Type Here to Get Search Results !

நெல்லை மாவட்டத்தில் 20-ந் தேதி முதல் தொழிற்சாலைகள் நடத்த அனுமதி - கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் வருகிற 20-ந் தேதி முதல் சில தொழிற்சாலைகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழிற்சாலைகள் இயக்க அனுமதி வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.

பொருளாதார சரிவுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு வருகிற 20–ந் தேதி முதல் பல்வேறு விதிமுறைகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. சில தொழிற்சாலைகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஊரக தொழில் நிறுவனங்கள் நெல்லை மாநகர எல்லைக்கு வெளியே உள்ள நிறுவனங்கள், செங்கல் சூளைகள், நெடுஞ்சாலை உணவகங்கள், வாகனம் பழுது நீக்கும் கடைகள், வேளாண் கருவி விற்பனை மையங்கள், உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள்.

மேலும் தயாரிப்பு நிறுவனங்கள், மீன்பிடி தொழில், மீன் வளர்ப்பு நிறுவனங்கள், தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் (அதிகபட்சமாக 50 சதவீத பணியாளர்கள்), இணையவழி வணிக நிறுவனங்கள், கூரியர், சேலைகள், நிலக்கரி உள்ளிட்ட சுரங்கப்பணிகள், கட்டுமான பணிகள் (ஊரக பகுதியில்) கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், அரசு நடவடிக்கைகள் சார்ந்த அழைப்பு மையங்கள்.

மின் சாதனங்கள், தொழில்நுட்பம் பழுது பார்க்கும் சாதனங்கள், எந்திரங்கள் பழுது பார்க்கும் பணிகள், தச்சுப்பணிகள் உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்த முன்வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாநில அரசும் இதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அரசின் முடிவுக்கு ஏற்ப நெல்லை மாவட்ட நிர்வாகம் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் கொரோனா சமூக பரவல் இல்லை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் ஏற்படவில்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று மாலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு மூதாட்டி இறந்து உள்ளார். 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் உள்ள 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளில் 55 ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு தினமும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.

மக்களுக்கு இருமல், சளி, காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதியவர்கள், கர்ப்பிணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. நடமாடும் ஏ.டி.எம். மையமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. முதல்–அமைச்சர் உத்தரவின்படி அதிக அளவில் மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் சுமார் 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

370 மாதிரிகள் ஏற்கனவே எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்று (அதாவது நேற்று) 150 மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனால் சமூக பரவல் ஏற்படவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

ஆனாலும் தூத்துக்குடி மாவட்டம் ஹாட்ஸ்பாட்டாக மத்திய அரசு வரையறை செய்து உள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும்.

அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கான 10 வகையான பொருட்கள் அனைத்தும் நெல்லையில் இருந்து தினமும் வருகிறது. போதுமான அளவு முககவசம் மற்றும் உபகரணங்கள் இருப்பு உள்ளது. ஆனால் சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கும் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் பணிகள் முடிக்கப்பட்டு, அனுமதிக்காக காத்திருக்கிறோம். மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 200 மாதிரிகள் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒரு நோயாளிக்கு ரூ.300 மதிப்பிலான சத்தான உணவு தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வெளியில் வரும்போது முககவசம் அணிந்துதான் வர வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் 100 சதவீதம் இந்த நோயை விரட்ட முடியும். பொதுமக்கள் மொத்தமாக தேவையான பொருட்களை வாங்கி செல்ல வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் பெரும்பாலும் வழங்கப்பட்டு உள்ளன.

கொரோனா வார்டில் பணியாற்றி வரும் டாக்டர்கள், நர்சுகள் யாரும் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் விடுதிகளில்தான் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். முழுமையாக பணி முடிந்த பிறகு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 7 பேர் வேகமாக குணமடைந்து வருகின்றனர். விரைவில் அவர்கள் குணமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். தற்போது படிப்படியாக குறைந்து 792 பேர் மட்டும் கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா தொற்றை கண்டறிய விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் வசதி
கொரோனா தொற்றை கண்டறியும் மருத்துவ உபகரணம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கண்ணன் தலைமையில், கைத்தறி துணி நூல்துறை இயக்குனர் கருணாகரன், தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதைதொடர்ந்து கலெக்டர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 3869 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 3802 பேருக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நாட்களை முடித்து வெளியே வர அனுமதிக்கப்படுவர்.

17 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு மதுரையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 43 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் ராஜபாளையத்தில் 4 பேருக்கும், அருப்புக்கோட்டையில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட 4 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 26 பேரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் முழுவதுமே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக ஆய்வு நடத்தப்பட்டது. நகர் முழுவதும் 1,72,000 பேர் விசாரிக்கப்பட்டதில் 882 பேருக்கு காய்ச்சல், சளி, இருமல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ராஜபாளையம் பகுதியில் பாதிப்புள்ள 6 வார்டுகள் மட்டும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும்.

மாவட்டத்தில் வெளி மாநிலத்தில் இருந்து வந்து வேலை பார்த்த 4831 பேர் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏதேனும் தேவை இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்போர், பதுக்கல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு வந்த புகாரின் அடிப்படையில் ராஜபாளையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 4 கடைகள் பொருட்களை அதிக விலைக்கு விற்றதாக தெரிய வந்ததன் பேரில் அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பதையும் பொருட்களை பதுக்குவதையும் தவிர்த்து சேவை மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்டத்தில் 98.2 சதவீத ரேஷன்அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவிதொகை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்களுக்கும் ஓரிரு நாளில் வழங்கப்பட்டு விடும். 90 சதவீதம் பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றை கண்டறிவதற்கான மருத்துவ உபகரணம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளது. இதற்கான சில உதிரி பாகங்கள் மும்பையில் இருந்து வர வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் புதன் கிழமையில் இருந்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியிலேயே கொரோனா தொற்று சோதனை நடத்தப்படும். ரேப்பிட் கிட் என்ற உபகரணமும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கையின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் உள்ளது. இந்த மாவட்ட மக்கள் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தால் மாவட்டம் பச்சை மண்டலத்தில் இடம்பெற வாய்ப்பு ஏற்படும். அதற்கு மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்ல வாகன வசதி - மாநகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார்
கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்வதற்கான வாகன வசதியை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களை பரிசோதனை மையங்களுக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் சி.எஸ்.ஆர் நிதியில் வழங்0கப்பட்ட 25 வாகனங்களை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் 26 பரிசோதனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பரிசோதனை மையங்களுக்கு சென்று வர பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க மாநகராட்சியின் சார்பில், அவர்களை வீடுகளில் இருந்து பரிசோதனை மையங்களுக்கு அழைத்து சென்று, மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சேர்க்க 25 வாகனங்களுடன், வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ தேவைகளுக்காக இலவச வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையினை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம்.

சென்னையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் இதுவரை, சமூக இடைவெளியை பின்பற்றாத இறைச்சி கடைகள், சிறு வணிக நிறுவனங்கள் உள்பட 160 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. நேரம் கடந்து திறந்திருக்கும் கடைகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளை கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய 30 தனிப்படைகள் செயல்படுகிறது.

சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்கிறார்களா? என்பதை கண்காணிப்பது அந்தந்த கடை உரிமையாளர்கள், நிறுவனங்களின் தேசிய கடமை. மாநகராட்சியை பொருத்தவரை ஆதரவற்றோர், வடமாநிலத்தவர்களை தங்க வைக்க 95 முகாம் செயல்படுகிறது. அவர்களுக்கு மருத்துவ உதவிகளுடன் நல்ல உணவுகளும் வழங்கப்படுகிறது.

குடும்பத்துடன் தங்கியிருக்கும் 25 ஆயிரம் நபர்களுக்கு வீட்டில் இருந்து சமைத்து சாப்பிடுவதற்கான உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு 60 ஆயிரம் பேர், அவர்கள் வேலை செய்யும் அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பில் உள்ளனர். வீட்டு வாடகை கேட்டு உரிமையாளர்கள் அழுத்தம் கொடுக்கக்கூடாது. மேலும் அவசர கால பயணத்துக்கு இதுவரை 4 ஆயிரம் ‘பாஸ்’ வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் இணை கமிஷனர் மதுசுதன் ரெட்டி, துணை கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad