இந்தியில் திட்டிய ஜடேஜா புரியாமல் கடைசி வரை கதறிய ஆஸ்திரேலிய வீரர்
தன்னுடன் வம்பு செய்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மாத்யூ வேடை, இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா இந்தியில் திட்டியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது, மூன்றாவது டெஸ்ட் ’டிரா’வில் முடிந்தது. இரு அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி, இறுதிப் போட்டியாக அனல் பறக்க தர்மசாலாவில் நடந்தது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இத்தொடரில் இதுவரை இல்லாத அளவு இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. தர்மசாலா டெஸ்டின் முதல் இன்னிங்சில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிந்திர ஜடேஜா, களத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மாத்யூ வேட், அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஜடேஜாவை கேலி செய்து பேசியுள்ளனர். இதனால் கடுப்பான ரவிந்திர ஜடேஜா, விக்கெட் கீப்பர் மாத்யூ வேடை, இந்தி வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதற்கு அர்த்தம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த வேட், பின் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ரவிந்திர ஜடேஜாவிடமே விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு ஜடேஜா, எனக்கு தெரியாதுப்பா, என பதில் சொல்ல, வேட் விடுவதாக இல்லை. நீ சொன்ன வார்த்தைக்கு ‘ஹலோ’ என்று தானே அர்த்தம் என மீண்டும் கேட்க, அதெல்லாம் ஒன்றும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார் ஜடேஜா. ஆனால் போட்டி முடியும் வரை அர்த்தம் தெரியாமலே மைதானத்தைவிட்டு வேட் வெளியேறும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.