ஹாக்கி பயிற்சியாளர் ஓல்ட்மான்ஸ் விருப்பம் பெரிய அளவிலான தொடரை இந்தியா வெல்ல வேண்டும்
மலேசியாவின் குவான்டன் நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலண்ட் ஓல்ட்மான்ஸ், உலக அளவிலான பெரிய தொடரில் இந்திய அணி பட்டம் கைப்பற்ற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
பயிற்சியாளராக நான் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய 20 ஆட்டங்களை பார்த்துள்ளேன். துணை கண்டத்தை சேர்ந்த இந்த அணிகள் இடையேயான ஆட்டம் எந்த அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும் என்பது தெரியும். இந்திய வீரர்கள் இந்த தொடரை வென்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். தொடரை வெல்லும் அணியாக நாங்கள் கருதப்பட்ட போதிலும் எந்த ஆட்டத்தையும் நெருக்கடி இல்லாமல் எதிர்கொண்டோம். இறுதிப்போட்டியில் வீரர்கள் கடைசி கட்டத்தில் மன உறுதியுடன் செயல்பட்டது பெருமையாக இருந்தது. இரண்டு கோல்களை அடித்து முன்னிலையில் இருந்த போதும் எதிரணி அதை சமன் செய்தது. எனினும் இந்திய வீரர்கள் அதில் இருந்து மீண்டெழுந்து வெற்றி பெற்றனர். இந்திய ஹாக்கி ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய வெற்றியாக இருக்கும். ஆனால் நாங்கள் இதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். பெரிய அளவிலான உலக தொடர்களில் பட்டம் வெல்ல வேண்டும். இவ்வாறு ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் கூறினார்.