Type Here to Get Search Results !

திடீர் வேலை இழப்பு... சமாளிக்க 10 வழிகள்







பொருளாதாரம் ஒருபக்கம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இந்த வருடம் வேலைவாய்ப்பு பிரகாசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள் சில தங்களின் தொழிற்சாலைகளை மூடி வருகின்றன. இதனால் பலர் வேலை இழந்து வருகின்றனர். ஐ.டி கம்பெனிகளிலும் ஆட்குறைப்பு அதிகமாகி வருகிறது.  வேலை இழப்பு ஏற்படும்போது அடுத்த வேலையைத் தேடிக்கொள்ள சில மாதங்களாவது ஆகும். அந்தச்சமயத்தில் பொருளாதார ரீதியாகப் பிரச்னை இல்லாமல் இருந்தாலே எளிதாகவும், நிம்மதியாகவும் வேலை தேட முடியும். மாத சம்பளம் தடைபடும்போது அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்வது அவசியம். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொருளாதார ரீதியாக சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.

1. வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சேமிப்பைத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் நீண்ட காலத்தில் சேமிப்பு அதிகம் இருக்கும். பெரும்பாலும், 23-25 வயதுக்குள் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார்கள் இன்றைய இளைஞர்கள். வேலைக்குச் சேர்ந்தது முதல் மாத சம்பளம் வாங்கியதும் குறைந்தபட்சம் மாதம் ரூ.2 ஆயிரமாவது சேமிப்பது நல்லது. ஆக, ஒரு வருடத்துக்கு ரூ.24 ஆயிரம் சேமிப்பாக இருக்கும். அப்போதுதான் இதுபோன்ற எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும்போது அதைச் சமாளிக்க எளிதாக இருக்கும்.

2. எப்போதுமே மாத சம்பளத்தைப் போல, 3-லிருந்து 6 மடங்கு தொகையைக் கையில் வைத்திருப்பது நல்லது. மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் எனில், ரூ.60 ஆயிரத்திலிருந்து ரூ.1.2 லட்சம் வரை வைத்திருப்பது முக்கியம். இந்த அளவு தொகையைச் சேமிப்பாக வைத்தபிறகே, பிற தேவைகளுக்காக பணத்தைச் சேமிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். அவசரத் தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் இந்தப் பணத்தில் 50 சதவிகிதத்தை தனியாக ஒரு வங்கி சேமிப்புக் கணக்கிலும், 50 சதவிகித தொகையை லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் வைத்திருப்பது நல்லது.

3. கடன் வாங்கி எந்த முதலீட்டையும் மேற்கொள்ளக் கூடாது. அதாவது, சிலர் தங்களுடைய நண்பர்கள் வாங்குவதைப் பார்த்து, தனிநபர் கடனை வாங்கி, நிலம் வாங்குவார்கள். இது முற்றிலும் தவறு. காரணம்,  வாங்கிய கடனுக்கான வட்டியைவிட, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. கையில் பணம் இருந்தால் மட்டும் முதலீடு செய்வது சிறப்பாக இருக்கும். மேலும், மாத சம்பளத்தில் 30-50 சதவிகிதத்துக்குமேல் கடன் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. முடிந்தவரை தனிநபர் கடனை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இதற்கு வட்டி விகிதம் அதிகம்.

4. வேலைக்குப் போகிறோம், அதன் மூலம் சம்பளம் கிடைக்கிறது என்றில்லாமல், சில முதலீடுகள் மூலமாக வருமானம் கிடைக்கக்கூடிய வழிகளை மேற்கொள்வது நல்லது. பெரும்பாலான வர்கள் தங்கத்தை சிறந்த முதலீடாக நினைப்பார்கள். தங்கத்தின் விலை முன்புபோல் அதிக லாபம் தருவதாக தற்போது இல்லை. தவிர,  தங்க நகையை விற்கும்போதும் சேதாரம் என்கிற வகையில் கணிசமான தொகையை இழக்க வேண்டியிருக்கும். இதனால் குறைவான லாபமே கிடைக்கும். எனவே, முதலீட்டின் மூலமாக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதைப் பார்த்து முதலீடு செய்வது நல்லது.

5. பள்ளி கல்விக் கட்டணம், இன்ஷூரன்ஸ் பிரீமியம் ஆகியவற்றை ஆண்டின் துவக்கத்தில் மொத்தமாகச் செலுத்திவிடுவது நல்லது. இப்படி செலுத்தும்போது தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்குத் தேவைப்படும் தொகைக்கு தனியாக வங்கியில் ஆர்டி கணக்கு ஆரம்பித்து, அதன்மூலம் சேமிக்கலாம். அப்போதுதான் வேலை இழப்பின்போதும் இதுபோன்ற முக்கியமான காரியங்கள் தடைபடாமல் இருக்கும்.

6. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கவர் செய்யும் வகையில் ஹெல்த் இன்ஷூரஸ் பாலிசி எடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக ஏற்படும் மருத்துவச் செலவுகளிலிருந்து தப்பிக்க முடியும். ஏனெனில், மருத்துவச் செலவு என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படும். அது வேலை இல்லாத நேரத்தில் நிகழும்போது கூடுதல் மன அழுத்தத்தை உருவாக்கும். மேலும், சிலர் நிறுவனத்தில் வழங்கும் குரூப் இன்ஷூரன்ஸை மட்டும் நம்பியிருப்பார்கள். இது முற்றிலும் தவறு. வேலையில் இல்லாத நேரத்தில் இது கைகொடுக்காது.

 7. சம்பளத்தொகை முழுவதுக்கும் செலவுகளைத் திட்டமிடாமல், 70 சதவிகிதக்குள் செலவுகளை வைத்துக்கொள்வது நல்லது. மீதமுள்ள 30 சதவிகித தொகையை முதலீடு செய்வது நல்லது. மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் எனில், அதில் ரூ.14 ஆயிரத்துக்குள் செலவுகளைத் திட்டமிட வேண்டும். தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. மீதமுள்ள தொகையை நல்ல முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.

 8. கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துவது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்கும் கடன்களை வாங்குவதில் தவறில்லை. காரணம், இதற்கு வட்டி குறைவு. அதுவே தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டு உபயோக பொருட்களுக்கான கடன் ஆகியவற்றை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது. சில நிறுவனங் கள் ஜீரோ சதவிகிதத்தில் கடன் கொடுக்கிறோம் என்று சொன்னால், உடனே கடன் வாங்க கையை நீட்டிவிடக்கூடாது. இது சாத்தியமா என்பதை நன்கு ஆராய்ந்தபின்பே வாங்க வேண்டும். முன்பின் யோசிக்காமல் கடனை வாங்கிவிட்டால், பிற்பாடு வேலை இழந்து நிற்கும்போது அசலையும் வட்டியையும் தவறாமல் கட்டுவது கூடுதல் சுமையாக இருக்கும்.

 9. பார்க்கும் பொருளை எல்லாம் வாங்க  வேண்டும் என நினைக்கக் கூடாது. அந்தப் பொருள் கட்டாயம் தேவையா, அதனால் என்ன பயன் என்பதையெல்லாம் யோசித்த பின்பே முடிவு எடுப்பது புத்திசாலித்தனம். வீட்டுக்கு ஏசி தேவை எனில், அதன் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, தேவை என்கிற பட்சத்தில் மட்டுமே வாங்க வேண்டும்.

10. வேலை இழப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து, அதே தவற்றைத் திரும்பவும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதோடு நின்றுவிடாமல் இடைப்பட்ட காலத்தில் வேலை சார்ந்த திறமைகள் மற்றும் தகுதியை வளர்த்துக்கொள்வது இக்கட்டான சூழலில் கைகொடுக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad