Type Here to Get Search Results !

எங்கள் உளவுத்துறைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்பு - பாகிஸ்தான் ராணுவம் ஒப்புதல்









இஸ்லாமாபாத்,


பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கையை விடுத்து உள்ளது. பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு தரப்பிற்கும் பயங்கரவாதத்துடன் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எங்கள் உளவுத்துறைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்ற பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக்கொண்டது.

பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. இடையே தொடர்பு உள்ளது என பாகிஸ்தான் ராணுவம் கூறிஉள்ளது, ஆனால் ஆதரவு என கூற முடியாது எனவும் குறிப்பிட்டு உள்ளது.

“ஆதரவு அளிப்பது மற்றும் தொடர்பு உள்ளது என்பதில் வேறுபாடு உள்ளது. உளவுத்துறை என்பது எல்லா தரப்புடனும் தொடர்பில் இல்லாமல் இருக்காது, தொடர்பு என்பது சாத்தியமானது,” என பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறிஉள்ளார். பயங்கரவாத இயக்கங்கள், அரசியல் கட்சியை தொடங்க முயற்சிப்பது தொடர்பாகவும் அரசு ஆய்வு செய்தது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

ஹபீஸ் சயீத் விவகாரம்

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக நுழைந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவன் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன். அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜமாத்-உத்-தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறான்.

இவ்வியக்கமும் தடைவிதிக்கப்பட்ட இயக்கமாக ஐ.நா., அமெரிக்கா அறிவித்து உள்ளது.

இந்திய தரப்பில் பல்வேறு முறை வலியுறுத்தப்பட்டும் நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான், அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த டொனால்டு டிரம்ப்பின் நடவடிக்கையினால் ஆட்டம் கண்டது. இந்தியாவில் இருந்து மேலும் நெருக்கடி எழும், அமெரிக்காவின் கோபத்திற்கு உள்ளாக வேண்டும் என்ற நிலையில் ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகளையும் பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்தது.

இந்நிலையில் ‘பனாமாகேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் பதவி இழந்தார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. அதை தொடர்ந்து காலியான நவாஸ் செரீப்பின் லாகூர் தொகுதிக்கு செப்டம்பர் 17-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) சார்பில் நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் போட்டியிட்டார்.  அவரை எதிர்த்து மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத்தின் ஆதரவாளர் யாகூப் ஷேக் போட்டியிட்டார்.

 வீட்டு சிறையில் இருக்கும் ஹபீஸ் சயீத் மில்லி முஸ்லிம் லீக் என்ற கட்சியை தொடங்கி உள்ளான். அக்கட்சி தேர்தல் கமிஷனால் இன்னும் அங்கீகரிக்கபடவில்லை. எனவே யாகூப் ஷேக் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இதற்கிடையே பயங்கரவாதி சயீத்தின் ஆதரவு வேட்பாளர் யாகூப் ஷேக்குக்கு பாகிஸ்தான் ராணுவம் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியது. 2018-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஹபீஸ் சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சியான மில்லி முஸ்லிம் லீக் கட்சிக்கு அரசு அங்கீராகம் வழங்குவதற்கு அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன் ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்து உள்ளது. ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது அரசியல் கட்சியை அவன் தொடங்கியதற்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து எதிர்ப்பு எழுந்து உள்ளது. ஏற்கனவே பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் மீதான பிடியை இறுக்கிய அமெரிக்கா இவ்விவகாரத்திலும் தன்னுடைய எதிர்ப்பை வலுவாக பதிவு செய்து உள்ளது, என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad