Type Here to Get Search Results !

ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் நடித்து முதியவர்களை குறி வைத்து மோசடி செய்தவர் கைது; ஜோலார்பேட்டை அருகே முன்னாள் ராணுவ வீரர் மனைவியிடம் 7 பவுன்செயின் பறிப்பு

ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் நடித்து முதியவர்களை குறி வைத்து மோசடி செய்தவர் கைது
சென்னை வளசரவாக்கம், ஜெய்கார்டன் 1-வது தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 65). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். அவருக்கு கண்பார்வை சற்று குறைவு என்பதால் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தனக்கு யாராவது உதவி செய்வார்களா? என காத்திருந்தார்.

அப்போது ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், முதியவர் பிரபாகரனுக்கு உதவுவதுபோல் அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கியதுடன், அவரது ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டு தெரிந்து கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதுபோல் பாவனை செய்தார்.

பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று கூறி பிரபாகரனிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு சிறிது தூரம் நடந்து சென்ற பிரபாகரனின் செல்போனுக்கு அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுத்ததாக எஸ்.எம்.எஸ் வந்தது.

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் கையில் இருந்த ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அது தன்னுடைய கார்டு இல்லை. போலி என்பது தெரிந்தது. அதன்பிறகுதான் மர்மநபர் தனக்கு பணம் எடுத்து கொடுப்பதுபோல் நடித்து, போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி நூதன முறையில் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

இதுகுறித்து பிரபாகரன் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமைவீரன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரின் உருவம் மற்றும் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து வளசரவாக்கம், எஸ்.வி.எஸ். நகரைச்சேர்ந்த பார்த்தசாரதி(50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

தொழிலில் நஷ்டம்

அதில் அவர், சொந்தமாக தொழில் செய்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் இதுபோல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் முதியவர்களை குறி வைத்து அவர்களுக்கு பணம் எடுத்து கொடுக்க உதவுவதுபோல் நடித்து, அவர்களின் ஏ.டி.எம். கார்டு, ரகசிய எண்ணை வாங்கி கொண்டு, ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என அவர்களிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து அனுப்பி விடுவார். பின்னர் அவர்களது ஏ.டி.எம். கார்டு, ரகசிய எண்ணை பயன்படுத்தி அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார்.

இவ்வாறு பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஹெல்மெட்டுடன் சென்று வந்ததும் தெரிந்தது. அவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள், ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பார்த்தசாரதி, விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே இதுபோன்ற 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணத்தில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி சிறுவன் கைது
கும்பகோணத்தில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு

கும்பகோணம் பாணாதுறை திருமஞ்சன வீதியில் ஒரு தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. இந்த பகுதியில் கோர்ட்டு மருத்துவமனை ஆகியவை உள்ளது. இதனால் அப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இந்த நிலையில் நேற்று காலை அங்கு இருந்த ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கொள்ளை முயற்சி

தகவல் அறிந்த கும்ப கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து எந்திரத்தை உடைத்துள்ளார். ஆனால் எந்திரத்தில் பணம் இருந்த பகுதியை மட்டும் அவரால் உடைக்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்துள்ளார்.

சிறுவன் கைது

இதையடுத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை பிடிப்பதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது அதே பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து கும்பகோணம் நால்ரோடு பகுதியில் மறைந்து இருந்த அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் முக்கிய பகுதியில் இயங்கி வந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த சிறுவனை 20 மணி நேரத்திற்குள் கைது செய்ததற்காக போலீசாரை கும்பகோணம் மக்கள் பாராட்டினர்.

ஜோலார்பேட்டை அருகே முன்னாள் ராணுவ வீரர் மனைவியிடம் 7 பவுன் செயின் பறிப்பு - 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன். முன்னாள் ராணுவ வீரர். தற்போது கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (வயது 35). இவர் நேற்று காலை திருப்பத்தூர் பகுதியில் உள்ள வங்கிக்கு மொபட்டில் சென்றார். பின்னர் அவர் வங்கியில் இருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

தாமலேரி முத்தூர் மேம்பாலம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் தனது மொபட்டுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு சாலையை கடந்தார். அப்போது ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி 3 பேர் முகமூடி அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்தனவ். அவர்கள் திடீரென்று சுகந்தி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச்செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் திருப்பத்தூர் நோக்கி வேகமாக சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுகந்தி திருடன் திருடன் என கூச்சலிட்டார். ஆனால் மர்ம நபர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். பின்னர் இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சுகந்தி தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் ஆங்காங்கே போலீசாருக்கு தகவல் தெரிவித்து மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடினர். அப்போது குரிசிலாப்பட்டு போலீசார் கல்லுக்குட்டை புதூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை சுற்றி வளைத்தனர். இதில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட 2 பேரையும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இது குறித்து சுகந்தி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad