Type Here to Get Search Results !

தமிழ் பட நடிகைகளை ஒதுக்கும் இந்தி திரையுலகம்





தமிழ், தெலுங்கு, மலையாள கதாநாயகிகள் இந்தி படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறார்கள். அதிக சம்பளம், பெரிய நட்சத்திர அந்தஸ்து, உலகளாவிய வியாபாரம் போன்றவை அவர்களை இந்தி பக்கம் இழுக்கின்றன.  ஆனால் அங்கு தலைகாட்டிய நடிகைகள் பலருடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. திறமை இருந்தும் அவர்களால் நிலைக்க முடியாமல் போனது. ஸ்ரீதேவி, ஹேமாமாலினிக்கு பிறகு தென்னிந்திய நடிகைகள் யாரும் இந்தியில் ஆதிக்கம் செலுத்தவில்லை.  இந்தி ‘கஜினி’யில் நடித்து ஒரு படத்திலேயே உச்சத்துக்கு போய் மற்ற இந்தி நடிகைகளை கதி கலங்க வைத்த அசினுக்கு அதற்கு பிறகு நடித்த படங்கள் கைகொடுக்கவில்லை. சல்மான்கான், அபிஷேக் பச்சன், அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான் என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தும் அவரால் வளர முடியவில்லை.
இதனால் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டே விலகி விட்டார்.


  ரஜினிகாந்துடன் ‘சிவாஜி’யில் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தில் இருந்த ஸ்ரேயாவுக்கு தெலுங்கிலும் கை நிறைய படங்கள் இருந்தன. அவருக்கும் இந்தி பட ஆசை வந்ததால் மும்பைக்கு பறந்தார். இதுவரை 10 இந்தி படங்களில் நடித்தும் அவைகள் சரியாக ஓடாததால் முன்னணி நடிகைகள் இடத்துக்கு வர முடியவில்லை. தற்போது சிம்புவுடன் தமிழ் படத்தில் நடிக்க வந்து விட்டார்.  தமிழில் 10 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வரும் திரிஷாவையும் இந்தி பட ஆசை விட்டு வைக்கவில்லை. ‘காட்டா மீட்டா’ படத்தில் அக்‌ஷய்குமாருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்தது. இதனால் இந்தி ஆசையை மூட்டைகட்டி விட்டு மீண்டும் தமிழுக்கே வந்து விட்டார்.


 காஜல் அகர்வாலுக்கு தமிழ், தெலுங்கு மார்க்கெட் நன்றாகவே இருந்தது. அவர் நடித்த படங்கள் வசூல் குவிக்கவும் செய்தன. ஆனால் இவரும் ‘சிங்கம்’ படத்தின் இந்தி பதிப்பில் அஜய் தேவ்கான் ஜோடியாக நடித்து இந்தி பட உலகுக்கு அறிமுகமானார். ‘ஸ்பெஷல் 26’ என்ற படத்தில் அக்‌ஷய்குமாருடன் நடித்தார்.  இந்த இரண்டு படங்களும் வெற்றிகரமாக ஓடினாலும் கதாநாயகர்களுக்கே பெயர் வாங்கி கொடுத்தன. காஜல் அகர்வால் கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்டார். தொடர்ந்து ரன்தீப் கோடாவுடன் நடித்த டி லப்சூன் கி கஹானி படம் தோல்வி அடைந்ததால் இந்தி பட உலகம் அவரை ஓரம்கட்டி விட்டது.  தமன்னாவுக்கு இந்தியில் அஜய்தேவ்கான், அக்‌ஷய்குமார், சயீப் அலிகான் ஆகியோருடன் நடித்த 3 படங்களும், தோல்வி அடைந்து அவருடைய இந்தி பட கனவை தகர்த்து விட்டது. மீண்டும் தென்னிந்திய மொழி படங்களுக்கு திரும்பி வாய்ப்பு தேடுகிறார்.


லக் படத்தில் அறிமுகமாகி 8 இந்தி படங்களில் நடித்து விட்ட சுருதிஹாசனை அங்குள்ளவர்கள் அழகான நடிகை என்று புகழ்கிறார்கள். ஆனாலும் முன்னணி நடிகை பட்டியலில் அவரை சேர்க்காமல் வைத்துள்ளனர்.  டாப்சி இந்தி பட ஆசையால் மும்பைக்கு போய் 3 படங்களில் நடித்து விட்டார். அவை வெற்றிகரமாக ஓடாததால் முன்னுக்கு வர முடியவில்லை. இந்திக்கு போனதால் அவருக்கு வர வேண்டிய தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகளும் பறிபோய் விட்டன.  இதுபோல் இலியானாவும் இந்தி பட ஆசையில் போய் படங்கள் தோல்வி அடைந்ததால் பின்னுக்கு தள்ளப்பட்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி விடலாமா என்ற யோசனையில் இருக்கிறார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad