Type Here to Get Search Results !

நீதிபதிகளை தொடர்ந்து அவமதிப்பு செய்ததாக நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை





* நீதித்துறை வரலாற்றில் முதன்முறை
* உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை உடனடியாக கைது செய்யவும் நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். தமிழகம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீதும் தமிழகத்தைச் சேர்ந்த கொல்கொத்தா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினார். இதையடுத்து, அவர் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ்.கேஹர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்து நீதிபதி கர்ணனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற தலைைம நீதிபதி கேஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகள் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதேபோல், தொடர்ந்து கர்ணன் மீது உச்ச நீதிமன்றமும் அதற்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதி கர்ணனும் பரஸ்பரம் உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில், நீதிபதி கர்ணனுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கும் பதிலளித்த நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவை பிறப்பித்தார்.  தனக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக  நீதிபதி கர்ணன் ஒரு உத்தரவு போட்டார். இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். மேலும், அவரை உடனடியாக கொல்கத்தா போலீசார் கைது செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நீதிபதி கர்ணனின் உத்தரவுகளையும் அவரது பேட்டிகளையும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பவோ, வெளியிடவோ கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பதவியில் இருக்கும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டிருப்பது அதுவும் உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டது இந்திய நீதித்துறை வரலாற்றில் முதலாவதாகும். நீதிபதி கர்ணன் அடுத்த மாதம் 11 ம் தேதி ஓய்வு பெறும் நிலையில் இந்த உத்தரவு பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில், சென்னை விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த நீதிபதி கர்ணனிடம் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சியைச் சேர்ந்த நிருபர்கள் பேட்டியெடுத்தனர். உச்ச நீதிமன்ற தடை உத்தரவினால் நீதிபதி கர்ணனின் பேட்டிகள் வெளியிடப்படவில்லை.

* நீதிபதி கர்ணன் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது உத்தரவுகளை பிறப்பித்துவந்தார்.
* இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டது  சுப்ரீம் கோர்ட்.
* மீண்டும் கர்ணன் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வந்தார்.
* தொடர்ந்து அமவதிப்பு செய்ததாக நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது சுப்ரீம் கோர்ட்.
* அடுத்த மாதம் 11ம் தேதி ஓய்வு பெறும் நிலையில் இந்த உத்தரவு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad