Type Here to Get Search Results !

கிராமப்பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு; கொரோனா பாதித்த பகுதியில் 634 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

கிராமப்பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கலெக்டர் கண்ணன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா தொற்று ஏற்பட்ட 7 பேரில் 6 பேர் வெளியூர்களில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வெளிமாவட்டங்களில் இருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு வருவோரால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை தடுக்க மாவட்ட எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் நேற்று முதல் விருதுநகர், ஆவியூர், எம்.ரெட்டியபட்டி, பந்தல்குடி, சொக்கநாதன்புதூர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களில் வருவோரை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இம்மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களையும் சோதனை செய்து அவர்கள் பெற்றுள்ள அனுமதி அட்டை உரிய முறையில் பெறப்பட்டதா? என உறுதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் வெம்பக்கோட்டை பகுதியில் சிலர் சென்னையில் இருந்து லாரிகளில் வந்துள்ளது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லாரிகளில் அனுமதி இல்லாமல் ஆட்களை ஏற்றி வந்தால் அந்த வாகன உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து அந்த வாகனங்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வர அனுமதி வழங்கப்படமாட்டாது.

தற்போது உள்ள நிலையில் இம்மாவட்டத்தில் நகர் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் தூய்மை பணி, கணக்கெடுப்பு பணிகள் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதில் நோய் தொற்று தடுக்கப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் தான் நோய் தொற்று ஏற்படும் நிலை தொடர்கிறது. எனவே கிராமப்பகுதியில் உள்ளாட்சி அமைப்புகள் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கிராம மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வரும் நிலை உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். எனவே கிராமங்களில் நோய் தொற்றை தவிர்க்க கிராம மக்கள் ஊரடங்கு உத்தரவை உறுதியாக கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் இந்த மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா பாதித்த பகுதியில் 634 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு - கலெக்டர் தகவல்
கொரோனா பாதித்தவர்கள் வசிக்கும் பகுதியில் 634 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உத்தரவின்படி கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 1,432 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 15 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1,191 பேருக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன. மீதம் உள்ள பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. நோய் தொற்று உள்ள பகுதிகள் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் நோய் பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிப்பு, விழிப்புணர்வு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த 4 ஆயிரத்து 777 பேர் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டனர்.

மாவட்டத்தில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 15 பேர் வசிக்கும் பகுதிகளில் 634 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதில் வழங்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்ணில் இதுவரை 469 அழைப்புகள் பல்வேறு கோரிக்கை தொடர்பாக ஏற்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், பொதுமக்கள் 144 தடை உத்தரவை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவினை மீறியதாக 2 ஆயிரத்து 637 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 203 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முக கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளி, தனித்திருத்தல் போன்றவைகளை கடைபிடித்தால் நோய் பாதிப்பில் இருந்து தாங்களும், தங்களை சுற்றி உள்ளவர்களும் தப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தூய்மை பணிபுரிவோர் நலவாரிய அடையாள அட்டை வைத்திருந்தால் நிவாரண உதவி: கலெக்டர் மெகராஜ் தகவல்
தூய்மை பணிபுரிவோர் நலவாரிய அடையாள அட்டை வைத்திருந்தால் நிவாரண உதவி பெறலாம் என்று கலெக்டர் மெகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

தூய்மை பணிபுரிவோர் நலவாரியத்தில் அடையாள அட்டை வைத்திருப்போர் நிவாரண உதவி பெற்று பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) கீழ் செயல்பட்டு வரும் தூய்மை பணிபுரிவோர் நல வாரியம் மூலமாக 2008-ம் ஆண்டில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நலவாரிய அடையாள அட்டையை வைத்திருப்போர் மட்டும் தற்போது பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்று இருந்தாலும் சம்பந்தப்பட்ட நலவாரியத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண உதவிகளை பெற்று பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே அடையாள அட்டை வைத்திருப்போர் நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளரின் dm-n-m-k-lt-a-h-d-co@ya-h-oo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அடையாள அட்டையின் விவரத்தை படம் எடுத்து அனுப்பலாம்.

கிருஷ்ணகிரியில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி ராஜாஜி நகரில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்கிறார்களா? எனவும் கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஒளிரும் கிருஷ்ணகிரி அமைப்பு சார்பில் வருவாய்த்துறை, காவல் துறை, ஊர்காவல் படை, ஊரக வளர்ச்சி துறையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு நாள்தோறும் 750 பேருக்கு மதியம் மற்றும் இரவு உணவு தயார் செய்து வழங்கும் பணிகளை பார்வையிட்டார். மேலும் கிருஷ்ணகிரி நகராட்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தில் ஒரு வேளைக்கு 500 பேருக்கு உணவு தயாரித்து வழங்கப்படும் பணிகளை பார்வையிட்டு அம்மா உணவக பணியாளர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் தெய்வநாயகி, நகராட்சி ஆணையாளர் சந்திரா, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், சுகாதார ஆய்வாளர் மோகன சுந்தரம், ஒளிரும் கிருஷ்ணகிரி அமைப்பு நிர்வாகி ஆனந்த குமார், வருவாய் ஆய்வாளர் தசரதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad