Type Here to Get Search Results !

செளரஸ் அசத்தல்: பார்சிலோனா வெற்றி






                சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதற் கட்ட காலிறுதியில், லூயிஸ் செளரஸ் அற்புதமாக இரண்டு கோல்கள் அடிக்க, பார்சிலோனா 3-1 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பி.எஸ்.ஜி.) அணியைத் தோற்கடித்தது.

பண்டல்ஸ் லிகா சாம்பியனான பேயர்ன் மியூனிச் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போர்டோ 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பாரிஸில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா, பிரான்ஸேச் சேர்ந்த பி.எஸ்.ஜி. அணிகள் மோதின. இப்ராஹிமோவிச் இல்லாமல் களமிறங்கிய பி.எஸ்.ஜி. அணிக்கு ஆரம்பமே சவால் காத்திருந்தது. பி.எஸ்.ஜி. கேப்டனான பின்கள வீரர் தியாகோ சில்வா தசைப்பிடிப்பு காரணமாக 20-ஆவது நிமிடத்திலேயே களத்தில் இருந்து வெளியேற, அவருக்குப் பதிலாக டேவிட் லூயிஸ் களமிறங்கினார். காயம் காரணமாக மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த லூயிஸ் களமிறங்கியது ஆச்சரியமே. குறிப்பாக, லூயிஸ் ஃபார்மில் இல்லை என்பதைப் புரிந்து பார்சிலோனா முன்கள வீரர் சௌரஸ் அபாரமாக இரண்டு கோல்கள் அடித்தார்.

இதையெல்லாம் விட, தியாகோ சில்வா களத்தில் இருந்த போதே மெஸ்ஸியின் துல்லிய பாஸே அபாரமாகக் கடத்திச் சென்று கோல் அடித்தார் பிரேசிலைச் சேர்ந்த நெய்மர்.

நெய்மர் 18-ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் பாதியில் பார்சிலோனா 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் சௌரஸ் 67, 79-ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார்.
பி.எஸ்.ஜி. அணி சார்பில் எடின்சன் கவானி மட்டுமே அவ்வப்போது, கோல் கம்பத்தை நோக்கி ஷாட் அடிக்க முயன்றார். 82-ஆவது நிமிடத்தில் கிரேகாரி வேன் டெர் வீல் அடித்த பந்தை ஜெரீமி மேத்யூ தடுக்க முயன்றார். ஆனால், பந்து கோல் கம்பத்துக்குள் புகுந்தது. இதனால் பி.எஸ்.ஜி.க்கு ஒரு ஆறுதல் கோல் கிடைத்தது. முடிவில் பார்சிலோனா வெற்றி பெற்றது.

இந்த சீசனில் பி.எஸ்.ஜி. தங்கள் சொந்த மண்ணில் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதோடு, சாம்பியன்ஸ் லீக் தொடரில் 2006-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக சொந்த மண்ணில் வெற்றியைப் பறிகொடுத்துள்ளது.

இரண்டாவது கட்ட காலிறுதி பார்சிலோனாவின் சொந்த மைதானத்தில் நடைபெறவுள்ளது. அந்த ஆட்டத்தில் இப்ராஹிமோவிச், மார்கோ வெராட்டி களம் புகுந்தாலும் பி.எஸ்.ஜி. அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


இதற்கிடையே, போர்ச்சுகலில் உள்ள போர்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் போர்டோ 3-1 என்ற கோல் கணக்கில் பேயர்ன் மியூனிச் அணியைத் தோற்கடித்து அதிர்ச்சியளித்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad