Type Here to Get Search Results !

ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கும் திட்டம்திருவாரூரில், அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்

ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கும் திட்டம் திருவாரூரில், அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதல் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இஸ்லாமிய நாடுகளில் கூட வழங்காத நிலையில் ரமலான்் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அவருடைய வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரமலான் நோன்பிற்கான அரிசியை வழங்கி வருகிறார். தற்போது கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தலைமை செயலாளர், தமிழக ஹாஜிகளை அழைத்து நோன்பு கஞ்சிக்கு எவ்வாறு அரிசி வழங்குவது என ஆலோசித்தார்.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 2,895 பள்ளிவாசல்களுக்கு அந்த பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களை கணக்கிட்டு ஒரு நபருக்கு 150 கிராம் வீதம் 5,450 டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை இன்று(அதாவது நேற்று) தொடங்கி அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதனை ஏற்று இத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜமாத்தார்கள் மூலமாக அரசு வழங்குகின்ற அரிசியை பெற்று இஸ்லாமிய மக்கள் வீட்டிலேயே நோன்பு கஞ்சி காய்ச்சி கொள்ள வேண்டும். பள்ளிவாசல்கள் மூலமாக அனைத்து வீடுகளுக்கும் வருகிற 22-ந் தேதிக்குள் அரிசி கொடுக்கப்பட்டு விடும்.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்படுவது குறித்து சூழ்நிலையின் அடிப்படையில் முதல்-அமைச்சர் முடிவெடுப்பார். கொரோனாவை வைத்து யார் அரசியல் செய்கிறார்கள்? என்பது ஊருக்கு, உலகத்துக்கு தெரியும். மக்கள் பிரச்சினையில் அ.தி.மு.க. அரசுக்கு அரசியல் செய்ய தெரியாது. எதிர்க்கட்சிகள்தான் இதில் அரசியல் செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.80 லட்சத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.80 லட்சம் மதிப்பில், கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த நேரத்தில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அனைத்து தரப்பினருக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.80 லட்சம் செலவில் கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் தினமும் 70 பேர் வரை பரிசோதனை செய்யலாம். இந்த ஆய்வகத்தில் 2 டாக்டர்கள், 4 டெக்னீசியன்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். 6 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை பெற முடியும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,347 பேரின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் 7 பேர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆஸ்பத்திரியில் அனைத்து உபகரணங்களும் போதுமானதாக உள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும்தான் இந்த கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் செயல்பட முடியும். நமது மாவட்டத்துக்கு இந்த ஆய்வகம் வரப்பிரசாதம் ஆகும்.

மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட் கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சு தொழில், தீப்பெட்டி தொழில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தொழிற்சாலையாக இருந்தால், அவை இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலஸ்ஜெயமணி, மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார், முன் னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுக நயினார் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 29 பேர் குணமடைந்துள்ளனர் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 29 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோசணம், பொலவபாளையம் ஆகிய ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள், மளிகை பொருட்கள், காப்பீடு சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினார். அதன்பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்திற்கு தேவையான ரேபிட் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட உள்ளன. இந்த கருவிகளை பயன்படுத்தி அதிகமான பரிசோதனைகளை செய்ய முடியும்.

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மேலும் 7 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அங்கு 120 தனித்தனி படுக்கைகள் தாயாராக உள்ளன. ஆஸ்பத்திரியில் ஒரே சுவாச கருவியில் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இருந்தது. தற்போது 4 பேர் பயன்படுத்தும் வகையில் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 29 பேர் குணமடைந்து உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பேக்கரிகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயக்கி கொள்ளலாம். அதில் டீ, காபி விற்பனை செய்யக்கூடாது. விவசாய பணிகளுக்கு எந்தவித தடையும் கிடையாது. விவசாய பணிகளை மேற்கொள்பவர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியிடம் அனுமதி கடிதம் பெற்று பணிகளை தொடரலாம். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மா.பாவேசு, நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த அகல் வெல்பர் சொசைட்டி உறுப்பினர்கள் சார்பில் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்காக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.

கோவையில் தவித்த கூலித்தொழிலாளர்கள் சொந்த கிராமத்திற்கு வந்தனர் - அமைச்சர் பாஸ்கரன் நடவடிக்கை
ஊரடங்கு உத்தரவால் கோவையில் தவித்த கூலித்தொழிலாளர்கள் அமைச்சர் பாஸ்கரனின் முயற்சியால் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிவகங்கை அடுத்த தமறாக்கி, ஏ.ஆர்.உசிலம்பட்டி, மணப்பட்டி, கட்டயன்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 32 ஆண்கள், 23 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் ஆகியோர் கோவையை அடுத்த தடாகம் என்ற இடத்தில் அமைந்துள்ள 4 செங்கல் சூளைகளில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் அண்மையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அவர்கள் வேலை பார்த்த செங்கல் சூளைகள் மூடப்பட்டன. இதனால் அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும், உணவின்றியும் சிக்கி தவித்து வந்தனர். அதைதொடர்ந்து அவர்கள் அமைச்சர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்து தங்களை சொந்த ஊருக்கு அழைத்துவர உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.


அதைதொடர்ந்து அவர், கலெக்டர் ஜெயகாந்தனிடம் தகவல் கூறி, கூலித்தொழிலாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர், சிவகங்கையில் இருந்து ஒரு பஸ்சை அனுப்பி வைத்து அங்கு சிக்கி தவித்த கூலித்தொழிலாளர்களை நேற்று பத்திரமாக மீட்டு சிவகங்கைக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர்களை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர்.

தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் அனைவருக்கும் காய்கறி, 5 கிலோ அரிசி மற்றும் முக கவசம் ஆகியவற்றை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, தாசில்தார் மைலாவதி, ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அதே பஸ்சில் அவரவர் சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வரும் வியாபாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவிப்பு
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வரும் வியாபாரிகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் தங்கள் பகுதிகளிலேயே காய்கறி வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் வளாகப் பகுதிக்கு வரும் மொத்த மற்றும் சிறு வியாபாரிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மார்க்கெட் பகுதிகளில் கிருமிநாசினி கொண்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மார்க்கெட் வளாகத்துக்குள் காய்கறி மற்றும் பூக்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் வரும் வியாபாரிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல், காலை 4 மணி முதல் காலை 7.30 மணிக்குள் தங்களுடைய வாகனங்களில் வந்து காய்கறி மற்றும் பூக்களை வாங்கி செல்ல வேண்டும். கோயம்பேடு காய்கறி அங்காடி வளாகத்தில் காலை 7.30 மணிக்கு மேல் மோட்டார் சைக்கிளில் வந்து காய்கறி, பூக்கள் மற்றும் இதர பொருட்களை வாங்க வரும் நபர்களுக்கு அனுமதி இல்லை.

இதை மீறி மார்க்கெட் வளாகத்துக்குள் வருபவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படும். 3 மற்றும் 4 சக்கர சரக்கு வாகனங்களை கொண்டு காய்கறிகளை வாங்க வரும் வியாபாரிகளுக்கு இந்த நேரக்கட்டுப்பாடு இல்லை. மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அங்காடிக்கு உள்ளே செல்லும் போது கைகளை சுத்தமாக கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு கழுவ வேண்டும்.

கோயம்பேடு காய்கறி அங்காடி பகுதியில் சுமார் 10 ஆயிரம் மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

1 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு காய்கறி தொகுப்பு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
திருமங்கலம் தொகுதியில் உள்ள 1 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், மோட்டார் இயக்குபவர்கள் மற்றும் பேரையூர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளின் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை, கிருமிநாசினி ஆகியவற்றை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, கொரோனா முன் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முன் மாதிரியாக திகழ்கிறது. தூய்மை பணியாளர்களின் பணி மகத்தானது. எத்தனை வருடங்கள் வேலை செய்தாலும் தற்போதுள்ள இந்த சோதனையான கால கட்டத்தில் பணி செய்வது மிகவும் நன்றிக்குரியது. திருமங்கலம் தொகுதியில் உள்ள 1 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று காய்கறி தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்றார்.

முன்னதாக அ.தொட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்ற 5-ம் வகுப்பு மாணவன், தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக அமைச்சரிடம் வழங்கினான். அச்சிறுவனை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டினர்.

நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், தாசில்தார் சாந்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வக்கீல் திருப்பதி, ஒன்றிய செயலாளர் ராமசாமி, யூனியன் தலைவர் டாக்டர் சண்முகப்பிரியா பாவடியான், வட்டார வளர்ச்சி அலுவலர் தாமோதரன், நகர செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நெடுமாறன், அரசு வக்கீல் பாஸ்கரன், செயல் அலுவலர் வைரக்கண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். மாணிக்கம் எம்.எல்.ஏ., பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன், கூட்டுறவு இணைய மாநில தலைவர் செல்லப்பாண்டி, யூனியன் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் தனபால், ஜுலான் பானு, ஜெயமுருகன், பேரூர் செயலாளர் பாப்புரெட்டி, கூட்டுறவு சங்க தலைவர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அத்தியாவசிய தேவைகள் சார்ந்த நிறுவனங்கள் இணையதளம் மூலமாக அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம் - மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
அத்தியாவசிய தேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கான அனுமதி சீட்டை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்களை தவிர்த்து பிற நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்கள் செயல்பட ஏதுவாக அவற்றின் பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்துக்காக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை சென்னை மாநகராட்சியில் 652 நிறுவனங்களுக்கு மாநகராட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நலன் கருதி அனுமதி சீட்டுகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் வழியே பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி http://cov-id19.ch-e-n-n-a-i-c-o-r-p-o-r-at-i-on.gov.in என்ற இணையதளத்தின் வழியே சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) பதிவு சான்றிதழ், பணியாளர் அடையாள அட்டை, வாகன பதிவு சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஆகிய ஆவணங்களுடன் காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

எனவே நிறுவனங்கள் அனுமதி சீட்டினை பெற மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வருவதை தவிர்த்து இணையதளத்திலேயே விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு இணையதளம் மூலமாகவே அனுமதி சீட்டு வழங்கப்படும்.

‘கியூஆர்’ கோடு கொண்ட அனுமதி சீட்டுகளை விண்ணப்பதாரர்கள் மேற்படி இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad