Type Here to Get Search Results !

வங்கிக்கு ‘சீல்’ வைத்த விவகாரம்: பரமத்திவேலூர் தாசில்தார் இடமாற்றம்: கலெக்டர் மெகராஜ் உத்தரவு; தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்வு எப்போது?

வங்கிக்கு ‘சீல்’ வைத்த விவகாரம் தொடர்பாக, பரமத்திவேலூர் தாசில்தாரை இடமாற்றம் செய்து கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வங்கிகளை மூட உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அரசின் உத்தரவை மீறி அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்படுவதாக வந்த தகவலின் பேரில் பரமத்திவேலூர் தாசில்தார் செல்வராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று நேற்று முன்தினம் ஊழியர்களை உள்ளே வைத்தே ‘சீல்’ வைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று பரமத்திவேலூர் தாசில்தார் செல்வராஜை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டு உள்ளார். அவர் சேந்தமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றி வந்த சுந்தரவள்ளி பரமத்திவேலூர் புதிய தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் விளைபொருட்களை இருப்பு வைக்கலாம்: கலெக்டர் ராமன் தகவல்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை இருப்பு வைக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை எந்தவித பிடித்தமும் இன்றி நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக அரசால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் சேலம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் எடப்பாடி ஆகிய 14 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 14 ஆயிரத்து 800 டன் விளைபொருட்கள் இருப்பு வைக்கும் அளவிற்கு 20 கிட்டங்கிகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 30 நாட்களுக்கு விவசாயிகளிடம் இருந்து இருப்பு வைத்துக்கொள்வதற்கு எந்தவித வாடகையும் வசூலிக்கப்படுவதில்லை என்பதோடு தற்சமயம் 3 ஆயிரம் டன் விளைபொருட்களை இருப்பு வைப்பதற்கு இடவசதி உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை பொருளட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருப்பு வைத்து கடன் பெற்றுக்கொள்ளலாம்.

மாவட்டத்தில் சேலம், ஆத்தூர், வாழப்பாடி, கெங்கவல்லி மற்றும் மேச்சேரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 250 டன் கொள்ளளவு கொண்ட 7 குளிர்பதன கிடங்குகள் உள்ளன. இங்கு விவசாயிகள் எந்தவித கட்டணமுமின்றி தங்களது காய்கறிகள் மற்றும் பழங்களை இருப்பு வைத்துக்கொண்டு பின்னர் விற்பனை செய்யலாம். தற்சமயம் ஊரடங்கு காலத்தில் 264 விவசாயிகளின் மஞ்சள், கரும்பு வெல்லம், மக்காச்சோளம், பருத்தி, தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை போன்ற 342 டன் விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் 85 டன் நிலக்கடலை, மக்காச்சோளம், வரகு, நெல் போன்ற விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று குளிர்பதன கிடங்குகளில் விவசாயிகளின் 201 டன் காய்கறி மற்றும் பழங்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் குளிர்பதன கிடங்குகளில் 200 டன் விளைபொருட்கள் இருப்பு வைப்பதற்கான இடவசதி உள்ளது. எனவே அரசு விவசாயிகளின் நலனுக்காக அறிவித்துள்ள வசதிகளை அனைத்து விவசாய பெருமக்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்வு எப்போது? - கலெக்டர் சந்தீப் நந்தூரி பதில்
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், பேட்மாநகரம், கேம்பலாபாத், செய்துங்கநல்லூர், ஆத்தூர், அய்யனாரூத்து, தூத்துக்குடி, தங்கம்மாள்புரம், பசுவந்தனை ஆகிய 9 பகுதிகளை சேர்ந்த 27 பேர் கொரோனா வைரசின் தாக்கத்துக்கு ஆளானார்கள். இந்த 9 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா? என்பதை கேட்டறிந்தனர். சளி, இருமல் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட 25 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கட்டுப்பாடுகள் தளர்வு

அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக 28 நாட்கள் கண்காணிக்கப்படும். அந்த பகுதியில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லையெனில் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அதன்படி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர் பகுதி முதன்முதலாக மார்ச் மாதம் தனிமைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பேட்மாநகரம், காயல்பட்டினம் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது.

இதில் செய்துங்கநல்லூர் பகுதியில் 28 நாட்கள் முடிவடைந்து உள்ளதால், அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. மற்ற சில பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

கலெக்டர்

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டபோது, “தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக 28 நாட்கள் புதிதாக எந்த தொற்றும் இல்லாத நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அதன்படி ஒரு மண்டலத்தில் 28 நாட்கள் முடிவடைந்து உள்ளது. 3 மண்டலங்களில் விரைவில் 28 நாட்கள் கண்காணிப்பு முடிவடைய உள்ளது. அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும். மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் உள்ளது போன்ற கட்டுப்பாடுகள் மட்டுமே அந்த பகுதிகளிலும் இருக்கும்” என்றார்.

விளைபொருட்கள் கிடங்கு கட்டண ரத்து மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு - கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

விவசாய விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்து செல்வதில் உள்ள பிரச்சினைகளை களைந்திடும் வகையில் நவீன சேமிப்பு கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கிடங்குகளில் 6 மாதங்கள் வரை விளை பொருட்களை வைத்து பாதுகாக்கலாம். அதிக விலை கிடைக்கும்போது கிடங்கில் இருந்து விளைபொருட்களை எடுத்து விவசாயிகள் விற்பனை செய்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக கிடங்கு வாடகை கட்டணத்தை முதல் 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை அடமானத்தின் பேரில் அதிகபட்சம் 50 சதவீத சந்தை மதிப்பு அல்லது ரூ.3 லட்சம் இதில் எது குறைவோ அந்த அளவுக்கு பொருளட்டுக்கடனை பெற்றிடலாம். கடனுக்கான கால அளவு 180 நாட்கள் ஆகும். இதற்கான வட்டி 5 சதவீதமாகும். கடனுக்கான வட்டி முதல் 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என்று உத்தரவிடப்பட்ட நிலையில், அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைத்திடவும், அவற்றை பாதுகாத்து தேவைப்படும் காலங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாகவும், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குளிர்பதன கிடங்குகள் இயங்கி வருகின்றன. இந்த கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைக்க விவசாயிகளிடம் இருந்து பயன்பாட்டு கட்டண தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையினை கருத்தில் கொண்டும், மேலும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், 30-ந் தேதி வரை வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், புளி, முந்திரி, வெல்லம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் சில மாவட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது, வியாபாரிகளிடம் இருந்து விற்பனை மதிப்பில் 1 சதவீதம் சந்தை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களை நியாயமான விலையில், பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய ஏதுவாக, வியாபாரிகள் செலுத்தும் 1 சதவீத சந்தை கட்டணம் 30-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. இந்த சலுகையும் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்படுகிறது.

பீடி சுற்றும் தொழிலாளர்கள் வீட்டில் இருந்து உற்பத்தி செய்ய ஏற்பாடுமுதல்-அமைச்சரிடம் நெல்லை கலெக்டர் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வு மேற்கொள்ளுதல் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஷில்பா, முதல்-அமைச்சரிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், ஏர்வாடி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஏழை, எளிய மக்களின் பிரதான தொழிலான பீடி சுற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பீடி தொழில் நிறுவனங்கள் மூலப்பொருட்களை தொழிலாளர்கள் வீடுகளுக்கு வழங்கி உற்பத்தி செய்ய வழிவகையும், ஆலோசனை வழங்கிடவும் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இதனால் நெல்லை பகுதியில் 53 ஆயிரம் பேர், மேலப்பாளையத்தில் 55 ஆயிரம் பேர், ஏர்வாடியில் 16,514 பேர், அம்பை பகுதியில் 3,604 பேர், சேரன்மாதேவி பகுதியில் 38 ஆயிரம் பேர் உள்பட 12 ஆயிரம் ஆண்கள், 2 லட்சத்து 39 ஆயிரம் பெண்கள் என மொத்தம் 2.51 லட்சம் பீடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த தொழிலில் உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் கலெக்டர் கூறினார்.

திருக்கோவிலூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அரகண்டநல்லூர் முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அருகில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான திருக்கோவிலூரிலும் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரகண்டநல்லூரில் இருந்து காய்கறி, மளிகை மற்றும் இதர சாமான்கள் வாங்க மக்கள் திருக்கோவிலூருக்கு வந்து செல்கின்றனர். அதேபோல் திருக்கோவிலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் திருக்கோவிலூருக்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் மாவட்ட எல்லையை மூடி சீல் வைக்கவேண்டும் என்றும் அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கீழையூர்

முன்னதாக கீழையூர் பகுதியை பார்வையிட்டார். அப்போது சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் உடையவர்கள் திருக்கோவிலூர் மற்றும் சந்தப்பேட்டை பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு யாரேனும் இருந்தால் அந்த நபர்களுக்கும் ரத்த பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி, தாசில்தார் சிவசங்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேச்சல்கலைச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், தனிதாசில்தார் அருங்குளவன், செயல் அலுவலர் செல்லப்பிள்ளை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad