Type Here to Get Search Results !

போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று: கமல் ஹாசன் ட்வீட்; 13 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று: கமல் ஹாசன் ட்வீட்
மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல  காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

13 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: பொது அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு தடை
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு ஆண்டு குமரெட்டியாபுரம் பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தை துவக்கினர். இந்த போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில் அருகில் உள்ள பண்டாரம்பட்டி, மீளவிட்டான், மடத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 13 கிராமங்களுக்கும் பரவியது.99 நாட்களை கடந்த நிலையில் 100வது நாளில் போராட்டக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட தீர்மானித்தனர்.  இந்நிலையில் போராட்டக் குழுவினரை மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதில் போராட்ட குழுவில் ஒரு பகுதியினர் மட்டும் கலந்து கொண்டு விட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே ஒருநாள் முழுவதும் தர்ணா நடத்திக் கொள்வதாக உறுதியளித்தனர். ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர்.  இந்த துப்பாக்கி சூட்டில் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த கிளாஸ்டன், மினிசகாயபுரத்தைச் சேர்ந்த ஸ்நோலின், தாமோதரநகரைச் சேர்ந்த மணிராஜ், குறுக்குசாலை தமிழரசன், மாசிலாமணிபுரம் சண்முகம், அன்னை வேளாங்கன்னிநகர் அந்தோணிசெல்வராஜ், புஷ்பாநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், மில்லர்புரம் கார்த்திகேயன், திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜான்சி, சிவந்தாகுளம் ரோடு கார்த்திக், மாப்பிள்ளையூரணி காளியப்பன், உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன், சாயர்புரம் செல்வசேகர் ஆகிய 13 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் ஒரு சிலர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இன்றோடு (மே 22) இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.இந்த ஆண்டு கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு பொது அஞ்சலி நிகழ்ச்சிகள் கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,

'ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் இந்த ஆண்டு போராட்டங்கள் நடைபெற்ற கிராமங்களில் மட்டும் இன்று காலை உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஐந்து, ஐந்து பேர்களாக பங்கேற்று அஞ்சலி செலுத்தவுள்ளோம்.மேலும், இன்றைய தினத்தை கறுப்பு தினமாக கடைபிடித்து அனைவரும் கறுப்பு முகக்கவசம் அணியவுள்ளோம். கடந்த ஆண்டு நடைபெற்றது போல இந்த ஆண்டு தேவாலயங்களில் சிறப்பு அஞ்சலி வழிபாடுகள் போன்ற பொது நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், இன்றைய நாளை உயிர் சூழல் நாளாக கடைபிடிக்க அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். வீடுகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடவும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடைபெறும் சிபிஐ விசாரணை, ஒருநபர் ஆணையம் விசாரணை போன்ற அனைத்து விசாரணைகளும் வெறும் கண்துடைப்பு தான். இரண்டு ஆண்டுகள் ஆகியும் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அதுபோல உயிரிழந்தவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் என்றுமே மக்கள் மனதில் அழியாத கறுப்பு மையாக மாறிவிட்டது,' என்றார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும்போது, 'தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் 5 பேருக்கு மேல் யாரும் கூடக்கூடாது.எனவே, அஞ்சலி நிகழ்ச்சிகளுக்காக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை ஏற்கனவே மூடப்பட்டிருப்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. துப்பாக்கிச் சூடு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்,' என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad