இந்திய அணிக்குள் மீண்டும் இடம்பெறுவதே இலக்கு யூசுப் பதான் அதிரடி
வரவிருக்கும் ஐபிஎல் தொடர் பொழுதுபோக்கு மட்டுமல்ல, மீண்டு இந்திய அணிக்குள் நுழைவதற்கான நடைமேடையுமாகும் என்று அதிரடி வீரர் யூசுப் பதான் தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிரடி வீரரான யூசுப் பதான் 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் 2012-ல் ஆடினார், அதன் பிறகு இடம்பெற போராடி வருகிறார், இவரை அனாவசியமாகவே தேர்வுக்குழுவினர் அணியிலிருந்து நீக்கியதாக அப்போதே வாசிம் அக்ரம் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. 57 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள யூசுப் பதான், 810 ரன்களை 27 என்ற சராசரியில் எடுத்துள்ளார், இதில் 3 அரைசதங்கள், 2 அதிரடி சதங்கள் அடங்கும், அதிகபட்ச ஸ்கோர் 123 நாட் அவுட் ஆகும். டி20- சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் சோபிக்கவில்லை. 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோனியினால் திடீரென தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட யூசுப் பதான் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆசிப்பை நேர் சிக்ஸ் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் அவர் கூறியிருப்பதாவது:
இதுவரை நான் விளையாடிய கிரிக்கெட் ஆட்ட பாணி, மீண்டும் இந்திய அணிக்குள் நுழையும் இலக்கு கொண்டதே. ஐபிஎல் என்னை மீண்டும் நிரூபிக்க வாய்ப்பளித்துள்ளது. இந்திய அணிக்குத் திரும்புவதே உடனடியான லட்சியம். அதற்கு இங்கு கிடைத்துள்ள வாய்ப்பை முழுதும் பயன்படுத்த வேண்டும். 2011 உலகக்கோப்பையை வென்ற தருணம் மறக்க முடியாததாகும். இவ்வாறு கூறினார் யூசுப் பதான்.