Type Here to Get Search Results !

சினிமா பற்றி படிக்கனுமா??

சினிமா பற்றி படிக்கனுமா??




சினிமா தொடர்பான படிப்புகள் எப்படிப்பட்டவை?
பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகள்தான் சிறந்த எதிர்காலத்தை அமைத்து தருபவை என்று நினைத்த காலமெல்லாம் போய்விட்டது. இன்று இளைஞர்களின் கவனம் பல பக்கங்களிலும் திரும்பிவிட்டது.
படத் தயாரிப்புத் துறை என்ற ஒரு பிரிவு, பல இளைஞர்களை அதன்பால் ஈர்த்து வருகிறது. எடிட்டிங், அனிமேஷன், திரைக்கதை எழுதுதல், டைரக்ஷன் மற்றும் நடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இத்துறையில் இருப்பதால், மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமானதை தேர்வு செய்துகொள்ள முடிகிறது. இதுபோன்ற தொழில்துறைகளில் பணியாளர் குறைப்பு, பொருளாதார மந்தநிலை போன்ற பிரச்சினைகள் பாதிப்பதில்லை. மேலும், சம்பளம் பெறுவதற்காக 1ம் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
சினிமா தொடர்பான படிப்பின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அதன் பணி தன்மைகள் ஆகியவைப் பற்றி இப்போது அலசலாம்.
சவுன்ட் டிசைனர்



ஒரு திரைப்படத்திற்கான ஒலி அமைப்புகளை, திட்டமிடுதல் மற்றும் வழங்குதல் பணியை சவுன்ட் டிசைனர் மேற்கொள்கிறார். ஒரு படத்தின் ஸ்கிரிப்டை படித்து, சவுன்ட் டிசைனர்களும், கம்போசர்களும், அந்த காட்சிகளுக்கு பொருந்தும் வகையில் ஒலி அமைக்கிறார்கள்.
சில திரைப்பட இயக்குநர்களுக்கு, இந்த மாதிரி காட்சிக்கு இந்த மாதிரி இசை இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று சரியாக கணிக்கத் தெரியும். ஆனால், அவ்வாறு முடியாதவர்கள், சவுன்ட் டிசைனர்களை நம்பியிருப்பார்கள். கஷ்டப்பட்டு, ஏராளமான பணத்தைக் கொட்டி எடுக்கும் படத்தை, ஒரு மோசமான சவுன்ட் டிசைனரை வைத்து வீணடிக்க யாரும் விரும்பமாட்டார்கள்.
ஒரு திரைப்பட காட்சியின் தாக்கத்தை சிறப்பான வகையில் அதிகரிக்க, ஒரு திறமையான சவுன்ட் டிசைனர் சரியான வகையில் பணியாற்றுகிறார்.
சினிமாட்டோகிராபி


ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில், சினிமாட்டோகிராபரின் பணி மிகவும் முக்கியமானது. ஒரு படம் திரையில் வெற்றிகரமாக நுழைவதில், பெருமளவு சினிமாட்டோகிராபரையே சார்ந்துள்ளது. கேமராவை கையாளுதல், சரியான கோணத்திலிருந்து சரியாக படமெடுத்தல் ஆகியவற்றை மேற்கொண்டு, அவற்றை மக்களுக்கு பிடித்த வகையில் சரிசெய்து, திரைக்கு கொண்டுவந்து வெற்றியை அளித்தல், ஒரு சினிமாட்டோகிராபரின் பணி.
இன்றைய சினிமாத் துறையில், சினிமாட்டோகிராபி என்பது ஒரு முக்கிய அம்சம். ஒரு நல்ல சினிமாட்டோகிராபி, சில சமயங்களில், இயக்கப் பணிகளிலும் பங்காற்றுகிறது. இதன்மூலம், ஒரு திரைப்படத்தின் தரம் அதிகரிக்கிறது.
வசனம் எழுதுதல்(Script writing)



திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், ரேடியோ நிகழ்ச்சிகள் மற்றும் வீடியோ கேம் ஆகியவற்றுக்கு எழுதுதல் என்பது ஒரு தனிக் கலை. ஒரு திரைப்பட தயாரிப்பு பணியின் முதல்கட்டப் பணியாக இந்த கதை எழுதும் பணி திகழ்கிறது. வசனகர்த்தா என்பவர், ஒரு திரைப்படத்தில், முக்கியப் பங்களிப்பை மேற்கொள்கிறார். ஒரு வகையில், இயக்குநருக்கு சமமான பங்களிப்பு இவருடையது எனலாம்.
திரைக்கதை என்பது, "காட்டு, ஆனால் சொல்லாதே" என்ற கருத்துடன் ஒத்ததாகும். ஏனெனில், வெறுமனே ஒரு கதையை சொல்வதல்ல இந்தப் பணி. ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் உணர்ச்சிகளை கோர்த்து, அவற்றின் சிறப்புத் தன்மையை தெரிவித்து, படத்திற்கு ஏற்றவாறு அவற்றை மெருகேற்றிக் கொண்டுவரும் பெரிய பணியாகும் இது. படத்தின் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற பொருத்தமான, கவரக்கூடிய வசனங்களை எழுத வேண்டும்.
இயக்கம் (டைரக்ஷன்)

திரை வசனத்திற்கு உயிர் கொடுத்து, ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து, முழுமையான ஒரு படத்தை உருவாக்கித் தரும் பெரிய பொறுப்பு இயக்குநருடையது. இயக்குநரே ஒரு படத்தின் தலைவர்.
ஒரு திரைப்படத்தை இயக்கும் பணி என்பது, ஏதோவொரு பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வதைப்போல் சிலருக்கு சாதாரணமாக தெரியலாம். ஆனால், உண்மை முற்றிலும் வேறுமாதிரியானது. கடும் உழைப்பு, பதற்றம், பொறுமை, அதிக திறன், கற்பனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட பணியாகும் இது.
ஒரு இயக்குநர், தான் பணியாற்றும் படத்தின் திரைக்கதையில் நன்கு ஊறித் திளைக்க வேண்டியுள்ளது. அப்போதுதான், ஒரு கதையின் தன்மையை உணர்ந்து, அதை மக்களை கவரும் வகையில் தயாரித்து அளிக்க முடியும். சில இயக்குநர்கள், திரைக்கதை எழுதி, படத்தை இயக்குவார்கள். சிலர் படத்தை மட்டுமே இயக்குவார்கள். ஆனால், சிலரோ, கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, பாடல் எழுதுதல், இசை மற்றும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள்.
ஒரு கதையை சினிமா பாணியில் சிந்திக்கும் திறமை ஒரு இயக்குநருக்கு கட்டாயம் இருக்க வேண்டும். இயக்குநருக்கான முழுத் திறமைகள் சிலருக்கு இயல்பிலேயே இருக்கலாம். ஆனால், பலருக்கு முயற்சி மற்றும் சரியான படிப்பு மற்றும் பயிற்சிகளின் மூலமே வாய்க்கப்பெறும்.
எடிட்டிங்


திரைப்பட எடிட்டிங் பணி என்பது, பெரும்பாலும் படம் எடுக்கப்பட்ட பிறகான பணிகள் தொடர்பானதாகும். ஒரு படத்தின் ஒவ்வொரு காட்சி மற்றும் அம்சத்தையும் சிறப்பான முறையில், தேவையான அளவில் எடிட் செய்து, அப்படத்தை அழகானதாய் மாற்றி, ரசிகர்களின் பார்வைக்கு கொண்டுவரும் பணி எடிட்டருடையது.
தேவையற்ற சீன்கள் மற்றும் வசனங்களை நீக்கி, தேவையானவற்றை மட்டுமே தேர்வுசெய்து, ஒரு படத்தை ஒட்டுமொத்தமாக சீர்படுத்தும் வேலையை செய்வது எடிட்டிங் பணி. ஒரு சினிமாவில், சினிமாட்டோகிராபி அல்லது நடிகர்களின் நடிப்பு சரியில்லாமல் இருக்கலாம். இதனால், அந்தப் படத்தின் அழகியல் பாதிக்கப்பட்டு, ரசனைக்குரியதாய் இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம்.
ஆனால், எடிட்டிங் பணியை செய்வரின் திறமையால், இந்தக் குறைகளை திறமையாக சரிசெய்து, படத்திற்கு தேவையான அழகியலை மீட்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே, ஒரு படத்தின் எடிட்டர் என்பவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்.
சினிமா தொடர்பான படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய அகில இந்திய கல்வி நிறுவனங்கள்
Film and Television Institute of India - Pune
Whistling Woods Institute - Mumbai
Asian Academy of Film and Television - Noida
School of Arts and Aesthetics Jawaharlal Nehru University - New Delhi.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad