Type Here to Get Search Results !

குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய கலெக்டர்; செங்கல்பட்டில் இருந்து ராஜஸ்தானுக்கு லாரியில் சென்ற 53 தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய கலெக்டர்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் மாரி (வயது28). இவருடைய மனைவி திவ்யா (22). இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு மலம் தொப்புள் வழியே வெளியேறியதால் மறுபடியும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் பயனில்லாத நிலையில் மேலும் ரூ. 2 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்ததால் கூலி வேலை செய்யும் மாரி வேறு வழியின்றி குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.

இந்த தகவல் சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தையை முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் மானாமதுரை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நாகராஜன், சமூக ஆர்வலர்கள் பாலசுப்ரமணியன், சங்கரசுப்ரமணியன் உள்ளிட்டோர் உதவியதன் பேரில் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

செங்கல்பட்டில் இருந்து ராஜஸ்தானுக்கு லாரியில் சென்ற 53 தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம் அரக்கோணத்தில் பரபரப்பு
அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று காலை அரக்கோணம் இந்திராகாந்தி சிலை அருகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வடமாநில பதிவெண் கொண்ட ஒரு லாரி வந்தது. லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். லாரியின் பின்பக்கம் தார்ப்பாப் போட்டு மூடப்பட்டு இருந்தது. அதன் உள்ளே 1¼ வயது பச்சிளம் குழந்தை உள்பட 53 வடமாநில கூலித்தொழிலாளர்கள் இருந்தது தெரிய வந்தது.

தகவல் அறிந்ததும் உதவி கலெக்டர் பேபிஇந்திரா, துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், தாசில்தார் ஜெயக்குமார், நகராட்சி ஆணையாளர் ராஜவிஜயகாமராஜ் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் இந்தி மொழியில் பேசியதால், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த நிலவள வங்கி இயக்குனர் கண்பத் என்பவரை வரவழைத்து, அவர் மூலமாக விசாரணை நடத்தினர்.

மாவட்ட எல்லையில் விட்டனர்

அப்போது வடமாநில கூலித்தொழிலாளர்கள் கூறுகையில், “நாங்கள் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தாம்பரம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டிட வேலைகளில் ஈடுபட்டோம். ஊரடங்கால் எங்களுக்கு வேலை இல்லை. உணவுக்கு சிரமப்பட்டோம். சொந்த ஊருக்கு செல்ல செங்கல்பட்டில் இருந்து நடந்து காஞ்சீபுரத்தை நோக்கி வந்தோம். அந்த வழியாக பெங்களூருவில் இருந்து ராஜஸ்தான் பதிவெண் கொண்ட ஒரு லாரி வந்தது. அந்த லாரியை மறித்து, ஏறி வந்தோம்” என்றனர்.

இதையடுத்து ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவின்பேரில், வருவாய்த்துறையினர் வடமாநில கூலித்தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, அவர்கள் வந்த அதே லாரியில் மீண்டும் அழைத்துச் சென்று, மாவட்ட எல்லைப்பகுதியான பொன்னியம்மன் பட்டறை சோதனைச் சாவடியில் விட்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad