Type Here to Get Search Results !

பெண்களை சீரழித்ததாக புகார்:குமரி காசியை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி; ஐம்பொன் சிலைகள் கொள்ளை போன கோவில் அர்ச்சகர் மர்ம சாவு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
https://play.google.com/store/apps/details?id=com.tamilyoungsterswebsite.app
பெண்களை சீரழித்ததாக புகார்: குமரி காசியை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வாலிபரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

பெண் டாக்டர் புகார்

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26). சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருடன் நெருங்கி பழகினார். அவரை தன்னுடைய வலையில் வீழ்த்தியதோடு, அவருடன் இருந்த நெருக்கமான புகைப்படங்களை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

காசியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பெண் டாக்டர், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார். பின்னர் போலீசார் காசி மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பெண் டாக்டரை ஏமாற்றியது போல் பல பெண்களிடம் காசி பணம் பறித்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதற்கிடையே காசியின் செல்போன், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், பல பெண்களிடம் அவர் நெருக்கமாக இருந்தது தெரிய வந்தது. இதற்கிடையே, நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த 25 வயதான பெண் என்ஜினீயரும், காசி மீது பரபரப்பு புகார் அளித்தார். அதில், தன்னிடம் நெருங்கி பழகியதோடு நகை, பணம் பறித்தார். மேலும், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காசி மீது கந்து வட்டி புகார் ஒன்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து காசி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் வந்ததால், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனையடுத்து நாங்குநேரி சிறையில் இருந்த காசியை போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

மனு தாக்கல்

காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? காசியின் கூட்டாளிகள் யார்? என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. எனவே காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து காசியை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மகிளா குற்றவியல் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுவை நீதிபதி ஆனந்த் விசாரித்தார்.

3 நாட்கள் போலீஸ் காவல்

இதற்காக காசி பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து நாகர்கோவில் கோர்ட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அழைத்து வரப்பட்டார். இந்த மனு மீதான விசாரணையில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் யாசின் முபாரக் அலி ஆஜராகி வாதாடினார். அதே சமயம் காசி தரப்பில் வக்கீல் மகேஷ் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு காசியை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார்.

மருத்துவ பரிசோதனை

இதை தொடர்ந்து காசியின் உடல்நிலையை பரிசோதனை செய்வதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் போலீஸ் காவலில் விசாரிக்க காசி அழைத்து செல்லப்பட்டார். போலீஸ் காவலில் காசியை விசாரிக்கும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியே வரலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

சீர்காழி அருகே பரபரப்பு: ஐம்பொன் சிலைகள் கொள்ளை போன கோவில் அர்ச்சகர் மர்ம சாவு போலீசார் விசாரணை
சீர்காழி அருகே ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட கோவில் அர்ச்சகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சிலை கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஐம்பொன் சிலைகள் கொள்ளை

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொண்டல் கிராமத்தில் குமார சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை கீழ் பழனி என பக்தர்கள் அழைக்கிறார்கள்.

இந்த கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான குமார சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய 3 சாமி சிலைகள் கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அர்ச்சகர் மர்ம சாவு

இந்த கோவிலின் அர்ச்சகராக நடராஜன்(வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார். கோவில் வாசலில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்தார். அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் குன்னம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலிலும் நடராஜன் பூஜை செய்து வந்தார். கொண்டல் குமார சுப்பிரமணியசுவாமி கோவில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டதில் இருந்து குன்னம் சிவன் கோவிலுக்கு நடராஜன் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் துணைக்கு ஒருவரை அழைத்து சென்று வந்ததாகவும், மற்ற நேரங்களில் அவரது மகன்கள் குன்னம் கோவில் பூஜையை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கத்துக்கு மாறாக நடராஜன், மொபட்டில் தனியாக குன்னம் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர்.

அப்போது கீழமாத்தூர் என்ற ஊரில் வீரன்கோவில் பின்புறம் நடராஜன் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

கொலையா?

இதையடுத்து அவருடைய உடலை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டுக்கு எடுத்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் அங்கு விரைந்து சென்று நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நடராஜன் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? வழக்கத்துக்கு மாறாக நேற்று அவர் தனியாக கோவிலுக்கு சென்றதற்கான காரணம் என்ன? குமார சுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து சிலைகளை கடத்தி சென்ற கடத்தல்காரர்கள் அவரை கொலை செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலைகள் கடத்தப்பட்ட நிலையில் அதே கோவிலின் அர்ச்சகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆழ்வார்திருநகரி அருகே, பெட்ரோல் பங்க் அதிபரை கயிற்றால் கட்டிப்போட்டு கொள்ளையடித்த 4 பேர் கைது - 20 பவுன் நகைகள் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே பால்குளத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 70). தொழில் அதிபரான இவர் பால்குளம் விலக்கு பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி இறந்து விட்டார். இவருடைய 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் பாலசுப்பிரமணியம் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அதிகாலையில் பாலசுப்பிரமணியத்தின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் திடீரென்று பாலசுப்பிரமணியத்தை தாக்கி, அவரை கயிற்றால் கட்டிப் போட்டு, வீட்டில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்களை பிடிப்பதற்காக, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் சென்று கொள்ளையர்களை வலைவீசி தேடினர்.

4 பேர் கைது

இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக, ஆழ்வார்திருநகரி அருகே காடுவெட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜ் (30), சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தை சேர்ந்த ஞானக்கண் பொன்ராஜ் மகன் நிக்சன் (26), விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிமுத்து மகன் ரஞ்சித்குமார் (27), தேனி மாவட்டம் தெங்குவார்பட்டியைச் சேர்ந்த பிச்சை காளை மகன் சிரஞ்சீவி (25) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.34 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான ராஜ், பாலசுப்பிரமணியத்தின் பெட்ரோல் பங்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஊழியராக வேலை செய்தார். அப்போது ராஜின் செயல்பாடுகள் பிடிக்காததால், அவரை வேலையில் இருந்து பாலசுப்பிரமணியம் நிறுத்தி விட்டார். இந்த நிலையில் ராஜ் தன்னுடைய நண்பரான நிக்சன் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

நெல்லை அருகே நடத்தையில் சந்தேகத்தால் பயங்கரம்: தலை துண்டித்து பெண் கொடூரக்கொலை போலீசில் கணவர் சரண்
நெல்லை அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பெண் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

கட்டிட தொழிலாளி

நெல்லை அருகே உள்ள தாழையூத்தை அடுத்த குறிச்சிகுளத்தை சேர்ந்தவர் சொரிமுத்து (வயது 37). இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ரம்லத் (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் காதல் மனைவியை குறிச்சிகுளத்துக்கு அழைத்து வந்து தங்க வைத்தார்.

சொரிமுத்து அடிக்கடி கேரளாவுக்கு வேலைக்கு சென்று விடுவார். விடுமுறை கிடைக்கும்போது வீட்டுக்கு வருவார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 12 வயதில் இன்னொரு மகனும் உள்ளனர். கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி சொரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிச்சிகுளத்துக்கு வந்து மனைவியுடன் தங்கியுள்ளார்.

நடத்தையில் சந்தேகம்

ரம்லத் இரவு நேரங்களில் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சொரிமுத்து, மனைவியின் நடத்தையை கண்காணித்தார். இதில் அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கருதினார். இதையடுத்து சொரிமுத்து மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த 4-ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரம்லத் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். சொரிமுத்து மனைவியை பல இடங்களில் தேடினார். அவர் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து அவர் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், ரம்லத் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் சொரிமுத்துவின் ஒரு மகனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதை அறிந்த ரம்லத் நேற்று முன்தினம் இரவு திடீரென்று சொரிமுத்துவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொரிமுத்து கூறினார். உடனே மகனை பார்க்க வேண்டும் என ரம்லத் கூறினார். அவர், நான் கேரளாவில் இருந்து வந்ததால், கொரோனா பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி வந்து இருக்கிறேன். அங்கு வந்தால், 2 பேரும் சேர்ந்து வீட்டுக்கு போய் விடலாம் என சொரிமுத்து கூறினார்.

நள்ளிரவில் கொலை

அவருடைய பேச்சை நம்பி ரம்லத் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு சொரிமுத்துவுடன், ரம்லத் புறப்பட்டு வந்தார். நள்ளிரவில் தாழையூத்து குறிச்சிகுளம் பகுதி வந்தவுடன் தனது மோட்டார் சைக்கிளை சொரிமுத்து நிறுத்தினார். நான்கு வழிச்சாலை புதர் அருகே உள்ள முட்புதருக்கு தனது மனைவியை சொரிமுத்து அழைத்து சென்றார்.

