Type Here to Get Search Results !

விபத்தில் காதலி சாவு: துக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை

விபத்தில் காதலி சாவு: துக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை
விபத்தில் காதலி இறந்ததால் துக்கத்தில் இருந்த என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம் புகளூர் பசுபதிநகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவர், என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் காசாளராக பணியாற்றினார். இந்த நிலையில், இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். சம்பவத்தன்று, அந்த பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்ற போது விபத்தில் இறந்தார். காதலி இறந்த நாளில் இருந்தே கார்த்திக் மிகுந்த மன வேதனையிலும், துக்கத்திலும் இருந்தார். இந்த நிலையில் கார்த்திக்கின் தாய்-தந்தை கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். புகளூர் பசுபதிநகரில் அவரது தாயும், அய்யம்பாளையத்தில் தந்தையும் வசித்து வருகின்றனர்.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவது பற்றி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த மாதம் 23-ந்தேதி கார்த்திக் சென்னையிலிருந்து புறப்பட்டு தனது தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் கடந்த மாதம் 28-ந்தேதி அய்யம் பாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு கார்த்திக் சென்றார். அங்கு கார்த்திக், எலி பேஸ்டை (விஷம்) தின்று அவரது தாய்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக குடும்பத்தினர் கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடந்த 4-ந்தேதி மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் விபரீதம்: தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி பெரியசெல்வம்நகரை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 59). இவர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜான்சிராணி. கடந்த 3-ந்தேதி அதிகாலையில் ஜான்சிராணி, வீட்டில் பீரோவில் இருந்த 100 பவுன் நகைகளை மர்மநபர் கொள்ளையடித்து சென்று விட்டதாக தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜான்சிராணி நகையை மறைத்து வைத்து விட்டு கொள்ளை போனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து ஜான்சிராணியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். அவரிடம் இருந்து 93 பவுன் நகையையும் மீட்டனர்.

இதனால் வின்சென்ட் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வழக்கம்போல் தூங்க சென்றனர். நேற்று காலையில் வின்சென்ட் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வின்சென்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புழல் சிறையில் மோதல் ஒருவரை ஒருவர் பிளேடால் அறுத்துக்கொண்ட கைதிகள் - மற்றொரு கைதி தற்கொலை முயற்சி
புழல் சிறையில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் ஏற்பட்ட மோதலில் கைதிகள் 2 பேர் ஒருவரை ஒருவர் பிளேடால் அறுத்துக்கொண்டனர். மற்றொரு கைதி கையில் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்காக திருச்சி, மதுரை, சேலம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மத்திய சிறையில் இருந்தும் தண்டனை கைதிகள் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் கடலூர் சிறை தண்டனை கைதிகளான முத்துசாமி (வயது 57) மற்றும் சக்திவேல் (30) ஆகிய இருவரும் புழல் சிறையில் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு முத்துசாமியை சக்திவேல் ஓரினச்சேர்க்கைக்கு வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் அங்கிருந்த பிளேடால் இருவரும் ஒருவரை ஒருவர் அறுத்துக்கொண்டனர். இதில் இருவருக்கும் உடல் முழுவதும் பிளேடால் அறுக்கப்பட்டதால் ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த சிறை போலீசார் இருவரையும் மீட்டு புழல் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தையல் போடப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (33). இவர், திருட்டு வழக்கில் மேட்டூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது இவரும் பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்காக புழல் சிறைக்கு மாற்றப்பட்டு இங்கு 18-வது பிளாக்கில் ஒரு அறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இவர் அடைக்கப்பட்டிருந்த அறை எதிரே கயிறுகட்டி நேற்று முன்தினம் மாலை துணிகளை காயப்போட்டு கொண்டிருந்தார். அப்போது சிறை காவலர், இங்கே துணிகளை காயப்போடக்கூடாது என்று கூறினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று சவுந்தரராஜன், தான் அடைக்கப்பட்டிருந்த பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்றப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், திடீரென தனது இடது கை மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக்கொண்டு அறையிலேயே படுத்துவிட்டார்.

ரத்தம் பீரிட்டு வெளியேறுவதை பார்த்த மற்ற கைதிகள், இதுபற்றி சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவரை மீட்டு புழல் சிறை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சவுந்தரராஜன் சிகிச்சை பெற்று வருகிறார். கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இரண்டு சம்பவங்களாலும் புழல் சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad