விவசாயத்தில் புதுமையாக சாதித்த இஞ்சினியரிங் மாணவன்..!!
விவசாயத்தில் புதுமையாக சாதித்த இஞ்சினியரிங் மாணவன்..!!
இன்று ஒரு விவசாய பூமிக்குச் சென்றோம். அழைத்துச் செல்லும் போது நண்பர் அதை “என் ஃப்ரெண்ட்டொட farmக்கு போவோம்” என்றார்.. நானும் பம்பு செட்டு, பச்சைப்பசேல் வயக்காடு, இங்கிட்டு தென்னந்தோப்பு, அங்கிட்டு முந்திரித்தோப்பு, பின்னாடி பெரிய சைஸ் ஸ்கூல் பேக்கை மாட்டிக்கொண்டு ஒருவர் மருந்தடிப்பார் என நினைத்துக்கொண்டு சென்றேன்..
அங்கு போனால் எல்லாமே தலைகீழ்..
சொட்டு நீர்ப்பாசனம், பெரும்பாலும் ஆர்கானிக் உரம், பயிர்களை ஒரு பெரிய கூண்டு மாதிரியான இடத்திற்குள் வளர்ப்பது, அவைகள் இருக்கும் இடத்தை சீரான வெப்பநிலையில் வைத்திருப்பது என மிக மிகப்புதுமையான பல விசயங்கள் இருந்தன.. சொட்டுநீர்ப்பாசனத்தை ஏன் புதுமை என்கிறேன் என்றால், அந்தப் பகுதி சொட்டுநீர்ப் பாசனத்திற்கே தகுதியற்றது என்று நம் விவசாயத்துறை அதிகாரிகள் எழுதி கையெழுத்துப்போட்ட இடம் அது. அங்கு அவர் அதை சாதித்து, அரசு & தனியார் எனப் பலரிடம் பாராட்டும் விருதும் பெற்றிருகிறார்..
இன்னொரு முக்கிய விசயம், அவர் விளைய வைக்கும் பொருளுக்கு அவரே ஒரு மார்க்கெட்டை பிடித்து வைத்திருக்கிறார்.. விலை சொல்வதும் அவரே.. இடைத்தரகர் எல்லாம் கிடையாது. அதாவது, வருடம் முழுக்க விளைவது மாதிரி நான்கு இடங்களில் பயிர் செய்கிறார். முதலில் போட்டது காய் விடும் சமயம், கடைசியாய்ப் போட்டது துளிர் விடுகிறது... இதனால் இவரது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு தோறும் சரக்கு கிடைக்கிறது. அவர்களும் இன்னொருவரைத் தேடிப்போவதில்லை.. Seasonal farmingல் ஈடுபடுவர்கள் தான் இடைத்தரகர்களை நாடியிருக்க வேண்டும் என்கிறார் அவர்..
அப்படி என்னத்தை விளைய வைக்கிறார் என்கிறீர்களா? வெள்ளரிக்காய்.. வெள்ளரிக்காய் தரையில் படர்ந்து தானே பார்த்திருக்கிறீர்கள்? அவர் தோட்டத்தில் கொடியில் படரும். அந்த மாதிரி சில செட்-அப்களை செய்திருக்கிறார்.. “நான் ஏன் இருக்கும் இடத்தை படர விட்டு வீணாக்க வேண்டும்? அதனால் தான் கொடி மாதிரி மேல படர விடுறேன்” என்கிறார்.. தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஒரு மெக்கானிக்கல் செட்-அப் வைத்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களில் அதை fully automated ஆக மாற்றவிருக்கிறார். மிக முக்கிய விசயம், இன்று வரை அவர் நஷ்டத்தை பார்த்தது இல்லை. அரசும், வங்கிகளும் போட்டி போட்டு உதவ முன்வருகின்றன.. அவரும் சென்னை, பெங்களூரு என்றும், முடிந்தால் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறார்..
அவர் படித்தது என்ன தெரியுமா? B.E. சிவில் இஞ்சினியரிங்.. ஆனாலும் விவசாயத்தில் கவனத்தைச் செலுத்தி, எல்லோர் போலவும் அல்லாமல், அதை புதுமையாக, அதிக இடத்தை ஆக்கிரமிக்காமல், குறைந்த செலவில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆண்டு தோறும் உற்பத்தி செய்து, தனக்கென்று வாடிக்கையாளர்களை ஏற்படுத்திக்கொண்டு, இண்டர்நெட், வாட்ஸ்-அப் என அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி மிக அழகாக அந்த விவசாயத்தைச் செய்கிறார்.. முறையான படிப்பும், அக்கறையும், மெனக்கெடலும், தொழில்நுட்பத்தை நல்லவிதமாக பின்பற்றுவதும் இருக்கும் விவசாயத்திற்கு என்றுமே வாழ்வுண்டு என்று அழகாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்..
நேரம் இருப்பவர்கள் புதுக்கோட்டையில் அவர் பண்ணையைப் பார்க்கலாம்.. ஆர்வம் இருப்பவர்கள் தாங்களும் இது போல் முயற்சிக்கலாம்.. இன்னொரு முக்கிய விசயம், அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கடையில் அரிசி வாங்குவதே இல்லையாம்.. இன்னும் கொஞ்ச நாளில் காய்கறியும் அப்படித்தானாம்,..