Type Here to Get Search Results !

பொள்ளாச்சி அருகே, பழைய வாகன குடோனில் தீ விபத்து - ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்; என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

பொள்ளாச்சி அருகே, பழைய வாகன குடோனில் தீ விபத்து - ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு சொந்தமான பழைய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உடைக்கும் குடோன் நல்லூரில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வழக்கம் போல் குடோனை பூட்டி விட்டு ஜெயக்குமார் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதற்கிடையில் குடோனுக்கு முன்புறம் கொட்டி வைக்கப்பட்டு இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மீது நேற்று எதிர்பாராதவிதமாக தீப்பிடித்ததாக தெரிகிறது. இந்த தீ வேகமாக அருகில் பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குடோனுக்கு பரவியது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். தீயணைப்பு துறைக்கு சொந்தமான பெரிய, சிறிய வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதற்கிடையில் தனியார் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

சுமார் 3 மணி போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைகளுக்கு தீ வைத்ததால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின் கசிவு காரணமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள அனல்மின் நிலையங்களில் ஒன்றான, இரண்டாம் அனல் மின் நிலையத்தில், உள்ள 6-வது உற்பத்தி பிரிவின் கொதிகலன் அமைப்பின் ஒரு பகுதியில் கடந்த 7-ந்தேதி மாலை திடீரென கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நிரந்தர தொழிலாளர்களான பாவாடை, சர்புதீன்(வயது 54), ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், அன்புராஜன், ஜெய்சங்கர், ரஞ்சித்குமார், மணிகண்டன், பாலமுருகன் ஆகியோர் தீக்காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் நெய்வேலி 29-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்த சர்புதீன், கொல்லிருப்பை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி சண்முகம், நெய்வேலி 28-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்த நிரந்தர தொழிலாளி பாவாடை ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். மற்ற 5 பேருக்கும் சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளியான விருத்தாசலம் தாலுகா முதனை கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணி மகன் பாலமுருகன் (36) நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மற்ற 4 பேர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., தொ.மு.ச. மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம், பா.ம.க., தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் என்.எல்.சி. நிறுவன அதிகாரிகள் மற்றும் நிறுவன தலைவர், இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட சுமூகமான முடிவின்படி விபத்தில் சிக்கி இறந்த பாலமுருகன் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும், ரூ. 25 லட்சம் இழப்பீட்டு தொகையும் பெறுவதற்கான கடிதத்தை 2-ம் அனல் மின் நிலைய அலுவலகத்தில் நேற்று காலை என்.எல்.சி. மனிதவளத்துறை முதன்மை பொது மேலாளர் தியாகராஜூ பாலமுருகனின் உறவினரிடம் வழங்கினார்.

தொப்பூர் கணவாயில் அரிசி மூட்டைகளுடன் லாரி கவிழ்ந்தது 2 டிரைவர்கள் படுகாயம்
கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி மூட்டைகள் ஏற்றிய ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரி நேற்று தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அந்த லாரியை ஓட்டி வந்த பெருந்துறையை சேர்ந்த பிரதீப்குமார்(வயது 22), மாற்று டிரைவர் பகவதி(48) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.

இதன்காரணமாக அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த டிரைவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திம்பம் மலைப்பாதையில் மீண்டும் விபத்து: 200 அடி பள்ளத்தில் ரிக் லாரி பாய்ந்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. இது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இதன் வழியாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கும் இருசக்கர வாகனங்கள், கார், பஸ், லாரி, வேன், சரக்கு வாகனம், கனரக வாகனங்கள் போன்றவை சென்று வந்தன.

ஊரடங்கால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக திம்பம் மலைப்பாதை வழியாக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. குறுகிய வளைவுகளை கொண்டதால் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நின்றுவிடுகின்றன. சில நேரம் பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு மாங்காய் பாரம் ஏற்றிச்சென்று கொண்டிருந்த லாரி ஒன்று 3-வது வளைவில் சென்றபோது நிலைதடுமாறி தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் டிரைவர் உயிர் தப்பினார். இந்தநிலையில் தற்போது மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.

தாளவாடியில் இருந்து ரிக் லாரி ஒன்று ஆழ்குழாய் கிணறு அமைக்க பயன்படும் எந்திரம் ஒன்றை ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் குன்னத்தூருக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த ரிக் லாரியை குன்னத்தூரை சேர்ந்த முருகேசன் (வயது 30) என்பவர் ஓட்டினார். திம்பம் மலைப்பாதை 6-வது கொண்டை ஊசி வளைவில் காலை 6 மணி அளவில் சென்றபோது நிலைதடுமாறிய லாரி தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

இந்த விபத்தில் ரிக் லாரியில் இருந்த எந்திரமும் சரிந்து கீழே விழுந்தது. இதற்கிடையே லாரியில் இருந்து டிரைவர் முருகேசன் வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்றனர். சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு ரிக் லாரி மீட்கப்பட்டது. திம்பம் மலைப்பாதையில் தொடரும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் திம்பம் மலைப்பாதை ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னத்தில்லாரி மோதி 10-ம் வகுப்பு மாணவன் சாவுபொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
குன்னத்தில் லாரி மோதி 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவன் சாவு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கருத்தமணி. இவர் வேப்பூர் தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கவிமணி(வயது 16) என்ற மகனும், அர்ச்சனா(12) என்ற மகளும் உள்ளனர். கவிமணி மேலமாத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கவிமணி வருகிற ஜூன் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக வீட்டில் படித்து வந்த நிலையில், நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து மொபட்டில் அரியலூர்- பெரம்பலூர் சாலையை கடந்து வெண்மணி செல்லும் ரோடு பகுதிக்கு சென்றார். பின்னர் மீண்டும் மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தஞ்சாவூரில் இருந்து மாவு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று பெரம்பலூர் நோக்கி சென்றுகொண்டு இருந்தது. அண்ணாநகர் முன்பாக திடீரென ரோட்டை கடந்த கவிமணி மீது மினி லாரி பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கவிமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

சாலை மறியல்

இதனை அறிந்த அண்ணாநகர் பகுதி மக்கள், அண்ணாநகர் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், இதுகுறித்து குன்னம் போலீசில் அரியலூர்- பெரம்பலூர் ரோட்டின் குறுக்கே தடுப்பு அமைப்பு ஏற்படுத்தி தர பலமுறை வலியுறுத்தியும் தடுப்பு அமைப்பு ஏற்படுத்தவில்லை என குற்றம்சாட்டி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு அரியலூர்- பெரம்பலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில், அண்ணாநகர் பகுதியில் பேரிகார்டு அமைத்து தருவதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான தர்மபுரியை சேர்ந்த பிரவீண்குமாரை(28) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூதலூர் அருகே பரிதாபம்:வயலில் மேய்ந்து கொண்டிருந்த 5 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி சாவு
பூதலூர் அருகே மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் வயலில் மேய்ந்து கொண்டு இருந்த 5 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன.

மின்சாரம் தாக்கி 5 பசுமாடுகள் சாவு

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள கோட்டரப்பட்டி கிராமத்தில் உள்ள வயல் வெளியில் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலரது மாடுகள் நேற்று மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது வயல்வெளியில் விவசாய பம்புசெட்டுக்காக சென்று கொண்டிருந்த மின்சார கம்பி திடீரென அறுந்து மேய்ந்து கொண்டிருந்த மாடுகளின் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி 5 பசு மாடுகளும் வயலிலேயே சுருண்டு விழுந்து இறந்தன.

சோகத்தில் ஆழ்ந்த கிராமம்

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த கிராமத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து இறந்து கிடந்த பசுமாடுகளை பார்த்து வேதனை அடைந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த பசுமாடுகள் கோட்டரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ், பிரான்சிஸ், ஆரோக்கியசாமி மகன் பீட்டர், அம்புரோஸ், சவரிநாதன் மகன் பீட்டர் ஆகியோருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

ஒவ்வொரு பசுமாடும் ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ளது என்றும் அந்த மாடுகள் தற்போது பால் கொடுத்து கொண்டிருந்தது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கூடங்குளம் அருகே படகுக்கு அடியில் சிக்கி மீனவர் சாவு: மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பியபோது பரிதாபம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா வடக்கன்குளத்தை அடுத்த பழவூர் அருகே உள்ள லெவிஞ்சிபுரம் ஈத்தன்காடு பகுதியை சேர்ந்தவர் ராயப்பன். அவருடைய மகன் ராஜா (வயது 49). மீனவரான இவர் வழக்கம்போல் நேற்று காலையில் கூட்டப்புளியை சேர்ந்த 4 மீனவர்களுடன் கடலுக்கு நாட்டு படகில் மீன்பிடிக்க சென்று உள்ளார்.

கடலில் மீன்பிடித்து விட்டு மாலையில் கரைக்கு மீனவர்கள் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கரையில் படகை நிறுத்துவதற்காக இறங்கி உள்ளார். அப்போது வேகமாக அடித்த கடல் அலையினால் படகு திசைமாறி திரும்பியது.

இதில் படகுக்கு அடியில் ராஜா சிக்கி காயத்துடன் மூச்சுத்திணறி தண்ணீருக்குள் மூழ்கினார். உடனே சக மீனவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அந்த பகுதி மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad