Type Here to Get Search Results !

புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘‘இலக்கை நெருங்கி வந்து தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது’’ மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி


புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலக்கை நெருங்கியும் வெற்றிக்கனியை பறிக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

ஏப்ரல் 26, 02:30 AM
மும்பை,

புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலக்கை நெருங்கியும் வெற்றிக்கனியை பறிக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

மும்பை அணி தோல்வி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த திரில்லிங்கான லீக் ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 3 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. இதில் புனே அணி நிர்ணயித்த 161 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டது. 19–வது ஓவரை வீசிய ஆல்–ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதையடுத்து கடைசி ஓவரில் அந்த அணிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. பரபரப்பான 20–வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் வீசினார். இந்த ஓவரில் மும்பை அணி 2 சிக்சருடன் 13 ரன்கள் மட்டுமே எடுத்ததுடன், கேப்டன் ரோகித் சர்மா (58 ரன், 39 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா (13 ரன்) உள்பட 3 பேரின் விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

மும்பை கேப்டன் சொல்வது என்ன?
இதன் மூலம் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வெற்றிகண்ட மும்பையின் ‘வீறுநடை’யும் முடிவுக்கு வந்தது. தோல்விக்கு பிறகு மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இலக்கை நெருங்கி வந்து தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. முடிந்தவரை கடுமையாக முயற்சித்தோம். ஆனால் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யாதது வருத்தமே. புனே அணியை 170 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறப்பான வி‌ஷயம். மிடில் ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்ததுடன், சில தவறுகளையும் செய்துவிட்டோம். ஒட்டுமொத்தமாக பார்த்தால் இது சிறந்த ஆட்டமாக அமைந்தது. கொஞ்சம் உலர்வாக இருந்த இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை கச்சிதமாக செய்தனர்.

எங்களது செயல்பாடு குறித்து பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாங்கள் சிறப்பாகவே விளையாடி வருகிறோம். அதை தொடர்ந்து செய்தால் போதும். இந்த ஆட்டத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்து என்ன செய்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். கடைசி ஓவரை உனட்கட் அருமையாக வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது பின்னடைவாகி போனது’ என்றார்.

புனே கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில், ‘பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அந்த அளவுக்கு இல்லை. ஆடுகளத்தன்மையும் 40 ஓவர்களும் ஒரே மாதிரியாகவே இருந்தது. மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றியதால் நெருக்கடி கொடுக்க முடிந்தது. உனட்கட் தனது கடைசி இரு ஓவர்களையும் வியப்புக்குரிய வகையில் வீசினார்’ என்றார்.

ரோகித் சர்மாவுக்கு அபராதம்
இதற்கிடையே மும்பை கேப்டன் ரோகித் சர்மா அபராத நடவடிக்கைக்குள்ளாகி இருக்கிறார். கடைசி ஓவரை எதிர்கொண்ட ரோகித் சர்மா, உனட்கட் பந்து வீசுவதற்கு முன்பே, ஆப்–சைடு நோக்கி சில அடி நகர்ந்தார். இதனால் வைடாக வீசப்பட்ட அந்த பந்தை நடுவர் ரவி வைடு என்று அறிவிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரோகித் சர்மா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத், ரோகித் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதத்தை அபாரதமாக விதித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad