Type Here to Get Search Results !

கொரோனா தொற்றால் அரிசி ஆலை அதிபர் பலி: விழுப்புரம் பானாம்பட்டு பகுதிக்கு ‘சீல்’

கொரோனா தொற்றால் அரிசி ஆலை அதிபர் பலியானதை தொடர்ந்து அவர் வசித்து வந்த விழுப்புரம் பானாம்பட்டு பகுதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவ குழுவினர் முகாமிட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் பானாம்பட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அரிசி ஆலை அதிபர் ஒருவர் இறந்துள்ளதால் அவர் வசித்து வந்த பகுதி தடை செய்யப்பட்டதோடு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த பகுதிக்குள் வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாதவாறும், அதுபோல் அப்பகுதியை சேர்ந்த யாரும் அங்கிருந்து வெளியே வராமல் இருக்கும் வகையிலும் அங்குள்ள பிரதான சாலைகளை போலீசார், பேரிகார்டுகள் மூலம் தடுப்பு அமைத்து அப்பகுதிகளுக்கு ‘சீல்’ வைத்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியே செல்கிறார்களா? என்றும் வெளிநபர்கள் யாரும் உள்ளே வருகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசார் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


இப்பகுதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கைகளையும் அவ்வப்போது கிருமி நாசினி அல்லது சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும் என்று அறிவுறுத்தினார்.

அதோடு அந்த பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் நேற்று மருத்துவ குழுவினர் முகாமிட்டு அங்குள்ள மக்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வீடு, வீடாக சென்று அவர்களில் யார், யாருக்கெல்லாம் காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் இருக்கிறது என்று கண்காணித்து, அவர்களுக்கு உமிழ்நீர், ரத்தம் பரிசோதனை செய்து வருகின்றனர்.


நெல்லை மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

நெல்லை புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் மட்டும் 314 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 247 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் நெல்லை மாநகர பகுதியில் நேற்று முன்தினம் மட்டும் 54 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். உரிய படிவத்தில் தங்கள் முழு விவரங்களை எழுதி அதில், வாகனங்களின் ஆர்.சி. புத்தகம் நகல், இன்சூரன்ஸ் நகல் ஆகியவற்றுடன் உரிய போலீஸ் நிலையத்தில் கொடுத்து தங்கள் வாகனங்களை மீட்டுக் கொள்ள வேண்டும்.

கோர்ட்டு நடவடிக்கை தொடங்கியதும், முறைப்படி சென்று தங்கள் வாகனங்களுக்கு உரிய அபராதத்தை செலுத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் நிலையங்களில் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை பறி கொடுத்தவர்களின் கூட்டம் அலை மோதியது. உரிய படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். பின்னர் அவர்கள் தங்கள் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad