Type Here to Get Search Results !

மிஸ்டர் பீனாக மாறிய பொறியாளர்





ரோவன் அட்கின்ஸன் என்பவரை விட, அவர் இயற்றி நடித்திருந்த ‘மிஸ்டர் பீன்’ என்ற கதாபாத்திரத்தைதான் நமக்கு தெரியும்.

ஆம்..! நிஜத்திலும், கார்ட்டூனிலும் மிஸ்டர் பீனாக நடித்திருந்தது ரோவன் அட்கின்ஸன் தான். பல வேளைகளில் ரோவன் அட்கின்ஸன் என்ற தனது நிஜ பெயரை மறந்துவிட்டு, ‘மிஸ்டர் பீன்’ என்ற பெயரை பதிவு செய்த சம்பவங்களும் உண்டு.

தனித்துவமான நடிப்பாலும், நகைச்சுவையான நாடகத்தாலும் உலகையே சிரிக்க வைத்த மிஸ்டர் பீனின் சொந்த வாழ்க்கை மிகவும் வித்தி யாசமானது.
பொறியாளர் பட்டம் பெற்ற பிறகு தான் அவர் நடிப்புத் துறையிலேயே கால் பதித்திருக்கிறார். நமக்கு தெரிந்த மிஸ்டர் பீனின் தெரியாத வாழ்க்கையை தெரிந்துகொள்வோம்.



ரோவன் செபாஸ்டியன் அட்கின்ஸன், இங்கிலாந்தின் கான்செட் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். விவசாய குடும்பத்தின் இளைய மகனான ரோவனுக்கு மூன்று அண்ணன்கள். சிறு வயதிலிருந்தே மிகவும் சாதாரணமாக வளர்ந்த ரோவன், டர்ஹாம் பள்ளியில் படித்தார். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ‘டோனி ப்ளேர்’, இதே பள்ளியில் ரோவனுடைய வகுப்பில் சேர்ந்து படித்தார் என்பது கூடுதல் சிறப்பு. பள்ளிப்படிப்பை முடித்ததும் நியூகேசில் பல்கலைக் கழகத்தில் மின்னணு பொறியியல் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். பின், புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றார். இப்படி படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய ரோவன், நடிப்புத் துறையை தேர்ந் தெடுத்ததற்கு காரணம் இருக்கிறது.

ரோவனுக்கு பேச்சு குறைபாடு இருந்ததால், நண்பர்களின் கேலி-கிண்டலுக்கு உள்ளாகாமல் இருக்க, தனிமையைத் தேட ஆரம்பித்தார். அந்த சமயத்தில் தான் கல்லூரியில் இயங்கிவந்த நாடக குழுக்களில் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அங்குதான் பிரபல திரைக்கதை எழுத்தாளர் ரிச்சர்ட் கர்டிஸினுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரது பேச்சுக் குறைபாடு, ரோவனுக்கு புதுமையான உடல் மொழியை கற்றுக் கொடுத்தன.

ரோவன், சார்லி சாப்ளினை போன்றே வசனம் பேசாமல் நகைச்சுவையாக நடித்து அசத்தக்கூடியவர் என்பதால், ரிச்சர்டிற்கு பிடித்துப்போனது. அதனால் தன்னுடைய நாடகக் குழுவுடன் ரோவனை இணைத்துக்கொண்டு, பல நாடகங்களை நடத்தத் திட்டமிட்டார். அட்கின்ஸனுடைய நடிப்பு பயணம் இந்தக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இருந்து தான் தொடங்கியது.




ரிச்சர்ட் கர்டிஸுடன் இணைந்து நடிக்கத் தொடங்கிய சிறிது காலத்திலேயே, இங்கிலாந்தின் புகழ்பெற்ற நகைச்சுவை குழுவான ‘மாண்டி பைத்தான்’ உடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். மேடை நாடகங்கள் ஒருபுறம் நடந்தாலும், அட்கின்ஸனுக்குத் தொலைக்காட்சி வாய்ப்புகளும் அதிகளவில் குவியத்தொடங்கியது. இதே காலகட்டத்தில்தான். பி.பி.சி. வானொலிக்காக ரோவன் நடத்திய ‘தி அட்கின்ஸன் பீப்பிள்’ என்ற நையாண்டி நிகழ்ச்சி ஹிட் அடிக்க, பி.பி.சி. தொலைக்காட்சியிலும் கால் பதித்தார். 1980-ம் ஆண்டு பி.பி.சி. தொலைக்காட்சிக்காக ‘நாட் தி நைன் ஓ கிளாக் நியூஸ்’ என்ற நிகழ்ச்சியை நகைச்சுவை கலைஞர்களுடன் இணைந்து வழங்கினார். இந்த வாய்ப்பு ‘பிளாக்காடர்’ என்ற பிரமாண்ட நிகழ்ச்சிக்கு வழிவகுத்தது.

1983-ம் ஆண்டில் தொடங்கிய இந்நிகழ்ச்சி 1990-ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. பழைய இங்கிலாந்து கால கதாபாத்திரத்தில் நடித்த அட்கின்ஸன், உயிரோட்டமான ‘பிளாக்காடர்’ கதாபாத்திரமாகவே வாழ்ந்தார். எந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும், அதில் ஒன்றி போவது அட்கின்ஸனின் இயல்பு. அதனால் பிளாக்காடர் நிகழ்ச்சிக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தில் காமெடி மன்னனாக அசத்திய ரோவன், அதற்கு முன்பாக பிளாக்காடர் கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன்-காதல்-காமெடி என கலக்கி இருப்பார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் தான் ‘மிஸ்டர் பீன்’ கதாபாத்திரம் பிறந்தது.

அதுவரை ரிச்சர்டின் கூட்டணியில் நடித்துவந்த ரோவன், மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தையும், நாடகக் கதைகளையும் தனி ஆளாக உருவாக்கினார். அந்த வகையில் 1990-ம் ஆண்டில் மிஸ்டர் பீன் கதாபாத்திரம் பிறந்தது. வசனங்கள் இல்லாத வெறும் செய்கைகள் மட்டும் கொண்ட நிகழ்ச்சியான மிஸ்டர் பீன், அட்கின்ஸனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றது. இங்கிலாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகினாலும், அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகளிலும் ரோவன் அட்கின்ஸனுக்கு ‘மிஸ்டர் பீன்’ மூலம் ரசிகர்கள் குவிந்தனர். நாடகம், கார்ட்டூன் என பல வழிகளில் ரோவன் கலக்கினார்.

மிஸ்டர் பீன் டி.வி. தொடர்களை தொகுத்து திரைப்படமாகக் கொடுத்தனர். 1990-களில் சேட்டையை ஆரம்பித்த மிஸ்டர் பீன், 2012-ம் ஆண்டு வரை தனது செல்லக் குறும்புகளால் மக்களை ரசிக்கவைத்தார். காதல், காமெடி, ஆக்‌ஷன், பொறாமை, போட்டிகள் என எல்லா வகைகளிலும் மிஸ்டர் பீன் தொடர்கள் வெளியாகின. பில்லியன் கணக்கில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் படங்களையும் சர்வ சாதாரணமாக பின்னுக்குத் தள்ளி, மிஸ்டர் பீன் தொடர்கள் வெற்றிநடை போட்டன.

குழந்தைகளின் பொழுதுபோக்காக இருந்த கார்ட்டூனை அனைத்து தரப்பினரிடமும், கொண்டு சென்ற பெருமை மிஸ்டர் பீனையேச் சேரும். மிஸ்டர் பீன் கார்ட்டூன் தொடர்கள் ஆரம்பித்தது முதலே பெரியவர்களும், குழந்தைகளுடன் சேர்ந்து கார்ட்டூன் பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதனால் குழந்தை முதல் பெற்றோர் வரை மிஸ்டர் பீனின் ‘டை ஹார்ட்’ விசிறிகளாக மாறினர். இப்படி பல திரை களில் அசத்தி வந்த ரோவன், ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஹாலிடே, தி லையன் கிங் என ரோவனின் நடிப்பிற்கு பல ஹாலிவுட் படங்கள் சாட்சியம் பகிர் கின்றன.
2012-ம் ஆண்டு வரை மிஸ்டர் பீனாக வாழ்ந்த ரோவன், அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டார். 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், மிஸ்டர் பீனாக தோன்றிய ரோவன், அதற்கு மேல் மிஸ்டர் பீன் அவதாரம் எடுக்கவில்லை. அதுவே மிஸ்டர் பீனின் கடைசி நாடக மேடையாக அமைந்தது.

‘ஐம்பது வயதுக்குப்பின், மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தில் நடிக்க உடலளவில் தெம்பு இருப்பது அவசியமாகிறது. அதனால் நான் மிஸ்டர் பீன் பிம்பத்தை விட்டு வெளிவர விரும்புகிறேன்’ என்ற தகவலுடன் மிஸ்டர் பீனுக்கு ‘குட் பை’ சொல்லப்பட்டது.

நகைச்சுவை உலகில் புதுமையான விஷயங்களுக்கு வித்திட்ட அட்கின்ஸன், இப்போது திரையில் தோன்றாமலிருப்பது சற்று வருத்தமளிக்கக்கூடிய விஷயமே. இருப்பினும், இவருடைய மிஸ்டர் பீன் ஒன்று போதும், பல தலைமுறை குழந்தைகளை மகிழ்விப்பதற்கு..!

மிஸ்டர் பீன் சில தகவல்கள்

ரோவன் அட்கின்ஸனின் மனைவி ஒரு இந்தியர். 1980-களில் ‘பிளாக் காடர்’ நிகழ்ச்சியில் நடித்த சமயத்தில், பி.பி.சி.யின் ஒப்பனை கலைஞரான சுனேத்ரா சாஸ்திரியைக் காதலித்து 1990-ல் திருமணம் செய்துகொண்டார். ஒரு மகன், மகள் என வாழ்ந்த அட்கின்ஸன்-சாஸ்திரி தம்பதியினர், 2014-ம் ஆண்டில் பிரிந்தனர். தற்போது லூயிஸ் என்பவரை அட்கின்ஸன் காதலிப்பதாக கூறப்படுகிறது.

அட்கின்ஸனுக்கு மேலும் ஒரு விஷயம் மீது தீராக்காதல் உண்டு. அது கார்கள். கார் வகைகள் என்றால் அவ்வளவு பிரியம். மிஸ்டர் பீன் நிகழ்ச்சியில் வந்த மினி கூப்பர் முதல், அட்கின்ஸன் நடித்த பல படங்களில் இவருடைய காருக்கு கவுரவ தோற்றம் எப்போதுமே உண்டு. தன்னுடைய அப்பாவின், வயலில் ஓட்டிய டிராக்டர் மீது ஏற்பட்ட காதல், பின்னர் காரின் மீது திரும்பியதாக சில சந்தர்ப்பத்தில் அட்கின்ஸன் தெரிவித்துள்ளார். இவரிடம் பெரிய டிரக் வகையான வாகனங்களை ஓட்டுவதற்கு உரிமம் இருக்கிறது. ‘கார்’ என்ற பத்திரிகையில் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.

கென்யாவில் விடுமுறை முடித்து இங்கிலாந்து வரும்போது, அட்கின்ஸன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனி விமானத்தில் பயணித்தனர். அப்போது ஓட்டுநர் மயக்கமடையவே, வேறு வழியின்றி அட்கின்ஸன் விமான கட்டுப் பாடுகளை கையில் எடுத்துக்கொண்டு ஓட்டினார். சிறிது கழித்து ஓட்டுநர் கண் விழித்துவிடவே, பாதுகாப்பாக தரையிறங்கி வேறு விமானம் மூலம் இங்கிலாந்து சேர்ந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad