Type Here to Get Search Results !

"பாலக்காட்டு மாதவன்"- விமர்சனம்




                                                 சந்தானம் (இனிமே இப்படித்தான்), வடிவேல் (எலி) ஆகியோரை தொடர்ந்து நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாக ஆகும் சீசன் இது... விவேக்கும் கதாநாயகன் ஆகியிருக்கிறார். காட்சிக்கு காட்சி, வரிக்கு வரி சிரிக்கும்படி கதை அமைந்திருப்பது, ‘பாலக்காட்டு மாதவன்’ அதிர்ஷ்டம்.

                                                விவேக்கும், சோனியா அகர்வாலும் கணவன்–மனைவி. ஒரே நிறுவனத்தில் (கால் சென்டரில்) பணிபுரிகிறார்கள். மனைவியை விட, அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார், விவேக். இதற்காக, ‘கால் சென்டர்’ வேலையை உதறிவிட்டு, ‘கால் டாக்சி’யில் டிரைவர் ஆகிறார். விதி, அவரை போலீஸ் நிலையத்துக்கு இழுத்து வருகிறது.

                                               அந்த வேலையில் இருந்து விலகி, அமைச்சர் ‘சுனாமி’ சுந்தரத்தின் நேர்முக உதவியாளராக சேருகிறார். விஷம் கலந்த உணவின் விபரீதம் காரணமாக அங்கிருந்தும் விவேக் விலக நேர்கிறது. வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் வயதான தாயை (ஷீலாவை) தத்து எடுத்தால், மாதம் இருபத்தைந்தாயிரம் கிடைக்கும் என்ற ஆசையில், அவரை விவேக் தத்து தாயாக வீட்டுக்கு அழைத்து வருகிறார். ஷீலாவை மாமியாராக சோனியா அகர்வால் ஏற்றுக் கொண்டாரா, இல்லையா? என்பது உணர்ச்சிகரமான ‘கிளைமாக்ஸ்.’

                                              அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி, ‘பாலக்காட்டு மாதவன்’ கதாபாத்திரத்துக்கு விவேக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவர் ஒவ்வொரு வேலையில் இருந்து விலகுவதும், அதற்கான காரணங்களும் அமர்க்களமான ஆரம்ப காட்சிகள். வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விவேக்கின் வசன வரிகள் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. சோனியா அகர்வாலைப் பார்த்து விவேக், ‘‘ரெண்டு குழந்தை பெத்தவ மாதிரியா இருக்கே...ஸ்டெல்லா மேரிஸ் காலேஜில் செகண்ட் இயர் படிக்கிற மாதிரி இருக்கே...’’ என்று சொல்வது; சோனியா அகர்வாலின் இடுப்பை பார்த்து விவேக் (பாரதிராஜா குரலில்), ‘‘இந்த லொகேஷனை ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கே...’’ என்று கூறுவது; ‘‘அஜந்தா ஓவியம் அனாமத்தாக கிடக்குது’’ போன்ற வசன வரிகள் உதாரணம்.

                                          விவேக்கின் வசன வரிகளை நியாயப்படுத்துகிற மாதிரி ‘தளதள’’ ‘‘கொழுகொழு’’ அழகியாக சோனியா அகர்வால். அவ்வப்போது முறைக்கிறார். கொஞ்சம் சிரிக்கிறார். நீளமான வசனம் பேசுவதற்கு சிரமப்பட்டு இருக்கிறார். அடிதடிக்கு அஞ்சாத துணிச்சல் மிகுந்த தாயாக ஷீலா. இவருடைய வருகைக்குப்பின், கதை உணர்ச்சிகரமான ரூட்டில் பயணிக்கிறது. கடைசி பத்து நிமிடங்களில் விவேக், ஷீலா, சோனியா அகர்வால் மூன்று பேரும் சேர்ந்து நெகிழவைத்து விடுகிறார்கள்.

                                        ‘‘சிலிண்டர் கம்பெனி சித்தப்பா மாதிரி இருக்கிறார்’’ என்று விவேக் ‘கமெண்ட்’ அடிக்கும் டி.பி.கஜேந்திரன், அலுவலக எம்.டி.யாக வரும் மனோபாலா, ஷீலாவின் பணத்துக்கு ஆசைப்பட்டு அவரை தத்து எடுக்க வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அமைச்சர் சுனாமி சுந்தரமாக வரும் ‘கயல்’ தேவராஜ், எம்.எல்.எம். கம்பெனியின் ஜெனரல் மானேஜராக வரும் இமான் அண்ணாச்சி, ஆட்டோ டிரைவராக வரும் செல் முருகன், கோகி மாமியாக வரும் ஆர்த்தி என படம் முழுக்க, ‘காமெடி’ திலகங்கள் கலகலப்பூட்டுகிறார்கள்.

                                         கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் படத்தின் உயிரோட்டமான அம்சங்கள். ஷீலாவின் மகன்கள்–மருமகள்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள், டி.வி. சீரியல் போல் நாடகத்தனமாக அமைந்துள்ளன. படத்தின் முடிவு, கண்கலங்க வைக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad