Type Here to Get Search Results !

பொறியியல் இனி மெல்ல சாகும்!






பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் விதிமுறைகளை குறித்து தான் இன்று சமூக வலைதளங்கள் எங்கும் பேச்சு. ஆனால் இந்த விதிமுறைகள் எதுவும் இன்று நேற்று முளைத்தவை அல்ல. அப்படி இருக்கும் போது திடீரென்று எதற்காக இதற்கு எதிரான போராட்டம் என்ற் கேள்வி கட்டாயம் நம் மனதில் எழும்.

இன்று பலரின் போராட்டம்  ஒரு ஸ்டேட்டஸில் ஆரம்பித்து, சில பல கமெண்ட் சண்டைகளில் முடிந்து விடுகிறது. சமூக வலைதளங்களின்  பேராற்றலுக்கு இதுவே சான்று. போராட சாலைகளில் இறங்க வேண்டாம், மறியல் வேண்டாம், தடியடி வேண்டாம். ஒரு ஸ்மார்ட்ஃபோன் போதும் இருந்த இடத்திலேயே உலகை மாற்றலாம்.

ஒரு காலத்தில், ஊர் உலகமே சென்று பொறியியல் கல்லூரிகளில் விழுந்தது, ஆனால் இன்று நிலைமை தலைகீழ். ஒவ்வொரு கல்லூரியை மற்றொன்றை தாண்டி முன்னேற கையில் எடுத்துகொண்ட ஆயுதம் தான் பரீட்சை முடிவுகள். மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும் என்பதை மறந்து, அவர்களை புத்தகங்களை மனப்பாடம் செய்யும் கருவிகளாக மாற்றவே விழைந்தனர்.இதற்காக கொண்டு வந்த கட்டுபாடுகளும் விதிமுறைகளும் கல்லூரியை சிறையாக மாற்றியது. ஆனாலும் பெற்றோர் முந்தி அடித்து தங்கள் பிள்ளைகளை எப்படியாவது லட்சங்களை கொட்டியாவது அங்கே சேர்த்து விட துடிக்கிறார்கள். நல்ல வேலை 100 % பிளேஸ்மெண்ட் என கல்லூரிகள் போடும் வலைகளில் சிக்குவது ஒன்றும் அறியாத கிராமப்புற பெற்றோர் மட்டும் அல்ல. கண்டிப்பு இருந்தால் தான் ஒழுக்கம் வரும் என நம்பும் அனைத்து பெற்றோர்களும் தான்.

அது தான் இந்த கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமாகிவிடுகிறது, கண்டிப்புக்கு இவர்கள் கொடுக்கும் வரையறைகளில் தான் பிரச்சனை.  அந்த பட்டியல் அனைவரும் அறிந்ததே, ஆனால் இத்தகைய ஹிட்லர் ஆட்சி இருந்தால் தான் மாணவர்கள் படிப்பார்கள் என்பதில் துளியும் உண்மை இல்லை.
கல்லூரி காலம் பல வகையான அனுபவங்களை கற்று தர வேண்டும், அவற்றை புத்தகங்களுக்குள் அடக்குவது தற்காலிகமான நல்ல மதிப்பெண்களை தந்தாலும், காலப்போக்கில் அவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் நிராகரிக்கும் நிலைக்கே கொண்டு செல்கிறது.

இந்தியாவில் வருடத்திற்கு 600,000  பொறியியலாளர்கள் வெளி வருகிறார்கள் , ஆனால் இவர்கள் ஒரு சொற்ப அளவிலான மாணவர்களே வேலை வாய்ப்புகளுக்கு தயாராக இருக்கின்றனர். பி.பி ஓ வில் கூட நல்ல வேலைகளுக்கு  11.5 % பொறியியலாளர்களே தகுதி பெறுகிறார்கள். பல மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாடுவது சிக்கலாக இருப்பதால், இந்த வேலை வாய்ப்பு  பறி போகிறது.

முழுமையான கல்வி என்பது வகுப்பறைக்குள் மட்டும் அல்ல, வெளியுலக அனுபவங்களிலும் தான். எத்தனையோ படிப்புகள் இருக்க பொறியியலிலும், மருத்துவத்திலும் நாம் ஆட்டு மந்தை போல விழுவதால் தான் இந்த நிலை. ஏ. ஐ. சி. டி. ஈ. எனப்படும் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி மன்றம், இளங்கலை பொறியியல் சேர்க்கையை 40 % குறைக்க முடிவு எடுத்து உள்ளது. ஐ.ஐ.டி, பி. ஐ.டி. எஸ் போன்ற பெரிய கல்லூரிகளை தவிற மற்ற பல கல்லூரிகளில் இருந்து வேலைக்கு எடுக்கப்படும் மாணவர்கள் தகுதியற்று இருக்கின்றனர்.

நாஸ்காம்  2011 இல் நடத்திய ஆராய்ச்சியின் படி 17.5 % மாணவர்கள் மட்டுமே சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்ய தகுதி பெற்றிருந்ததாக கூறுகிறது. ஆசிரியர், மற்றும் கல்லூரியின் தரத்தை உயர்த்தவே இந்த முடிவு.

சமூகத்தை புரிந்து கொள்ள வேண்டிய மாணவர்களை சமூக வலைத்தளங்களையே பயன்படுத்த கூடாது என தடுத்து, எடுத்ததற்கெல்லாம்  அபராதம் விதித்து, உடை , சிகை,பேச்சு என எந்த வித சுதந்திரமும் இல்லாமல். நான்கு சுவர்களுக்குள் பாடம் நடத்தி, அப்படி என்ன  கல்வியை கொடுத்த விட முடியும்?

மாணவர்களும் பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad