உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியிலிருந்து விலகல் சர்ச்சையில் மெஸ்ஸி
உலகக் கோப்பைத் தகுதிச் சுற்று கால்பந்து போட்டியில் வெனிசுலாவுக்கு எதிராக அர்ஜெண்டினா அணி 2-2 என்று டிரா செய்தது, இந்தப் போட்டியிலிருந்து மெஸ்ஸி விலகியது தற்போது சர்ச்சையாகியுள்ளது. அர்ஜென்டினாவின் பிரபல பத்திரிகையாளர் லிபர்மேன், மெஸ்ஸி தான் விலகியதற்குக் காரணம் காட்டிய காயம் அவ்வளவு சீரியசானதல்ல என்று கூறி தனது வாதத்திற்கு ஆதரவாக மெஸ்ஸி சமூக வலைத்தளத்தில் ‘காயம் அவ்வளவு சீரியசானதல்ல’ என்று பதிவிட்டதைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, ‘வெனிசுலாவுக்கு எதிரான போட்டியத் தவிர்த்து விட்டு அடுத்ததாக அல்வேஸ் அணியுடன் மோதுவது இழிவானது’ என்று சாடியுள்ளார் லிபர்மேன். இதனையடுத்து தன் நாட்டு அணிக்கு ஆடும் போது மெஸ்ஸி கடமை உணர்வுடன் செயலாற்றுவதில்லை என்ற விமர்சனம் மெஸ்ஸிக்கு எதிராக மீண்டும் கிளம்பியுள்ளது. கடந்த போட்டியில் உருகுவேவுக்கு எதிராக அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற போது வெற்றி கோலை அடித்தவர் மெஸ்ஸியே என்பது குறிப்பிடத்தக்கது. தகுதிச் சுற்றுப் போட்டிப் பிரிவில் 8 போட்டிகள் முடிவடைந்த நிலையில் உருகுவே முதலிடத்தில் உள்ளது, பிரேசில் 2-வது இடம் பெற்றுள்ளது. வெனிசுலாவுக்கு எதிராக டிரா ஆனதால் முதலிடத்திலிருந்து 3-வது இடத்திற்கு பின்னடைவு கண்டுள்ளது அர்ஜெண்டினா. கொலம்பியா 3-வது இடத்திலும் ஈக்வடார் 5-வது இடத்திலும் உள்ளது. ஒரு பிரிவிலிருந்து டாப் 4 அணிகள் ரஷ்யாவில் நடைபெறும் 2018 கால்பந்து உலகக்கோப்பைக்கு தகுதி பெறும். 5-வது இடம் பிடிக்கும் அணி 2 சுற்று பிளே ஆஃப் போட்டியில் ஓசியானாவிலிருந்து தகுதி பெறும் அணியுடன் ஆட வேண்டும்.