள்ளிய படம் 'தமிழ்ப்படம்' . அந்தப் படத்தின் மூலம் தன் முகத்தைத் தமிழ் சினிமாவிற்குள் பதித்தார். அதில் வரும் 'டி' (பாட்டி)யின் ரைட் ஹேண்ட்தான் சதீஷ். அந்தப் படத்தில் 'டி... நம்ம சொர்ணா அக்காவை யாரோ கொலை பண்ணிட்டாங்க' என்ற வசனம் மூலம் தன் குரலோடு சேர்த்து முகத்தையும் மக்களுக்கு அடையாளம் காட்டினார்.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad