கொல்கத்தாவை வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நேற்று நடந்தது. டாஸில் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர், பஞ்சாப்பை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார்.
மனன் வோராவும், குப்திலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆம்லா இல்லாததால் பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை ஆரம்பத்தில் சொதப்பியது. வோரா 25, குப்தில் 12, ஷான் மார்ஷ் 11 ரன்களில் அவுட் ஆக அந்த அணி 3 விக்கெட்டுக்கு 56 ரன்கள் என்று ஆட்டம் கண்டது. அடுத்தடுத்து விக்கெட் கள் சரிந்ததால் 10 ஓவர்களில் பஞ்சாப்பால் 63 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
முதல் 10 ஓவர்களில் தயங்கித் தயங்கி முன்னேறிய பஞ்சாப் அணி, அதன்பிறகு வேகமெடுத் தது. கிரான்ட்ஹோம் வீசிய 12-வது ஓவரில் மேக்ஸ்வெல் 2 சிக்சர்களை விளாச, ஸ்கோர் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கியது. இதனால் 13.2 ஓவர்களில் பஞ்சாப் 100 ரன்களை எட்டியது.
எல்லாம் நன்றாக சென்றுகொண்டி ருந்த நேரத்தில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் வோக்ஸிடம் கேட்ச் கொடுத்து மேக்ஸ்வெல் அவுட் ஆனார். 25 பந்துகளைச் சந்தித்த மேக்ஸ்வெல் 44 ரன்களை விளாசினார். மேக்ஸ்வெல்லின் விக்கெட்டுக்கு பிறகு கொஞ்சம் நொண்டியடித்த பஞ்சாப் அணி, சாஹா (38 ரன்கள்), டிவாட்டியா (15 ரன்கள்) ஆகியோரின் உதவியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களைச் சேர்த்தது.
வெற்றிபெற 168 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த கொல்கத்தாவின் கிறிஸ் லின் - நரேன் ஜோடி முதல் ஓவரில் இருந்தே பந்துகளை விளாசத் தொடங்கியது. 10 பந்துகளில் 18 ரன்களை எடுத்த நிலையில் சுனில் நரேனின் விக்கெட்டை மோஹித் சர்மா வீழ்த்தினார். ஆனால் அவருக்கும் சேர்த்து கிறிஸ் லின் அதிரடி காட்ட, கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 61 ரன்களை எட்டியது. கிறிஸ் லின் 29 பந்துகளில் 1 சிக்சர், 7 பவுண்டரிகளில் அரை சதத்தை கடந்தார்.
அணியின் ஸ்கோர் 78 ரன்களாக இருந்தபோது டிவாட்டியாவின் பந்தில் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து கவுதம் காம்பீர் 8 ரன்னில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து உத்தப்பா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக, ஆட்டம் சமநிலை பெற்றது. கடைசி 5 ஓவர்களில் 7 விக்கெட் கைவசம் இருக்க கொல்கத்தா அணி வெற்றி பெற 50 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில் மைதானத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இந்த கட்டத்தில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் பொறுமையாக செயல்பட, கொல்கத்தா வீரர்களை பதற்றம் தொற்றிக்கொண்டது. ரன் ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் கிறிஸ் லின் (84 ரன்கள்) உட்பட முக்கிய வீரர்கள் அவுட் ஆக கொல்கத்தா அணி சரணடைந்தது. அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத்தொடர்ந்து பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.