தோற்ற பிறகு மான்செஸ்டர் சிட்டி அணி வீரரிடம் நிதானம் இழந்த மெஸ்ஸி
மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவிய பிறகு மெஸ்ஸி மான்செஸ்டர் சிட்டி வீரர் ஒருவருடன் மோதல் மேற்கொண்டதாக ஸ்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெஸ்ஸி, பிரேசில் நட்சத்திரம் நெய்மர் ஆகியோர் இருந்தும் மான்செஸ்டர் சிட்டி அணியிடம் பார்சிலோனா தோல்வி தழுவியது குறிப்பிடத்தக்கது. ஸ்பானிய செய்தித் தாள்களான ‘முண்டோ டிபோர்டிவோ’ மற்றும் மார்கா ஆகியவை தனது செய்தியில் பார்சிலோனா அணிக்கு ஆடிவரும் அர்ஜெண்டின நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி நிதானம் இழந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ஆட்டம் தோல்வியில் முடிந்த வெறுப்பில் மெஸ்ஸி ஓய்வறைக்குத் திரும்பிய போது, அதிகம் அறியப்படாத மான்செஸ்டர் சிட்டி வீரர் ஒருவர் மெஸ்ஸியிடம் ஏதோ சில வார்த்தைகளைக் கூற அவர் அதற்கு ஆத்திரம் அடைந்து ‘ஸ்டுபிட்’ என்று கூறி மோதல் போக்கை கடைபிடித்ததாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் மான்செஸ்டர் சிட்டி அணியின் ஓய்வறைக்கு மெஸ்ஸி சென்று அந்த வீரரைத் தேடியதாகவும் அப்போது சிட்டி வீரரும் அர்ஜெண்டின சக வீரருமான செர்ஜியோ அகியுரோ மெஸ்ஸியை சமாதானப்படுத்தியதாகவும் அந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ளது. பார்சிலோனா அணியின் ஒரே கோலை அடித்தவர் மெஸ்ஸி என்பது குறிப்பிடத்தக்கது