Type Here to Get Search Results !

49ஓ - படம் எப்படி?





விளைநிலங்களை மலடாக்கி கட்டிடங்கள் கட்ட அலையும் மனிதர்களுக்குச் சூடு போடும் படமாக உருவாகியிருக்கிறது இந்தப்படம். ஒரு கிராமத்தின் வழியாகத் தேசியநெடுஞ்சாலை அமையவிருக்கிறது என்று முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட கூட்டணி, அந்தஊரில் இருக்கும் விளைநிலங்களை வளைத்துப் போட நினைக்கிறது. விவசாயி என்றாலே வறுமையும் இருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி நிலங்களைக் கையகப்படுத்துகிறார்கள். நிலங்களையும் பிடுங்கிக்கொண்டு பேசியபடி பணமும் தராமல் ஏமாற்றுகிறார்கள். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களை மீட்டுத்தர முடிவெடுக்கும் கவுண்டமணி, அதை எவ்வாறு செயல்படுத்துகிறார் என்பதுதான் படம். விவசாயிகளின் நிலங்களை மீட்க கவுண்டமணி முயலும் நேரத்தில் அந்தத் தொகுதிக்குச் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அதனால் படத்தில் அரசியல் நையாண்டிகளுக்கும் பஞ்சமில்லை.

வசனங்களில் தமிழகத்தின் எல்லாக்கட்சிக்காரர்களையும் வஞ்சகமில்லாமல் ஓட்டியிருக்கிறார்கள். விஜய், அஜித் போன்ற பெரியஆக்ஷன் ஹீரோக்கள் நடிக்கவேண்டிய கதை. சண்டை மட்டும் போடாமல் மற்ற எல்லா வேலைகளையும் செய்து கவுண்டமணி ஈர்க்கிறார். ஒன்மேன் ஆர்மி மாதிரி படத்தின் பளு மொத்தத்தையும் அவரே சுமந்திருக்கிறார். நீண்டஇடைவெளிக்குப் பிறகு திரும்பிவந்திருக்கும் கவுண்டமணி கொஞ்சமும் சக்தி குறையாமல் வந்திருக்கிறார். தோற்றத்தில் கொஞ்சம் மாற்றம் இருந்தாலும் குரலிலும் உடல்மொழியிலும் எவ்வித மாற்றமும் இல்லை. அதே நக்கல் அதே நையாண்டி. கூடவே நல்லகருத்துகளையும் சொல்லிக் கைதட்டல் பெறுகிறார்.



தொடக்கத்தில் தன் சொல்லை மீறி ஊர் விவசாயிகள் எல்லாம் நிலங்களை விற்பதைப் பார்த்து கையறுநிலையில் தவிப்பதும், ஏமாந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொள்வதைக் கண்டு இனி ஒரு மரணம் நடக்கக்கூடாது என்று முடிவெடுத்துக் களமிறங்குவதும் கவுண்டமணிக்குப் பொருத்தமாக இருக்கிறது. கவுண்டமணிக்கு அடுத்து வட்டிக்காரராக வரும் சோமசுந்தரமும், அரசியல்வாதியாக வருகிற திருமுருகனும் கவனத்தை ஈர்க்கிறார்கள். சோமசுந்தரத்தின் வேடம் இன்றைய சமுகஅவலத்தின் பிரதிபலிப்பு. தன்னுடைய நடிப்பின் மூலம் அதற்கு அமலும் வலுச்சேர்த்திருக்கிறார் சோமசுந்தரம்.

நிலங்களை விற்பதற்காக விளம்பரப்படமெடுக்கும் நான்கடவுள் ராஜேந்திரன், சாம்ஸ் ஆகியோர் வரும் காட்சிகளில் வெடிச்சிரிப்பு. முதன்முறையாக சுடுகாட்டுக்காக நிலம் விற்பதுபோன்ற காட்சிகளை வைத்துக்கொண்டு இன்றைய உறவுகளின் நிலையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். திரைக்கதை முழுவதையும் கவுண்டமணி ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் காதல், சண்டை போன்ற எதுவும் இல்லை. கே வின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. அம்மா போல அள்ளித்தரும் மழைதான் பாடலில் மண்ணின் பெருமைகளையும், இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே இருப்பது என்கிற தேனிசைச்செல்லப்பா பாடியிருக்கும் பாடலில் விழிப்புணர்வையும், ஓட்டுப்போடுங்க பாடலில் அரசியல் அவலங்களையும் விளக்கியிருக்கிறார் பாடலாசியர் யுகபாரதி.

    தேர்தல்நேரத்தில் ஓட்டுகளை விற்பது, பிச்சைக்காரரைத் தேர்தலில் நிறுத்துவது ஆகியனவற்றை வைத்துக்கொண்டு தேர்தல்முறையை மிகவும் மலினமாக நினைக்கவைத்திருக்கிறார்கள். வசனங்களில் இன்றையநாட்டுநடப்புகளை விமர்சனம் செய்து பாராட்டுப் பெறும் இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கூடுதல்கவனம் செலுத்தியிருக்கலாம். பல இடங்களில் படம் தொய்வடைகிறது.

விவசாயத்தைப் பாதுகாக்கவேண்டும் என்பதோடு நோட்டோ எனப்படும் 49ஓ பற்றி மக்கள் மனதில் இருக்கும் ஐயங்களையும் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர். ஒரு தொகுதியல் வேட்பாளர்களைவிட நோட்டோவுக்கு அதிகவாக்குகள் கிடைத்தால், அங்கு போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் அவர்களை நிறுத்திய கட்சிகளுக்கும் என்ன தண்டனை? என்ற கேள்வி முக்கியமானது.






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad