Type Here to Get Search Results !

"பேபி - விமர்சனம்"



                                             குழந்தைகளுக்கு பயம் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்த பேய் படத்தை குழந்தைகளை மையமாக வைத்தே எடுத்தால் எப்படியிருக்கும்? என யோசித்ததன் விளைவாக., வெற்றிகரமாக வெளிவந்திருக்கும் படம்தான் பேபி!.  இயக்குநர் பாரதிராஜாவின் வாரிசு மனோஜ் கதாநாயகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றிருக்கும் பேபி பீதியை கிளப்புகிறதா? பார்ப்போம்....காதல் மனைவியின் தலைபிரசவத்தில் குழந்தை இறந்தே பிறக்க., கண்விழித்த மனைவியின் கைகளில் குழந்தையை தரமுடியாததால் மனைவிக்கு வலிப்பு, ஜன்னி என உயிருக்கே ஆபத்து ஏற்பட்டதால், இரண்டாவது பிரசவத்திலாவது அழகிய வாரிசை, அவள் பிரசவ மயக்கம் முடிந்து கண்விழித்ததும் அவள் கைகளில் தவழ விடவேண்டும்...என மனைவியை மருத்துவமனை பிரசவ வார்டுக்குள் அனுப்பிவிட்டு, கைகளை பிசைந்து கொண்டு கதவோரம் காத்திருக்கிறார் ஹீரோ சிவா எனும் மனோஜ். ஆனாலும், பிறந்த குழந்தைக்கு மூச்சு திணறல்....இதயாதி, இத்யாதி பிரச்சினைகளால் பிறந்தவுடன் குழந்தையை மட்டும் சிறப்பு வார்டுக்கு தூக்கி செல்கின்றனர் சிஸ்டர்கள்.

                                          மனைவி கண்விழி்த்தால் குழந்தையை காணாது ஏதாவது விபரீதம் ஆகிவிடுமோ? என பயப்படும் மனோஜ்., ஏதாவது வேறு ஓரு குழந்தையை சற்றுநேரம் மனைவியின் அருகில் கொண்டுவந்து படுக்க வைக்க டாக்டர்களை வற்புறுத்துகிறார். அதன்படி., வேறு ஒருவர் அதேநேரத்தில் பிரசவித்த ஒரு குழந்தை மனோஜின் மனைவி அருகே படுக்க வைக்கப்பட., கண்விழித்து பார்க்கும் கதாநாயகி சக்தி எனும் ஷகிரா தன் குழந்தை என நினைத்து அந்த குழந்தையை உச்சிமோந்து உள்ளங்கையில் வைத்து தாய் உணவு ஊட்டுகிறார். அதேநேரம்., அவசர சிகிச்சைக்கு சென்று திரும்பும் மனோஜ் - ஷகிரா தம்பதிகளின் குழந்தை, நர்ஸால் திரும்ப தூக்கப்பட்டு வந்து இவர்களிடம் ஒப்படைக்கப்பட., மனோஜை முறைக்கும் ஷகிரா, தன் குழ்நதையை வாரி அணைக்கிறார். திரும்ப தாயிடம் எடுத்து செல்லப்படும் நாயகி ஷகிராவின் உயிர் காத்த சிசு திரும்பவும் மனோஜ்  - ஷகிரா தம்பதிகளிடமே வந்து சேர்கிறது. அது எப்படி? அதனால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? இதில் எங்கிருந்து? எவ்வாறு..?யாரால்...? பேய்பீதி கிளம்புகிறது...? எனும் கேள்விகளுக்கு வித்தியாசமும், விறுவிறுப்புமாக பதில் சொல்கிறது பேபி படத்தின் பீதியூட்டும் மீதிக்கதை!

                                          சிவாவாக மனோஜ்., நீண்ட இடைவெளிக்குப்பின் திரையில் தோன்றி தன் அப்பாவின் பெயரை காப்பாற்ற முற்பட்டிருக்கிறார். இத்தனை நாள் இப்படி ஒரு நடிப்பை எப்படி ஒளித்து வைத்துக்கொண்டிருந்தீர்கள் மனோஜ்...?! எனக் கேட்கும்வகையில் அவரது நடை, உடை, பாவனை , நடிப்பு எல்லாம் பக்காவாக இருக்கிறது. தன் காதல் மனைவியின் உயிர் காத்த குழந்தையையும் விடமுடியாமல் தன் குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் மனோஜ் போராடும் இடங்களில், நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார் மனிதர்!.

                                         சக்தியாக, மனோஜின் மனைவியாக ஊடலும், கூடலுமாக பட்டையை கிளப்பி இருக்கும் கதாநாயகி ஷகிராவும் பலே சொல்லும் அளவிற்கு பளிச்சிட்டிருக்கிறார். ஆனியாக, பேயாக வரும் அஞ்சலி ராவும் அவர் பங்கிற்கு விழிகளை உருட்டியே மிரட்டி இருக்கிறார். அதிதீயாக, தத்து குழந்தையாக வரும் பேபி ஸ்ரீவர்ஷினியும் சரி., அவந்திகாவாக மனோஜ் - ஷகிரா தம்பதிகளின் சொந்த குழந்தையாக வரும் பேபி சதன்யாவும் சரி நடிப்பில் நாயகர் நாயகி இருவரையுமே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள். அதில் பேயுடன் (என்னதான் பேய் என்றாலும்...) விளையாடும் பேபியும் சரி, பேயை கண்டு பயப்படும் பேபிக்கும் சரி., சரிசமமான முக்கியத்துவம் தந்து இருவரையும் முத்திரை பதிக்கவிட்டிருக்கும் இயக்குநர் டி.சுரேஷ் பாராட்டுக்குரியவர்.
               
                                       சதீஷ் - ஹரீஷின் மிரட்டும் இசை, ஜோன்ஸ் ஆனந்தின் மிளிரும் ஒளிப்பதிவு, பகத்சிங்கின் பக்கா படத்தொகுப்பு எல்லாம் சேர்ந்து டி.சுரேஷின் இயக்கத்தில் ஆங்காங்கே இருக்கும் ஒரு சில குறைகளை பெரிதாக வெளித்தெரியவிடாமல் பேய் பீதியை கிளப்புகிறது!
     

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad