Type Here to Get Search Results !

சென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 98% பேருக்கு கொரோனா- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்; பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நர்சுக்கும் கொரோனா தொற்று

சென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 98% பேருக்கு கொரோனா- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னையில் எந்த வித அறிகுறியும் இல்லாமல் 98% பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில்தான் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களை தாண்டியே உள்ளது.

நேற்று மாலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, சென்னையில் மட்டும் 768 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறும் போது, சென்னையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 98 சதவீதம் பேருக்கு எந்த வித அறிகுறியும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு கருதியே கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

பரங்கிமலை நசரத்புரத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நர்சுக்கும் கொரோனா தொற்று
பரங்கிமலை நசரத்புரத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நர்சுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

சென்னையை அடுத்த பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட நசரத்புரத்தில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்ததால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு பிறந்த 5 நாளே ஆன குழந்தைக்கும், அந்த பெண்ணின் உறவினர்கள் உள்பட அதே பகுதியை சேர்ந்த 10 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.

இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நர்சுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவரையும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த பகுதியில் வசிப்பவர்கள் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தைதான் பயன்படுத்துகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் பரவியதா? என்ற அச்சம் காரணமாக அந்த பொது கழிப் பிடத்தை கண்டோன் மெண்ட் போர்டு மூடியது. அப்பகுதி மக்களின் வசதிக்காக இ-டாய்லட் அமைக்கப்பட்டது.

தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பேரூராட்சி கண்ணன் அவென்யூ பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் முடிச்சூர் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 55 வயது பெண்ணுக்கும் நேற்று கொரோனா உறுதியானது.

இவர்களுடன் மேலும் ஒரு பெண் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இவர்களுடன் சேர்த்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆனது.

காஞ்சீபுரம் அடுத்த அங்கம்பாக்கத்தை சேர்ந்த 8 மாத கர்ப்பிணிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. உடனடியாக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதேபோல் குன்றத்தூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், அந்த பகுதியில் கருவாடு மண்டி நடத்தி வருகிறார்.

அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் இருந்ததால் குன்றத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு சென்றார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. உடனடியாக அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீட்டில் உள்ள 12 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக காஞ்சீபுரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த பெண்ணின் சகோதரி, பிரசவத்துக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது இவர், சகோதரிக்கு உடந்தையாக அங்கு தங்கி இருந்தார். மேலும் இவர்களது வீட்டில் வேளச்சேரியை சேர்ந்த 2 வாலிபர்களும் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் அவரது கருவாடு மண்டி உள்ள மார்க்கெட்டுக்கு சீல் வைக்கப்பட்டு 28 நாட்கள் அங்குள்ள கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் குன்றத்தூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று அவரது 72 வயது தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுடன் சேர்த்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. மேலும் 475 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த பெரிய எடப்பாளையம் பகுதியை சேர்ந்த 48 வயதான பெண், தினமும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி வந்து திருவள்ளூரில் விற்பனை செய்துவந்தார். கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இவருக்கும் சுகாதாரத் துறையினர் ரத்த பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது நேற்று உறுதியானது.

உடனடியாக அந்த பெண், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆனது.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் 3 பேர் அனுமதி
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் 3 பேர் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரின் ஒருவர் கோயம்பேட்டில் பணியாற்றியவர் என கூறப்படுகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலைய ரோந்து வாகன ஓட்டுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலைய ரோந்து வாகன ஓட்டுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தை சேர்ந்த காவலர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையின் ஒரு கட்டடம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. மேலும் இதே மருத்துவமனையில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த நிலையில் 8 மருத்துவர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அனைத்து கர்ப்பிணிகளுக்கும்  கொரோனா பரிசோதனை நடத்த உள்ளனர்.

செங்கல்பட்டில் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செங்கல்பட்டில் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79-அக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad