Type Here to Get Search Results !

வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ











திருவனந்தபுரம், 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், 2013–ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது. இருப்பினும் அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்தது. வாழ்நாள் தடையை நீக்கக்கோரி ஸ்ரீசாந்த், கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார்.

அதை விசாரித்த கேரள ஐகோர்ட்டு நீதிபதி முகமது முஸ்டாக், ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் வாரியம் விதித்த வாழ்நாள் தடையை நீக்கி கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் முன்பு அப்பீல் செய்யப்பட்டது. அப்பீலை விசாரித்த தலைமை நீதிபதி நவ்நிதி பிரசாத் சிங் தலைமையிலான டிவிசன் பெஞ்ச், ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடை தொடரும், இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகளில் எதுவும் அவர் பங்கேற்க முடியாது என்று கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஸ்ரீசாந்த் டெலிவி‌ஷனுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் வாரியம் தான் எனக்கு தடை விதித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனக்கு தடை விதிக்கவில்லை. இந்தியாவுக்கு ஆட முடியாததால் அடுத்த நாட்டுக்காக விளையாட நான் விரும்புகிறேன். எனக்கு தற்போது 34 வயது தான் ஆகிறது. என்னால் இன்னும் 6 ஆண்டுகள் விளையாட முடியும். அதுவரை நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். கேரள அணிக்காக விளையாட விரும்புகிறேன். நான் ஆடுவது என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கையில் தான் உள்ளது’ என்று தெரிவித்தார்.

ஸ்ரீசாந்தின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பிசிசிஐ, ஸ்ரீசாந்தால் வேறு எந்த நாட்டுக்காகவும் விளையாட முடியாது என்று தெரிவித்துள்ளது. பிசிசிஐயின் பொறுப்பு செயலர் அமிதாப் சவுத்ரி கூறுகையில், தடை செய்யப்பட்ட ஒரு வீரர் வேறு எந்த நாட்டுக்காகவும் விளையாட ஐசிசியின் விதிமுறைகள் இடம் அளிக்கவில்லை. சட்ட நிலைகளை பிசிசிஐ நன்கு தெரிந்து கொண்டு உள்ளது. ஸ்ரீசாந்த்  வெற்று பேச்சுக்களை பேசி வருகிறார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad