கனவிலும் அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் யார் ரிக்கி பாண்டிங்





இந்தியாவில் சச்சின் எப்படியோ அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் ரிக்கி பாண்டிங். அவர் எதிர்கொண்டு ஆட்கொள்ளாத பவுலர்களே இல்லை எனலாம். ஆனாலும் தன்னை இன்னமும் கூட கனவிலும் அச்சுறுத்தும் பவுலர் யார் என்பதை அவர் சமீபத்தில் வெளியிட்டார்.  டாஸ்மேனியா அரசு சார்பாக வர்த்தக நலன்களுக்காக இந்தியா வந்துள்ள பாண்டிங் கூறியதாவது:  “இந்தியாவுக்கு எதிராக நான் ஆடும்போது எனது பரம்பரை வைரி ஹர்பஜன் சிங்தான். இன்னமும் கூட என் கனவில் வந்து அச்சுறுத்துகிறது அவரது பந்துவீச்சு” என்று கூறினார் ரிக்கி பாண்டிங். 1998-ம் ஆண்டு ஷார்ஜாவில்  ஹர்பஜனிடம் ஒருநாள் போட்டியில் முதன் முதலாக பாண்டிங் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பாண்டிங் அழைக்கும் “அசாதாரண, அபாரமான 2001 டெஸ்ட் தொடரில்” ரிக்கி பாண்டிங், ஹர்பஜனின் செல்லப்பிள்ளையானார். 5 இன்னிங்ஸ்களிலும் பாண்டிங்கை வீழ்த்தினார், பாண்டிங் இரட்டை இலக்க ஸ்கோரை எட்ட தடுமாறிய தொடராகும் அது. இதோடு பாண்டிங்கை 10 முறை வீழ்த்திய பவுலருமானார் ஹர்பஜன் சிங். பாண்டிங்கை 10 முறை வீழ்த்திய பவுலர் ஹர்பஜனைத் தவிர யாருமில்லை. 2008 தொடரின் போது சிட்னி டெஸ்ட் போட்டியின் நடுவர்களின் ஏகப்பட்ட ஊழல்களால் இந்தியா தோற்ற போட்டியில் சைமண்ட்சுக்கும் ஹர்பஜனுக்கும் ஏற்பட்ட ‘மங்க்கி கேட்’ விவகாரத்தில் பாண்டிங், ஹர்பஜன் இடையே கசப்புணர்வு ஏற்பட்டது. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் இருவரையும் மீண்டும் ஒன்றிணைத்தது. ஆனால் பாண்டிங் ஓய்வு பெற்ற போது ஹர்பஜன் கூறியது நினைவு கூரத் தக்கது: “கிரிக்கெட் உலகிற்கு இது சோகமானது. ஆட்டத்தின் இன்னொரு லெஜண்ட் ஓய்வு பெற்று விட்டார். பாண்டிங்கைப் பற்றி திரும்பிப் பார்க்கும் போது மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் என்ற பதிவே எனக்குக் கிடைக்கிறது” என்றார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url