அங்கு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் மனைவியை, சொரிமுத்து சரமாரியாக வெட்டினார். பின்னர் ஆத்திரத்தில் மனைவி தலையை அறுத்து துண்டித்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

போலீசில் சரண்

பின்னர் சொரிமுத்து வீட்டுக்கு சென்றார். ஆனால், அவருடைய உள் மனது உறுத்தியது. இதைத்தொடந்து அவர் நேற்று காலை தாழையூத்து போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறினார். தகவல் அறிந்த தாழையூத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு, தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த ரம்லத் உடலை கைப்பற்றி, பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

இந்த பயங்கர கொலை தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சொரிமுத்துவை கைது செய்தனர். தலை துண்டித்து பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை அருகே பரிதாபம் கல்குவாரி நீரில் மூழ்கி சிறுவன் சாவு
நெல்லை அருகே கல்குவாரி நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

சிறுவன்

நெல்லை அருகே பேட்டை நரசிங்கநல்லூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 25). பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி (23). இவர்களுக்கு முகேஷ் (5), சுகன்யா (5) என்ற இரட்டை குழந்தைகளும், சரண்யா(2) என்ற பெண் குழந்தைகளும் உள்ளனர்.


சுகன்யா, முகேஷ் ஆகிய இருவரும் அங்குள்ள பாலர் பள்ளியில் படித்து வந்தனர். இரட்டை குழந்தைகள் தினமும் தங்களது தாத்தா கோபால், பாட்டி சிவகாமியுடன் அருகே உள்ள பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி தண்ணீரில் குளித்து வருவது வழக்கம்.

நீரில் மூழ்கினான்

நேற்று மாலை பேரன், பேத்திகளுடன் குளிக்க சென்றுள்ளனர். தாத்தா கோபால் அப்பகுதியில் முள்வெட்ட சென்றதாக கூறப்படுகிறது. சிவகாமி துணிக்கு சோப்பு பொடி போட்டு விட்டு துணி துவைக்க ஆரம்பித்த நிலையில், குழந்தைகள் நீரில் தத்தளித்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். செய்வதறியாது திகைத்த அவர் கணவரை அழைத்துள்ளார். அங்கு வருவதற்குள் முகேஷ் நீரில் மூழ்கி விட்டான். சுகன்யா தத்தளித்தாவறே கரை ஒதுங்கினாள்.

கோபால் முடிந்த அளவிற்கு தேடி பார்த்தும் கிடைக்காததால் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுவன் நீரில் மூழ்கிய சம்பவம் அறிந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு குவிந்தனர்.

பரிதாப சாவு

சுமார் 20 நிமிட தேடுதலுக்கு பின்னர் சிறுவனை பிணமாக மீட்டனர். தகவல் அறிந்ததும் சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் பிணமாக வெளியே மீட்டதும் சுற்றி நின்றிருந்த உறவினர்கள் அனைவரும் கதறி அழுதது காண்போரின் கண்களை குளமாக்கியது. நெல்லை அருகே சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புள்ளம்பாடி அருகே குடிநீர் தொட்டியில் சாணத்தை கரைத்து மாசுபடுத்திய வார்டு உறுப்பினர் கைது
புள்ளம்பாடி அருகேகுடிநீர் தொட்டியில் சாணத்தை கரைத்து மாசுபடுத்திய வார்டு உறுப்பினர் கைது

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரத்தூர் கிராமத்தில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் தரைமட்ட தொட்டியில் அந்த கிராமத்தை சேர்ந்த ஊராட்சி வார்டு உறுப்பினர் சக்திவேல்(வயது 27) சம்பவத்தன்று மாட்டு சாணத்தை கரைத்தார்.

இதனால் குடிநீர் தொட்டியில் இருந்த நீர் மாசடைந்தது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுபற்றி அறிந்த கிராம நிர்வாக அதிகாரி அந்தோணி ராஜா, வார்டு உறுப்பினரிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது, அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் அவருக்கு சக்திவேல் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

சாராய ஊறல் அழிப்பு

* திருச்சி குளாப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சாராய ஊறல் போட்டிருந்ததை ஏர்போர்ட் போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எலிமருந்து தின்ற சிறுமி பலி

* திருச்சி காஜாபேட்டை கள்ளுக்காரத்தெருவை சேர்ந்த விஜயனின் மகள் அபர்ணா(13) நேற்று முன்தினம் விளையாட்டுத் தனமாக எலி மருந்தை தின்றுவிட்டார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறுமி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந் தார்.

புறா கூண்டு வியாபாரி மீது தாக்குதல்

* திருச்சி பாலக்கரை வேப்பிலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த புறா கூண்டு வியாபாரியான குருமூர்த்தியிடம்(56) காஜாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாபு(25) புறா கூண்டு வாங்க வந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபு, குருமூர்த்தியை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

செம்மண் விற்றவர் கைது

* குணசீலம் அருகே உள்ள சென்னக்கரை கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(32), தனது வயலில் இருந்த செம்மண்ணை அரசு அனுமதியின்றி டிராக்டரில் ஏற்றி விற்பனை செய்ததாக அவரை வாத்தலை போலீசார் கைது செய்தனர்.

சூதாடிய 4 பேர் கைது

* வடக்கிப்பட்டியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 4 பேரை வாத்தலை போலீசார் கைது செய்தனர்.

பெண் தர்ணா

* திருச்சி இ.பி.ரோட்டை சேர்ந்தவர் சுதா(35) நேற்று திருச்சி கோட்டை போலீஸ் நிலையம் வந்து தனது கணவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருப்பதாகவும், இதனால் தனது 2 குழந்தைகளுடன் வறுமையில் வாடி வருவதாகவும் புகார் அளித்தார். மேலும், கணவர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டார்.

முயல் வேட்டையாடியவர் கைது

* சமயபுரம் அருகே கண்ணனூர் வனப்பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட திருச்சி பகளவாடியை சேர்ந்த ரவியை(27)வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு முயல், மோட்டார் சைக்கிள், முயல் பிடிக்க பயன்படுத்தும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தப்பி ஓடிய அம்மாப்பேட்டையை சேர்ந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

60 வழக்குகளில் தொடர்புடையவர் உள்படதஞ்சையில் கைவரிசை காட்டிய பிரபல திருடர்கள் 4 பேர் கைது
தஞ்சையில் கைவரிசை காட்டிய பிரபல திருடர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 60 வழக்குகளில் தொடர்புடையவரும் அடங்குவார். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.

வாகன திருட்டு

தஞ்சை நகரம் மற்றும் வல்லம் உட்கோட்ட பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போன வண்ணம் இருந்தன. இதே போல் உழவர் சந்தை, கடை வீதி, அடுக்குமாடி குடியிருப்பு போன்ற இடங்களில் அடிக்கடி வாகனங்கள் திருட்டு போனது. இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதா ராமன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், ஏட்டுகள் ரமேஷ்குமார், உமாசங்கர், இளவரசன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வாகன திருடர்களை தேடி வந்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் சம்பவத்தன்று ஆட்டோவில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் தஞ்சை, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து வாகன திருட்டில் ஈடுபட்ட பனங்காட்டை சேர்ந்த குமரவேல் (வயது32), தஞ்சை இ.பி.காலனியை சேர்ந்த வீரமணி (34), மானோஜிப்பட்டியை சேர்ந்த முத்துராமலிங்கம் (23), பூக்கார விளார் சாலை நாராயணன் காலனியை சேர்ந்த பிராகஷ் (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 புல்லட் உள்பட 11 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இன்னொருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

60 வழக்குகளில் தொடர்பு

கைது செய்யப்பட்ட குமரவேல் மீது வாகன திருட்டு, செயின்பறிப்பு உள்பட 60 வழக்குகளும், வீரமணி மீது செயின்பறிப்பு உள்பட 5 வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் பயங்கரம்: கார் டிரைவர் கழுத்தை அறுத்து கொலை
சேலம் மணியனூர் பாண்டுநகர் பகுதியை சேர்ந்தவர் இளமாறன். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி யசோதா. இவரும் ராணுவத்தில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு அபிஷேக் மாறன் (வயது 29), அபிநயா என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். இதில் அபிஷேக் மாறன் நெத்திமேடு பகுதியில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். மேலும் தனக்கு சொந்தமான 3 கார்களை அதே டிராவல்ஸ் நிறுவனத்தில் கொடுத்துள்ளார்.

அபிஷேக் மாறன் கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு ஜெபினா என்ற ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜெபினா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் சென்று விட்டார். இதையடுத்து அபிஷேக் மாறன் தனது பாட்டி கண்ணம்மா மற்றும் தங்கை அபிநயாவுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடிக்கு தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து கீழே வரவில்லை. இதனிடையே தொட்டிக்கு தண்ணீர் நிரப்புவதற்காக அபிநயா மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது அங்கு அபிஷேக் மாறன் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு கொலையுண்டு பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

மேலும் இது குறித்து உடனடியாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர்கள் செந்தில், தங்கதுரை, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அபிஷேக் மாறன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த கொலை கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்ததா?, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கார் டிரைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad