Type Here to Get Search Results !

டான்ஸ் மாஸ்டரோடு லவ்வு! ஸ்ருதி ஹரிஹரன் ஒப்புதல்




கன்னடத்தில் லூசியா (தமிழில் எனக்குள் ஒருவன்) படம் மூலம் ஓவர்நைட்டில் தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோயின் பட்டியலுக்கு வந்தவர் ஸ்ருதி ஹரி ஹரன். தாய்மொழி தமிழ் என்றாலும் பிறந்தது கேரளாவில் பாலக்காடு. வளர்ந்தது பெங்களூரு. அருமையாக பரதநாட்டியம் ஆடுவார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். முதலில் தமிழில்தான் அறிமுகமாக இருந்தார். அந்தப் படம் டேக்-ஆஃப் எடுக்காமலே ஆகிவிட மலையாளத்தில் அறிமுகமானார். தொடர்ச்சியாக கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே மூலம் தமிழுக்கும் வந்தார். நிபுணன் மூலமாக பரவலாக அறிமுகமாகி இருப்பவர், இப்போது சோலோ மூலம் நன்கு பேசப்படுகிறார். பாலாஜிசக்திவேல் இயக்கிய ரா ரா ராஜசேகர் ரிலீஸுக்காக ஆவலாக இருக்கிறார்.

பாலக்காட்டு தமிழ்ப் பொண்ணு, அல்ட்ரா மாடர்ன் பெங்களூர் கேர்ள் ஆனது எப்படி?

நான் பிறந்தது பாலக்காடு. வளர்ந்தது பெங்களூரு. அதனால் கன்னட மொழி எனது தாய்மொழி மாதிரி. பெங்களூரு என் சொந்த ஊர் மாதிரி. தமிழும், கன்னடமும், மலையாளமும் எனக்கு சரளமாகப் பேசத் தெரிவதற்குக் காரணம் எனது பேக்ரவுண்டுதான். மலையாளப் படவுலகில்தான் என் நடிப்புப் பயணத்தை தொடங்கினேன். ஆனால், லூசியா படத்தின் வெற்றி என்னைக் கன்னடத்திலேயே தங்கவைத்து விட்டது. தொடர்ந்து நல்ல பட வாய்ப்புகள் இங்குதான் கிடைத்தது. அதனால், வேறு மொழிப் படங்களில் நடிப்பது பற்றி நான் யோசிக்கவே இல்லை.

தமிழில் அறிமுகமான நெருங்கி வா முத்தமிடாதே படம் ஹிட்டாகி இருந்தால், இங்கும் கூட நீங்கள் முன்னணி இடத்தைப் பிடித்திருப்பீர்கள்தானே?

அந்தப் படத்தில் நான் மிகக் கடுமையான உழைப்பைக் கொடுத்திருந்தேன். இயக்குநரும் அவ்வளவு அருமையாக எடுத்திருந்தார். துரதிருஷ்டவசமாக அந்த படம் மக்களிடம் சரியாக ரீச் ஆகவில்லை என்பது வருத்தம்தான். அந்தப் படம் பேசப்பட்டிருந்தால், நீங்கள் யூகிப்பது போல நான் இன்நேரம் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கலாம்.

இளம் நடிகையான நீங்கள், நிபுணன் படத்தில் சீனியர் ஆக்டர் அர்ஜூனுக்கு மனைவியாக நடிக்கச் சம்மதித்தது எப்படி?

தமிழ்நாட்டுக்கு வந்தாலே இந்தக் கேள்வியைதான் நிறைய எதிர்கொள்ள வேண்டியிருக்கு. கர்நாடகாவில் இப்படி யாரும் என்னை கேட்பதில்லை. நிபுணன் படம்தான் தமிழில் எனக்கு தனி அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. எத்தனை நடிகைகள் ஒரு படத்திலும், இரண்டு படத்திலும் நடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கிறார்கள் தெரியுமா. ஹிட் கொடுத்த நடிகைகள் எத்தனை பேர் அடுத்த பட வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள் தெரியுமா. சினிமா உலகம் கடுமையான போட்டிகள் நிறைந்தது. வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நடிப்பு என்று வந்துவிட்ட பிறகு, ஏற்று நடிக்கும் கேரக்டரைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, மற்றதைப் பற்றி எல்லாம் கவலைப்படக் கூடாது. நிபுணன் படத்தில் அர்ஜூன் சார் லேட் மேரேஜ் செய்தார் என்பதாக வசனத்தின் மூலம் அழகாக கன்வே செய்திருப்பார்கள்.

நன்கு வளர்ந்த நடிகையாகி விட்ட பிறகும் கூட, குறும்படங்கள் மற்றும் ஹோம்வீடியோ படங்களில் நடிக்கிறீர்களே?

எனக்கு நல்ல கதையும், நல்ல கேரக்டரும்தான் முக்கியம். இந்த இரண்டும் மனதுக்குப் பிடித்திருக்க வேண்டும். என்னால் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும், அவ்வளவுதான். அது எந்த பார்மெட்டில் தயாராகிறது, எந்த வழியில் ரிலீசாகிறது என்பதைப் பற்றி கவலையில்லை.

துல்கர் சல்மானுடன் நடித்துள்ள சோலோ பட அனுபவம் எப்படி?

நான்கு வெவ்வேறு கதைகள் கொண்ட படத்தில், நான் ஒரு கதையில் நடித்திருக்கிறேன். துல்கர் சல்மானின் எளிமையும், உழைப்பையும் பக்கத்தில் இருந்து பார்க்க முடிந்தது. ருக்கு கேரக்டர் என் மனதுக்குப் பிடித்திருந்தது. அந்தக் கேரக்டரை தமிழில் நிறைய பார்க்கலாம். மலையாளத்தில் அபூர்வம். அதனால் அதை ரசித்து நடித்தேன்.

ரா... ரா... ராஜசேகர் படத்தைப் பற்றி?

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடிக்கும் இந்தப் படமும் தமிழில் எனக்கு மிக முக்கியமான படமாக அமையும். நிபுணன் மாதிரி இதிலும் என் கேரக்டர் பேசப்படும். இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும்.

திடீரென்று தயாரிப்பாளராகி விட்டீர்களே...?

பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்து படம் தயாரிக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. சில நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு, சின்னதாக ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதுவரை நாங்கள் இருபத்தி ஆறு குறும்படங்களைத் தயாரித்திருக்கிறோம். யாரும் சம்பளத்துக்காக வேலை செய்ய மாட்டார்கள். இதன் அடுத்தகட்டம்தான் இந்த திரைப் படம். அது ஒரு சயின்ஸ்பிக்சன் த்ரில்லர். ஒரு பெண்ணைச் சுற்றி நடக்கும் கதை. நான் ஏழு கேரக்டர்களில் நடிக்கிறேன். நண்பர்கள் எங்களை நம்பி பணத்தை முதலீடு செய்கிறார்கள். இதுவும் ஒரு முயற்சிதான்.

நடன இயக்குநருடன் காதல் என்றெல்லாம் செய்திகள் வருகிறதே...?

நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே அவரைக் காதலிக்கிறேன். ஏதோ புதிதாக வந்த மாதிரி செய்திகள் வருகின்றன. அவருக்கு அவருடைய துறையில் நிறைய பிளான்கள் இருக்கிறது. எனக்கும் சினிமாவில் நிறைய பிளான்கள் இருக்கிறது. எனவே, சரியான நேரம் அமையும்போது நாங்கள் திருமணம் செய்துகொள்வோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad