Type Here to Get Search Results !

இங்கிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி




டாக்காவில் நடைபெற்ற 2-வது, கடைசி டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியிடம் இங்கிலாந்து 108 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி கண்டது, இதன் மூலம் வரலாற்று வெற்றி கண்ட வங்கதேசம் தொடரை 1-1 என்று சமன் செய்தது.  தேநீர் இடைவேளைக்குப் பிறகு 10 விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அதிர்ச்சி சரிவு கண்டு தோல்வியுற்றது. வங்கதேசம் இங்கிலாந்தை முதல் முதலாக வெற்றி கண்டது.  நிறைய கேட்ச்களை கோட்டை விட்ட இங்கிலாந்து அணி வங்கதேசத்தை 2-வது இன்னிங்சில் 296 ரன்கள் வரை எடுக்க அனுமதித்தது. இதனையடுத்து 4-ம் நாளான இன்று இங்கிலாந்துக்கு 273 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  இதில் அலிஸ்டர் குக் (59), டக்கெட் (56) ரன்கள் என்று முதல் விக்கெட்டுக்காக அபாரமாக ஆடி 100 ரன்களைச் சேர்த்தனர். 100/0 என்ற நிலையிலிருந்து தேநீர் இடைவேளைக்குப் பிறகு அதிர்ச்சிகரமாக 10 விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இளம் ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் 2 இன்னிங்ஸ்களிலும் தலா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 12 விக்கெட்டுகளை தனது 2-வது டெஸ்ட் போட்டியிலேயே சாய்த்தார். ஷாகிப் அல் ஹசன் தன் ஒரே ஓவரில் ஸ்டோக்ஸ், ரஷீத், அன்சாரி ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2000-ம் ஆண்டு முதல் வங்கதேசம் டெஸ்ட் அணியாக இருந்து வருகிறது. இது அந்த அணியின் 8-வது டெஸ்ட் வெற்றியாகும். ஜிம்பாப்வேயிற்கு எதிராக 5 டெஸ்ட் வெற்றியையும், பலவீன மே.இ.தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட் வெற்றியையும் மட்டுமே பெற்றுள்ள வங்கதேச அணிக்கு இந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றி நிச்சயம் அந்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு மெஹதி ஹசன் மிராஸ் முதல் பந்திலேயே டக்கெட்டை அருமையான விரைவு பந்தில் பவுல்டு செய்ய அருமையான தொடக்கம் எதிர்பாராத சரிவுக்கு இட்டுச் சென்றது. 12-ல் இருக்கும் போது மெஹதி பந்தை இவர் கட் செய்தார் அதனை மஹமுதுல்லா கேட்சாக்கத் தவறினார். வயிற்று வலியிலிருந்த ஜோ ரூட் பேட் செய்ய வந்து 1 ரன்னில் ஷாகிபிடம் எல்.பி.ஆகி வெளியேறினார். 108/2 என்பது 110/3 ஆகியிருக்கும், ஆனால் அலிஸ்டர் குக் வெற்றிகரமாக எல்.பி.தீர்ப்பு ஒன்றை ரெஃபர் செய்து மீண்டார். கேரி பாலன்ஸ் படுமோசமான ஷார்ட் பிட்ச் பந்தை மெஹதி வீச அதனை அடித்து நொறுக்கும் முயற்சி அவசரத்தில் முன் விளிம்பில் பட்டு மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெறுப்பில் வெளியேறினார். மொயின் அலி 4 பந்துகளே தாக்குப் பிடித்து மெஹதி பந்தில் எல்.பி.ஆனார். ஒரு ரிவியூவையும் விரயம் செய்தார். அலிஸ்டர் குக் மெஹதி பந்தை சில்லி பாயிண்டில் மொமினுல்லிடம் கேட்ச் கொடுக்க இங்கிலாந்தின் சரிவு துரிதமடைந்தது. அதன் பிறகு பேர்ஸ்டோவை மெஹதி வீழ்த்த, ஷாகிப் அல் ஹசன் ஒரே ஓவரில் ஸ்டோக்ஸ், ரஷீத், அன்சாரியை வீழ்த்த கடைசியில் ஸ்டீவ் ஃபின் விக்கெட்டை மெஹதி ஹசன் வீழ்த்த வரலாற்று வெற்றி பெற்றது வங்கதேசம். தொடரையும் சமன் செய்து, இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியைச் சாதித்தது. ஆட்ட நாயகனாகவும், தொடர்நாயகனாகவும் அறிமுக ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் தேர்வு செய்யப்பட்டார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad