Type Here to Get Search Results !

சிறந்த டெஸ்ட் அணியில் அஸ்வின்




2015-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை 'தி கார்டியன்' ஊடகத்தின் கிரிக்கெட் எழுத்தாளர்களான மைக் செல்வே, விக் மார்க்ஸ், ராப் ஸ்மித் உள்ளிட்டோர் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் ஒரே இந்திய வீரராக அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.  இந்த அணிக்கு அலிஸ்டர் குக் கேப்டன். அவர் 2015-ல் 1364 ரன்களை 54.56 என்ற சராசரியில் எடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 263 ரன்களை இவர் ஒரு இன்னிங்சில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இவருடன் தொடக்க வீரராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு 1,517 ரன்களை 54.87 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் நியூஸிலாந்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரின் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் சதமும், பிறகு பெர்த்தில் 253 ரன்களையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
3-வது நிலையில் நியூஸிலாந்தின் டாப் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன். இவர் 1,172 ரன்களை 90.15 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.  4-ம் நிலையில் ஜோ ரூட். இவர் 1,385 ரன்களை 60.21 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.  அடுத்ததாக ஸ்டீவ் ஸ்மித், இவர் 1,474 ரன்களை 73.70 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.  மிகவும் ஆச்சரியகரமான தேர்வு பாகிஸ்தானின் யூனிஸ் கான். இவர் 789 ரன்களை 60.69 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இந்த நிலைக்கு ஏ.பி.டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆடம் வோஜஸ் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் தேர்வாளர்கள் யூனிஸ் கானைத் தேர்வு செய்துள்ளனர்.  அதே போல் விக்கெட் கீப்பிங்கில் தினேஷ் சந்திமால் தேர்வும் ஆச்சரியமே. இவர் 901 ரன்களை 47.42 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 21 கேட்ச்கள், 4 ஸ்டம்பிங்.
பந்து வீச்சு வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 17.2 என்ற சராசரியில் 62 விக்கெட்டுகளை இந்த ஆண்டு கைப்பற்றியுள்ளார்.  இவருக்கும் பாகிஸ்தான் ஸ்பின்னர் யாசிர் ஷாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இவர் 7 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் தென் ஆப்பிரிக்காவை கருணையற்ற விதத்தில் நொறுக்கியதை சுட்டிக்காட்டி தேர்வாளர்கள் அஸ்வினைத் தேர்வு செய்துள்ளனர். 4 டெஸ்ட் போட்டிகளில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணிக்கு எதிராக 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின், யாசீர் ஷாவை விட அதிகம் ஸ்கோர் செய்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் அவர் 36 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற ரீதியில் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதும் அஸ்வினுக்கு சாதகமாக அமைந்துள்ளது.  மேலும், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad