Type Here to Get Search Results !

சுடுகாடாக மாறப் போகும் தமிழகம்... எதனால்





தமிழகத்தை யாராலும் காப்பாற்ற இயலாது. அதிர்ச்சி அடையாமல் படிக்கவும் மீத்தேன் என்னும் எமன் தஞ்சையில் காவேரி பாசன பகுதிகளை பாலைவனமாய் மாற்ற கூடிய மீத்தேன் எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொள்ள வேண்டிய வாய்ப்பு கிட்டியது.  ஏற்கனவே இது பற்றி அறிந்திருந்தாலும் மேலும் அது பற்றிய விளக்கங்கள் தெளிவாய் அறிய கலந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.  ஒரு வரியில் சொல்ல கூடிய தகவல் அல்ல இது. அனைவரையும் அதாவது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அழிக்க கூடிய கொடிய அரக்கன் இது எனபது அறிந்து பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டது.  முற்றிலும் பாலைவனமாய் மாறப்போகும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம் என்றும் அதோடு சேர்ந்து பாதிக்கபடப்போகும் மாவட்டங்கள் திருவாரூர் ,நாகை மாவட்டம் ஆகிய இரண்டும் தான் என்பதே இது வரை அறிந்த விபரம்.  உண்மை அதுவல்ல என்பதை பல தகவல்களோடும் ,நடந்த உண்மைகளோடும் ஒப்பிட்டு இன்று நடந்த கருத்தரங்கில் பொறியாளர்கள் கூறியது மனதை பதைபதைக்க வைத்தது.  சில நாட்கள் முன் புதிதாய் வெளிவந்த கத்தி படத்தை ஒரு நண்பர் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.  அப்படத்தில் ஒரு இடத்தில கதாநாயகன் தஞ்சை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு மூலம் மீத்தேன் எடுக்க போகிறார்கள் என்று கூறியதும் நண்பரின் மனைவி கேட்ட கேள்வி மீத்தேன் எடுப்பது என்றால் என்ன , எங்கே என்ற விபரம் தான்.  அவரும் அதிர்ந்தார். அதிர்ச்சிக்கு காரணம் எங்கே மீத்தேன் எடுக்க போகிறார்களோ அதற்கு வெகு அருகில் அவர் பிறந்த மண். மீத்தேன் எடுக்க போகும் விபரம் இங்கு இருப்போருக்கே சரிவர தெரியாத ஒரு செய்தி என்பதே உண்மை.  இதே கருத்தை இன்றைய கருத்தரங்கிலும் பகிர்ந்தனர். இன்னும் அதிக அளவில் இது மக்களை அடைய வேண்டும். எதிர்ப்பு வலுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். எங்கேயோ போடப் போகும் ஆழ்துளை கிணறு தானே நமக்கு என்ன வந்தது என்று எண்ண வேண்டாம் தோழமைகளே.  1.நிலத்தடியில் சுமார் 6000அடி ஆழத்தில் நிலக்கரியோடு இருக்கும் மீத்தேனை எடுக்க நிலக்கரி இருக்கும் மட்டம் வரை நிலக்கரிப் படிவத்தில் இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.  2.கடும் உப்பும், பிற மாசுகளும் நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும் தாவர உயிரியல் மற்றும் நுண்ணுயிர்களைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது.  3.அதோடு நிலம் சுடுகாடாய் மாறும்.  4.கடல் நீர் உள் நுழையும்.  5.நிலம் சுமார் 20அடிகளுக்கு உள்வாங்கும்.  6.கட்டிடங்கள், பாலங்கள், ஆற்றுக்கரைகள் , கோயில்கள் சிதையும். நிலநடுக்கங்கள் ஏற்படும்.  7.குடிநீர் , பாசன நீர் தரும் நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப் போகும்.8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும் ஆழ்துளை குழாய் இட பயன்படுத்திய ரசாயனங்கள், மீத்தேன் ஆகியவை கலக்கும்.  இச்செயல்முறை மண்ணையும், நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக நாசம் செய்யும். ஒப்பந்தம் போட்டிருக்கும் ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும் இடம் 691 சதுர கிலோமீட்டர். ஆனால் பாதிப்பு ஏற்படபோகும் மூன்று மாவட்டங்களின் பரப்பளவு 8270 சதுரகிலோமீட்டர் அதாவது 21 லட்சம் ஏக்கர் நிலங்களை நாசம் செய்யும்.  மொத்த ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை 2000. அடுத்த கட்டமாய் பாதிக்கபோகும் மாவட்டங்கள் புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கடலூரும் தான்.  இதனால் காற்றும் மாசுபட போவதால் அது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாதிக்கபோகும் கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம். ஒட்டுமொத்தமாக இப்பகுதி பாலைவனமாய் மாற போவதால் 50 லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாய் நிற்கிறது.  சென்ற அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு தற்போது ஆங்காங்கே நடைபெறும் போராட்டம் காரணமாய் இந்த அரசு தற்காலிகமாய் நிறுத்தி வைத்துள்ளது. இந்த ஒப்பந்தம் மட்டும் மீண்டும் தொடர்ந்தால்..தமிழகத்தை யாராலும் காப்பாற்ற  இயலாது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad