Type Here to Get Search Results !

தமிழகத்தில் பி.எட்.,படிப்புக்காக மேலும் 742 கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி !!





தமிழகத்தில், வரும் கல்வி  ஆண்டு(2015) முதல் புதிதாக அமலாக உள்ள, இரண்டு ஆண்டு பி.எட்., பட்டப் படிப்புக்கு, 742 கல்லுாரிகளுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டப்படி, ஜூலை முதல், மாணவர் சேர்க்கையை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், ஓராண்டு பி.எட்., படிப்பு அமலில் உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி., மற்றும் தேசிய கல்வியியல் ஆசிரியர் பயிற்சி பல்கலையான - என்.சி.டி.இ., இணைந்து, பி.எட்., படிப்பு தொடர்பாக, 2014ல், மத்திய அரசு அனுமதியுடன் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளன.

இந்த விதிகளின் படி, பி.எட்., படிப்புக் காலம், இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு கல்வியியல் தனியார் கல்லுாரிகள் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.ஆனால், 'வரும் கல்வியாண்டில், இரண்டு ஆண்டு பட்டப் படிப்பை அமல்படுத்த வேண்டும். அனுமதி பெறாத நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, என்.சி.டி.இ., அதிரடியாக அறிவித்தது. இதனால், இரண்டு ஆண்டு பட்டப் படிப்பை அமல்படுத்த, தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லுாரிகள், என்.சி.டி.இ.,யிடம் அங்கீகாரம் பெற்றுள்ளன. புதிய விதிகளின்படி, வரும் கல்வியாண்டில், தமிழகத்தில் பி.எட்., படிப்புக்கு, 723 கல்லுாரிகள்; உடற்கல்வி பயிற்சியான பி.பி.எட்., படிப்புக்கு, 19 கல்லுாரிகள் மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளன. எம்.எட்., படிப்புக்கு, 140 கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. புதுச்சேரியில் பி.எட்., படிப்புக்கு, 25; எம்.எட்., படிப்புக்கு, ஐந்து கல்லுாரிகளுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், வரும் கல்வி ஆண்டு முதல், இரண்டு ஆண்டு பி.எட்., படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.  ஜூலை முதல், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் எனவும் , நிலுவையில் உள்ள வழக்கில், புதிய உத்தரவுகள் வந்தால், அதன் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்  எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad