Type Here to Get Search Results !

இன்று இரண்டாவது T20 கிரிக்கெட் பழிதீர்க்குமா இந்தியா









புவனேஷ்வர்: இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டி இன்று கட்டாக்கில் நடக்கிறது. இதில், இந்திய அணி தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை கையாண்டு, பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 ‘டுவென்டி–20’, 5 ஒரு நாள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் நடக்கிறது.                   கடந்த போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா அதிரடி துவக்கம் தந்தார். ‘டுவென்டி–20’ அரங்கில் இவரின் முதல் சதம் அணிக்கும் பலம் சேர்த்தது. கோஹ்லியின் ரன் குவிப்பும் நம்பிக்கை அளித்தது. ஷிகர் தவான், ரெய்னா பெரியளவில் சோபிக்கவில்லை. இவர்களின் பங்களிப்பு இன்று நிச்சயம் தேவை. நட்சத்திர வீரர் ரகானேவின் இடத்தை பிடித்த ராயுடு சொதப்பினார். இன்று மீண்டும் ரகானே வருவதற்கு வாய்ப்பு அதிகம்.                   பலவீனம்: பந்துவீச்சுதான் அணியின் பலவீனமாக உள்ளது. மூன்று மாதத்திற்குப்பின் களம் கண்ட கேப்டன் தோனி, ‘சுழல்’ வீரர் அக்சர் படேலை நம்பினார். ஆனால், இவரின் 16வது ஓவர்தான் அணியின் (22 ரன்கள்) வெற்றி வாய்ப்பையே பறித்தது. இந்த ‘வள்ளல்’ குணத்தால், இன்று அமித் மிஸ்ரா களமிறங்கலாம். ‘சீனியர்’ வீரர் அஷ்வினும் கைகொடுக்காதது ஏமாற்றம்.                   ‘யார்க்கர்’ குறைபாடு: கடந்த போட்டியில் வேகப்பந்துவீச்சும் எடுபடவில்லை. புவனேஷ்வர், அறிமுக வீரர் ஸ்ரீநாத் அரவிந்த் விக்கெட் வீழ்த்த திணறினர். டிவிலியர்ஸ் போன்ற ஆபத்தான வீரர்களை ‘யார்க்கர்’ வீசித்தான் அவுட்டாக்க முடியும். இதில் நமது பவுலர்களுக்கு போதுமான அனுபவம் இல்லை. இதனால்தான், தோனியே பவுலிங் குறித்து கவலை தெரிவித்தார். ஒட்டுமொத்த அணியும் எழுச்சி பெற்றால் மட்டுமே, தொடரை இழக்கும் அபாயத்திலிருந்து தப்ப முடியும்.                   மும்மூர்த்திகள்: தென் ஆப்ரிக்க அணியை டிவிலியர்ஸ், ஆம்லா, டுமினி என இந்த மும்மூர்த்திகள் துாணாக பாதுகாக்கின்றனர். டிவிலியர்ஸ் களத்தில் சற்று நிலைத்து விட்டால், இவரை வெளியேற்றுவது கடினம். கடந்த போட்டியில் ‘சுழல், வேகம்’ என இந்திய பந்துவீச்சை டுமினி சிதறடித்தார். இவரின் அச்சுறுத்தல் இன்றும் தொடரலாம். பெகார்டியனும் ‘பார்மில்’ இருக்கிறார். கேப்டன் டுபிளசி சொல்லிக் கொள்ளும்படி இல்லை.             வேகப்பந்துவீச்சில் அபாட் விக்கெட் வீழ்த்தினாலும், டி லாங்கே, ரபாடா ஜொலிக்கவில்லை. இம்ரான் தாகிர் இன்று ‘சுழல்’ ஜாலம் காட்டலாம். மழை வருமா கடந்த 2 நாட்களாக கட்டாக்கில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கியிருந்தது. மழை தொடரும் என்பதால், போட்டி கைவிடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று மழை வர 20 சதவீதம் வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad